தஞ்சாவூர்:
தஞ்சையில், 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட
உள்ள மேம்பாலத்தின் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது, பீதியை
ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில், 2013ல், மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. 52 கோடி ரூபாய் மதிப்பில், 870 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 29ம் தேதி, முதல்வரால் திறக்கப்பட உள்ளது. மேம்பாலத்தில் போடப்பட்டுள்ள சாலைகள், வெடிப்பு விட்டு, சரியும் நிலையில் உள்ளது. அதே போல, பாலத்தின் பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 'பயன்பாட்டிற்கு வராத நிலையிலேயே பாலத்தின் நிலைமை இப்படி என்றால், கனரக வாகனங்கள், பாலத்தில் சென்றால் எத்தகைய விளைவு ஏற்படும்' என, தஞ்சை மக்கள் அச்சமடைந்துஉள்ளனர். தஞ்சை கலெக்டர், அண்ணாதுரையிடம் கேட்ட போது, ''பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. விரிசல் தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.