பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஆன்லைன் சர்வேயில் மக்கள் ஆதரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஆன்லைன் சர்வேயில் மக்கள் ஆதரவு

Updated : நவ 09, 2017 | Added : நவ 08, 2017 | கருத்துகள் (234)
பண மதிப்பிழப்பு,demonetization, பிரதமர் மோடி,Prime Minister Modi,  எகனாமிக் டைம்ஸ் சர்வே, Economic Times Survey, ஜிடிபி ,GDP,  ரகுராம் ராஜன், Raghuram Rajan,கறுப்பு பணம், Black Money, ஆன்லைன் சர்வே,Online Survey,

புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி எடுத்த, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகம் உள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நடத்திய ஆன்லைன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், வேலை இழப்பு, ஜிடிபி சரிவு, சிறு தொழில் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனே கூட பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அன்று இதனை விமர்சித்த பலரும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி உள்ளது.


மக்கள் ஆதரவு :


பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர்.

இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்.பொருளாதாரத்தில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என 26 சதவீதம் பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42 சதவீதம் பேர், சில பாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.


வேலைவாய்ப்பில் பாதிப்பா ? :


வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என 23 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது குறுகிய கால பாதிப்பே என 45 சதவீதம் பேரும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு கேள்விக்கு, 77 சதவீதம் பேர் பண மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.
ரூ.2000 மும் வாபஸ் பெறப்பட்டால்:


ஒருவேளை மோடி ரூ.2000 நோட்டையும் வாபஸ் பெற்றால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, 56 சதவீதம் பேர் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களையே பாதிக்கும் எனவும், 31 சதவீதம் பேர் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், 13 சதவீதம் பேர் நேர்மையாக தொழில் செய்பவர்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.


மோடியின் நோக்கம் என்ன? :


பண மதிப்பிழப்பு கொண்டு வந்ததன் மூலம் மோடியின் நோக்கம் என்ன என கேட்கப்பட்டதற்கு 71 சதவீதம் பேர், கறுப்பு பண புழக்கத்தை குறைப்பதற்கு என்றும், 15 சதவீதம் பேர் ஏழைகள் ஓட்டுக்களை பெறுவதற்காக என்றும், மதவாத பிரச்னைகளை திசை திருப்புவதற்காக என 14 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். மோடியின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது என இந்த கருத்துகணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X