கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,
அணைக்கு வரும் நீர் முழுவதும், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, நான்கு நாட்களாக வினாடிக்கு, 650 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று முதல் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 51.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 827 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று அதிகபட்சமாக தளியில், 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஊத்தங்கரை, 12.80 மி.மீ., பெனுகொண்டாபுரம், 12.40 மி.மீ., பாரூர், 5.80 மி.மீ., ஓசூர் மற்றும் சூளகிரியில் தலா, 4 மி.மீ., தேன்கனிக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளியில் தலா, 3.40 மி.மீ., நெடுங்கல் 3.20 மி.மீ., கிருஷ்ணகிரியில், 2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரியில், நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.