100 சிலை கடத்தல் வழக்குகளில் துப்பு இல்லை: ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தகவல்| Dinamalar

100 சிலை கடத்தல் வழக்குகளில் துப்பு இல்லை: ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தகவல்

Added : நவ 07, 2017 | |
திருச்சி: ''தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட, 363 வழக்குகளில், 100 வழக்குகளில் துப்பு துலக்கப்படவில்லை,'' என, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.தமிழகத்தில் நடந்துள்ள சிலை திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், நேற்று காலை, திருச்சியில் இந்த பிரிவுக்காக அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு

திருச்சி: ''தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட, 363 வழக்குகளில், 100 வழக்குகளில் துப்பு துலக்கப்படவில்லை,'' என, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்துள்ள சிலை திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், நேற்று காலை, திருச்சியில் இந்த பிரிவுக்காக அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு வந்தார்.


அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. அவற்றில், அபூர்வமான சிலைகளும் உள்ளன. பெரும்பாலான கோவில்களில், மின் விளக்கு வசதி கூட செய்யப் படவில்லை. அங்குள்ள கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு, அபூர்வ சிலைகள் பற்றிய விபரங்கள் கூட முழுமையாக தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, 40 ஆண்டுகளில் நடந்த, 363 சிலை திருட்டு மற்றும் கடத்தல் வழக்குகள், இந்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில், 100 வழக்குகள் வரை துப்பு துலக்கப்படாமல் உள்ளன. 100க்கும் குறைவான வழக்குகள், புலன் விசாரணையில் உள்ளன. எஞ்சியுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விடிய விடிய விசாரணை : ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி விடுதியில், மரகத கல்லால் ஆன, மூன்று அங்குல சிவலிங்கம், ஒன்றரை அங்குல நந்தி சிலையை, ஏழு கோடி ரூபாய்க்கு விற்க, பேரம் பேசிய மூவர், நேற்று முன்தினம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தந்த தகவலின்படி, சிலை கடத்தல், விற்பனையில் தொடர்புடைய ஈரோடு, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த இருவரை, அன்றிரவே பிடித்தனர். அவர்களிடம், விடிய விடிய, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல், எஸ்.பி., அசோக்குமார் கூறியதாவது:சிலை கடத்தல் கும்பலை, கூண்டோடு பிடிக்க, திட்டமிட்டு செயல் பட்டோம்.ஆனால், சமூக வலைதளங்களில் செய்தி வந்ததால், தங்கள் நடவடிக்கையை நிறுத்தி, கும்பலை சேர்ந்த சிலர் தலைமறைவாகி விட்டனர். பிடிபட்ட இருவரிடம் பயனுள்ள தகவல் கிடைக்கவில்லை. அவர்களை, விசாரணைக்கு பின் அனுப்பி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X