கிளப்பில் ஜாலி... அதிகாரிகள் கிலி:'ரூரல் போலீஸ்' சிக்கினால் காலி!

Added : நவ 06, 2017
Share
Advertisement
 கிளப்பில் ஜாலி... அதிகாரிகள் கிலி:'ரூரல் போலீஸ்' சிக்கினால் காலி!

கருமேகங்கள் கூட்டம் கூட்டமாக தவழ்ந்து செல்ல, மழை பெய்வதற்கான சூழல் வானில் தெரிந்தது. குற்றாலத்தில் இருப்பதைப்போல் 'ஜில்'லென்று காற்று வீசியது. கனமழை பெய்யக்கூடும் என்ற எண்ணத்தால், வெளியே எங்கும் செல்லாமல், சித்ராவும், மித்ராவும் வீட்டுக்குள் முடங்கினர்.
சித்ரா, 'டிவி'யில் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்தாள். மித்ரா, தனது 'ஸ்மார்ட்' போனில் 'வாட்ஸ்ஆப்' தகவல்களை பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தாள்.சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று, நலம் விசாரித்ததை சேனல்கள் காட்டிக் கொண்டிருந்தன. அதைப்பார்த்த சித்ரா, ''என்னப்பா, அரசியல் போக்கே மாறிடும் போலிருக்கே. இனி, உடன்பிறப்புகளை கையில பிடிக்க முடியாதே. ஆட்சிக்கே வந்த மாதிரி, குதிப்பாங்களே,'' என்றாள்.
''ஆமாக்கா, அரசியல் நிலவரம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கு. ரெண்டு கேசுல தீர்ப்பு வந்ததுக்கு அப்புறம், அரசியல் நெலவரம் தலைகீழா மாறிடும்,'' என்ற மித்ரா, ''ஏகப்பட்ட நிதி கொடுத்தும் எந்த வேலையையும் உருப்படியா நடக்கலையே,'' என, அங்கலாய்த்தாள்.''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பத்தி சொல்றீயா...'' என, சித்ரா கேட்க, ''ஆமாக்கா, ரூ.396 கோடி கெடைச்சிருக்கு. நம்ம அதிகாரிங்க, கஜானாவை காலியாகிடுவாங்கன்னு நெனச்சாங்களோ... என்னவோ... நிதி கையாள்றதுக்ககாக, பிரத்யேகமா 'சாப்ட்வேர்' பயன்படுத்துறாங்க. அஞ்சு காசு கூட ஆட்டைய போட முடியாது,'' என்றாள் மித்ரா.
எந்த ஆச்சரியமுமின்றி, ''அப்படியெல்லாம் சொல்லாத... நம்ம கார்ப்பரேஷன் அதிகாரிங்க, எல்லாத்திலும் கில்லாடிங்க. எப்படியும் ஓட்டைய கண்டுபிடிச்சிருவாங்க,'' என்றாள் சித்ரா.''அதுதான் எனக்குத் தெரியுமே. நேர்மையான அதிகாரியா, ஒருத்தரைக் கூட சொல்ல முடியாதே. நம்ம மாவட்டத்தைச் சேர்ந்தவரு, சென்னையில உயர்ந்த பதவியில இருக்காரு. தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி, முக்கியமான ஒரு திட்டத்தை செயல்படுத்த, மாநில அளவுல ஒரே நிறுவனத்துக்கு 'கான்ட்ராக்ட்' கொடுத்திருக்காரு. அந்த நிறுவனத்துக்கு அந்தளவுக்கு சக்தி இருக்கான்னு தெரியாம, கப்பம் வாங்கிட்டு அனுமதி கொடுத்திருக்காரு... திட்டத்தை அறிவிச்சு, ஒரு வருஷமாச்சு... சைனால இருந்து மெஷின் வரப்போகுதுன்னு சொல்றாங்க...'' என்ற மித்ராவிடம், ''பிரகாசம்னு ஒனக்கு தெரிஞ்ச அதிகாரி சென்னையில இருந்தாரே... அங்க இருக்காரா... வேற ஊருக்கு மாறிட்டாரா...'' என, கொக்கியைவீசினாள் சித்ரா.பின் அவளே தொடர்ந்தாள்... ''அவரு, அங்கதான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்காரு...
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கிற ஆலை துவக்குறதுலயும் மூக்கை நுழைக்க பார்த்தாரு... முடியலை...'' என, 'உச்' கொட்டினாள். பின், ''எந்நேரமும் 'வாட்ஸ்ஆப்'-ஐ நோண்டிக்கிட்டு இருக்கிறீயே... ஏதாச்சும் தகவல் இருக்கா...'' என மித்ராவிடம் கேட்டாள்.''டெங்கு வராம தடுக்குற வேலையில இருக்கற அதிகாரிங்க பயன்படுத்த, புதுசா ஒரு 'ஆப்ஸ்' பயன்படுத்துறாங்க. இதுல, எந்த அதிகாரி, எந்த இடத்துல இருக்காருன்னு, 'லொகேஷன்' தெரியுது.
அதனால, எல்லாரும் 'அலார்ட்'டா இருக்காங்க. இனி, சாயங்கால நேரத்துல, வார்டுக்குள்ள தெருவிளக்குகளை ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. இனிமே வீட்டிலோ, 'கிளப்'பிலோ இருந்துட்டு 'டபாய்க்க' முடியாது,'' என்றாள் மித்ரா.''ஆப்ஸ் அறிமுகப்படுத்தி, பிடிய இறுக்கிட்டாங்கன்னு சொல்லு,'' என்ற சித்ரா, ''கிளப்கள்ல கும்மாளம் போடுற அதிகாரிகளோட பட்டியல, உயரதிகாரி கேட்டாராமே...'' என, இடைமறித்தாள்.
''ஆமாக்கா... சில அதிகாரிங்க ஆபீசுக்கும் வர மாட்டேங்கிறாங்க. ஆய்வுக்கும் வர மாட்டேங்கிறாங்க. விசாரிச்சப்ப... கிளப்புல ஐக்கியமாகி இருக்கற வெசயம் கெடைச்சுச்சு. யார் யார் கிளப்புக்கு 'ஊத்தப்போறாங்கன்னு' லிஸ்ட் கேட்டுருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சதும் அதிகாரிங்க கொதிச்சிட்டாங்க. 'லிஸ்ட்' கொடுக்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க...'' என்றாள் மித்ரா.
''எந்நேரமும் வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தா பிரஷர் ஏறாதா... மனுஷனா இருந்தா, 'என்ஜாய்மென்ட்' இருக்கணும்பா...'' என, வக்காலத்து வாங்கினாள் சித்ரா.''ஜாலியா இருக்கட்டும்; எங்க வேணும்னாலும் போகட்டும். வேலையே செய்யாம சுத்துறதுதான், எரிச்சல ஏற்படுத்துதுன்னு, அந்த அதிகாரி புலம்புறாரு,'' என்றாள் மித்ரா.''ஆமா... நா ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். செக்போஸ்ட்டுல வேலை பார்க்குற போலீஸ்காரங்க, பீதியில இருக்காங்களாமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள் சித்ரா.''அவுங்களுக்கு என்ன கொறைச்சல்... கேரளாவுக்கு போற ஒரு வண்டிய கூட விட மாட்டேங்கிறாங்களே... வசூல் வேட்டை செமயா இருக்கே...'' என்ற மித்ராவிடம், ''அதுலதாம்ப்பா, மாட்டிக்கிட்டாங்க... சிட்டி லிமிட்டுக்குள்ள லாரி டிரைவர்ட்ட மாமூல் வாங்குன போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., - தலைமை காவலர், டிரைவரை, மாவட்ட எஸ்.பி., மூர்த்தி கையும் களவுமா பிடிச்சாரு. இதை, 'வாக்கி-டாக்கி'லயும் ஓபனா சொல்லிட்டாரு. மாமூல் வாங்குன மூணு பேரையும் 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்க... அதனால, நம்ம தலை எப்ப உருளுமோன்னு பயந்துக்கிட்டு இருக்காங்க...''
''சிட்டிக்குள்ள இருக்கற போலீஸ்காரங்க, எஸ்.பி.,ய திட்டித்தீர்க்குறாங்க... இவருக்கு ஏன் வேண்டாத வேலைய பார்க்குறாரு... அவரோட லிமிட்டுல, எல்லோரும் உத்தமரா இருக்காங்களான்னு கேட்குறாங்க... அதனால, செக்போஸ்ட்டுல வேலை பார்க்குவங்க எப்படியும் சிக்குவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்காங்க. சிக்கலைன்னா... லஞ்சு ஒழிப்பு துறையில போட்டுக் கொடுக்கவும் முடிவு செஞ்சிருக்காங்க...'' என்றாள் சித்ரா.
''ஓகே... ஓகே... ஓகே... சி.எம்., வந்துட்டு போனதும், ஒரு அதிகாரிய வனத்துக்கு மாத்திட்டாங்களோமே...'' என, கேட்டாள் மித்ரா.''அதுவா, மேம்பாலம் திறப்பு விழாவுக்கு சி.எம்., கோயம்புத்துார் வந்தாருல்ல... தொண்டர்களை அழைச்சிட்டு வர்றதுக்கு... கிராமத்துக்கு ஒரு பஸ் விடச்சொல்லியிருக்காங்க. இந்த பொறுப்பை, போக்குவரத்து துறையில, வாகன ஆய்வாளரா இருக்கற 'விசு'வாசமானவர் கிட்ட கொடுத்திருக்காங்க. சரியா ஏற்பாடு செய்யலையாம். சி.எம்.,கிட்ட போட்டுக் கொடுத்திட்டாங்க... அப்புறம் என்ன... கூடலுாருக்கு அனுப்பிட்டாங்க...'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்க மகளிர் குழு பெயர்ல, மாநகராட்சி கல்யாண மண்டபத்த குத்தகைக்கு எடுத்து, ஏகத்துக்கும் வருமானம் பார்க்குறாங்களாமே,'' என, கொந்தளித்தாள்.
''ஒங்களுக்குத் தெரியாத விஷயமா... ஆளுங்கட்சிக்காரங்க கை வைக்காத டிபார்ட்மென்ட் எது இருக்கு... 'மாஜி' பெண் கவுன்சிலர் ஒருத்தரு, மகளிர் குழு பெயர்ல, ராமநாதபுரத்துல இருக்கற கல்யாண மண்டபத்தை குத்தகைக்கு எடுத்திருக்காரு. ரூ.3,500 தான் வசூலிக்கணும். அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்துட்டு, நாள் வாடகை பதினைஞ்சாயிரம், காஸ், கரன்ட், தண்ணீர்ன்னு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா காசு பார்க்குறாரு. 'பில்' கொடுத்தா மாட்டிக்குவோம்னு. துண்டுச்சீட்டுல எழுதிக் கொடுக்குறாரு...'' என, புட்டு புட்டு வைத்த மித்ரா, ''ஊருக்கு போயிருந்த மலர்விழி அக்கா வந்துட்டாங்களா...'' என, சித்ராவிடம் கேட்டாள்.''அவுங்களுக்கு என்ன... மாசத்துக்கு ரெண்டு நிகழ்ச்சி நடந்தா போதும்; காசு பார்த்துருவாங்க... எங்கு வேணும்னாலும் போகலாம்,'' என்ற மித்ரா, ''வனத்துறையில இருக்கற மேடம், எல்லா பைல்களையும் வீட்டுக்கு எடுத்துட்டு போறாங்களாமே...'' என, இழுத்தாள்.
''அதுவா... அவரோடு கணவர், 'பைல்' பார்ப்பாங்க. 'டிரான்ஸ்பர்' கொடுக்கறதுல இருந்து எல்லாத்தையும் அவர் தான் பார்த்துக்குறாரு. 'டீலிங்' பேசுறதும் அவர்தானாம்,'' என்ற சித்ரா, ''பக்கத்துது தெருவுல குடியிருக்குற கலாவும், மணியும் கூட வெளியூர் போயிருந்தாங்களே... வந்துட்டாங்களா...'' என்றாள்.
''அது... சரி... துாத்துக்குடிக்கு அனுப்புனாங்களே... அந்த அதிகாரி, 'ஜாயின்' பண்ணலையாமே... '' என, மித்ரா, நகரமைப்பு விவகாரத்தை கிளறினாள்.''அதுவா... அங்க இருக்கற ஆளுங்கட்சிக்காரங்க 'பிரஷர்' கொடுத்து, அனுப்பாதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்... அதனால, வேலுாருக்கு நியமிச்சிருக்காங்க... அந்த ஊரிலும் அந்த அதிகாரி 'ஜாயின்' பண்ணலை. புது உத்தரவு வாங்கிட்டு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லுன்னு, சொல்ல வைப்பாங்களோன்னு, இங்க இருக்கற அதிகாரிங்க பயந்துக்கிட்டு இருக்காங்க... '' என்ற சித்ரா, ''இப்ப, சசி எப்படி இருக்காங்களோ...'' என, புலம்பினாள்.
''அவுங்க, ஜெயில்ல தானே இருக்காங்க...'' என, மித்ரா, அப்பாவியாய் கேட்க, ''அவுங்கள சொல்லல... ஆனா, இவுங்களும் ஜெயிலுக்கு போற அளவுக்கு தப்பு செஞ்சவங்கதான்... எப்படியோ தப்பிச்சிட்டாங்க... எங்க இருக்கான்னு தெரியாததால... துழாவிக்கிட்டு இருக்காங்க,'' என்ற மித்ரா, ''திருவண்ணாமலைக்கு போனா, கேக்கறது கெடைக்குமாமே...'' என, புதிர் போட்டாள்.
''நீ எதை கேக்குறேன்னு எனக்குத் தெரியும். அந்த அதிகாரி பெயரும், அதுதான். ஒவ்வொரு பதவிக்கும் ஒரு 'ரேட்' வச்சிருக்காரு.
பெட்டி கொடுத்தா போதும்; நாம விருப்பப்படுற பதவிக்கு அரசாணையே கொடுத்திருவாராம். இப்படித்தான், நம்மூரு மாநகராட்சி அதிகாரிங்க, ஆளுக்கொரு அரசாணைய வச்சிக்கிட்டு, பதவி சுகத்தை அனுபவிக்கிறாங்க. இதுல ஒருத்தருக்கு கூட, தகுதி இல்லைன்னு சொல்றாங்க...'' என, சித்ரா சொல்ல, ''அட... ஆண்டவா... நீதாம்ப்பா... கோயம்புத்துார காப்பத்தணும்,'' என, மித்ரா, வேண்டினாள்.
அப்போது, 'டிவி'யில் கிரிவல காட்சி ஓடிக்கொண்டிருந்தது.அதிகாரிங்க ஆபீசுக்கும் வர மாட்டேங்கிறாங்க. ஆய்வுக்கும் வர மாட்டேங்கிறாங்க. விசாரிச்சப்ப... கிளப்புல ஐக்கியமாகி இருக்கற வெசயம் கெடைச்சுச்சு. யார் யார் கிளப்புக்கு 'ஊத்தப்போறாங்கன்னு' லிஸ்ட் கேட்டுருக்காங்க.
எந்நேரமும் வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தா பிரஷர் ஏறாதா... மனுஷனா இருந்தா, 'என்ஜாய்மென்ட்' இருக்கணும்பா...

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X