தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், 10
நாட்களில் மட்டும், 37 ஆயிரம் ஏக்கரில், சம்பா, தாளடி பயிர் நடவு
செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா, தாளடி பயிர்கள், 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சம்பா மட்டும், 2.60 லட்சம் ஏக்கரிலும், தாளடி, 67 ஆயிரம் ஏக்கரிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தாமதம்: மேட்டூர் அணை தாமதமாக, அக்., 2ல் திறக்கப்பட்டதால், மாவட்டத்தில் சம்பா சாகுபடி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. காவிரியில் நீர்வரத்தைத் தொடர்ந்து, தண்ணீர் கிடைத்த இடங்களில், சம்பா சாகுபடியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். பருவமழை துவங்கும் முன் வரை சம்பா, தாளடியில், 1.98 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, வறட்சியின் காரணமாக, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு வட கிழக்கு பருவமழை, அக்., 30 முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தில், 30ம் தேதி முதல் நேற்று வரை சராசரியாக, 126 மி.மீ., மழை பெய்தது. மழை பெய்து வரும் நம்பிக்கையால், மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த, 10 நாட்களில் மட்டும், 37 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது என, வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம், சம்பா, தாளடியின் பரப்பளவு இப்போது, 2.35 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. இதில், சம்பா சாகுபடி மட்டும், 1.98 லட்சம் ஏக்கரிலும், தாளடியில், 37 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது.
தொய்வு: மழை தொடர்ந்து பெய்தால், அடுத்த, 10 நாட்களில் சம்பா, தாளடியில் இலக்கை எட்ட வாய்ப்பாக அமையும் எனவும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மாவட்டத்தில் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், இப்பகுதியில் பாயும் கல்லணைக் கால்வாயிலும் நீரோட்டம் குறைவாக உள்ளதால், மூன்று வட்டாரங்களிலும் சம்பா சாகுபடியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement