கோபி: கோபி அருகே, ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி, 102வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
ஈரோடு
மாவட்டம், கோபி தாலுகா, கலிங்கியம், புதுவள்ளியாம்பாளையம் அருகே,
காந்திவீதியை சேர்ந்தவர் பெரமாயாள், 102; இவர் கணவர், 40 ஆண்டுகளுக்கு முன்
இறந்தார். தம்பதியருக்கு ராமசாமி,70, குழந்தைசாமி, 60, ஆறுமுகம், 55, ஆகிய
மகன்கள்; கண்ணியம்மாள், 62, சுப்பாயாள், 65, பழனியம்மாள், 55, சரசாயாள்,
50, ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களில் மகன் ராமசாமி, மகள்கள் கண்ணியம்மாள்,
பழனியம்மாள் இறந்து விட்டனர். மற்றவர்கள் உள்ளூரிலும், அருகிலும்
குடும்பத்துடன் வசிக்கின்றனர். கடந்த, 1915ல் பிறந்த பெரமாயாளுக்கு, 102வது
வயது நேற்று பிறந்தது. தலா இரு மகன்கள் மற்றும் மகள்கள், ஏழு பேரன்கள்,
ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், ஒன்பது கொள்ளு பேத்திகள் ஆகியோர்,
பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றனர்.ஐந்து கிலோ கேக் வேட்டி, பெரமாயாளின்
பிறந்த நாள் விழாவை, குடும்ப விழாவாக கொண்டாடினர். வாரிசுகள், பேரன்,
பேத்திகள், சதம் கடந்த பெராமாயாளிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
இதுகுறித்து பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது: எங்களது பாட்டி பெரமாயாள் வழியில், இது ஐந்தாவது தலைமுறையாகும். 102 வயதை தொட்ட பாட்டிக்கு இதுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அவரின் வயது முதிர்வை கணக்கில் கொண்டு, இது முதல் பிறந்தநாள் விழாவாக கொண்டாடினோம். பாட்டி இதுவரை, உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை சென்றதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பார்வை, காது கேளும் திறன் என எந்த குறையுமின்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரமாயாள் கூறுகையில், 'எனக்கு, 102வது பிறந்தநாள் கொண்டாடிய, மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.