நாமக்கல்:
வெளிநாட்டை சேர்ந்த முட்டை வியாபாரியிடம், மூன்று லட்சம் ரூபாய் மோசடி
செய்த, நாமக்கல் ஏற்றுமதியாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, அவரை தேடி
வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலை சேர்ந்தவர் ஷீர்அகமது, 45. இவர், நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள முட்டை ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து, முட்டைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த, 2012ல், முட்டை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான நாமக்கல்லை சேர்ந்த சையது, 43, என்பவரிடம் ஷீர் அகமது, 17 லட்சம் ரூபாய் கொடுத்து, முட்டைகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சையது, 14 லட்சம் ரூபாய்க்கு மட்டும், முட்டைகளை அனுப்பி உள்ளார். மீதி தொகையான, மூன்று லட்சம் ரூபாய்க்கு, தனது காசோலையை ஷீர் அகமதிடம், சையது கொடுத்துள்ளார். இந்நிலையில், ஷீர்அமதிடம் கொடுத்த காசோலையை பிடுங்கி வைத்துக் கொண்ட சையது, அதற்குரிய முட்டை அனுப்பாமலும், பணத்தை தராமலும் இருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஷீர்அகமது, மூன்று லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றுவதாகவும், காசோலையை கேட்டால் மிரட்டுவதாகவும், சையது மீது, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, நாமக்கல் முட்டை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சையது மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.