உணவு அலர்ஜி, உஷார்!| Dinamalar

உணவு அலர்ஜி, உஷார்!

Added : நவ 09, 2017
 உணவு அலர்ஜி, உஷார்!

நம்முடைய ஆரோக்கியம் காப்பதில் உணவுக்கு நிறைய பங்கு உண்டு. அதனால்தான், சத்து
உள்ள உணவுகளைத் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதேநேரத்தில், உடலுக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டால், அவை ஒவ்வாமை நோய்களை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.சமீப காலமாக, உணவினால் ஏற்படும் அலர்ஜி நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி
அதிகரித்து வருகின்றன. காரணம், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில் உணவுத் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் நவீனத்துவம் ஏற்பட்டுஉள்ளதைக் குறிப்பிடலாம். இதற்கு அடிப்படையாக இருப்பவை, உணவில் கலக்கப்படும் பதப்படப் பொருள்களும் செயற்கை நிறங்களும் மணங்களும்தான் என்றால் மிகையில்லை.குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி இந்த நிறத்துக்கும்
மணத்துக்கும் எளிதாக மயங்கிவிடுகின்றனர். இதனால் சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம், ஜெல்லி போன்றவற்றில் ஆரம்பித்து கிரில் சிக்கன், சில்லி சிக்கன், பர்கர் எனப் பலதரப்பட்ட உணவுகளின் நிறத்தைப் பார்த்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். அந்த நிறத்தைத் தருகின்ற செயற்கை வேதிப் பொருள்கள் ஒவ்வாமைப் பொருள்களாகச் செயல்பட்டு, அவர்களுக்கு அலர்ஜி நோய்களை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜி எப்படி உண்டாகிறது : செரிமானப் பாதையில் உள்ள செல்களில் 'மாஸ்ட் செல்கள்'
உள்ளன. இவை நோய்ப் பாதுகாப்புக்கு உதவுகின்றன; உடலுக்கு ஒவ்வாதவற்றை எதிர்த்துப்
போராடும் குணமுள்ளவை. இதனால்தான், ஒவ்வாத உணவுகள் செரிமானப் பாதைக்குச் சென்ற
வுடன், இந்த செல்களிருந்து எதிர்ப் பொருள்கள் கிளம்பி ஒவ்வாத உணவுகளைச் சிதைக்கின்றன. அப்போது மாஸ்ட் செல்கள் வெடித்து 'ஹிஸ்டமின்' எனும் வேதிப்பொருள் வெளிவருகிறது. இது, ரத்தக் குழாய்களை விரியச் செய்து, அங்குள்ள நரம்புமுனைகளைத் தாக்குகிறது. அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள்
ஆரம்பிக்கின்றன.

அறிகுறிகள் : ஒவ்வாத உணவைச் சாப்பிட்டதும் குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்பு வெளிப்படும். இவை தவிர, உதடு வீங்குதல், கன்னம் சிவத்தல், கண் இமைகள், காது, தொண்டை போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படுதல். சுவாசிக்க சிரமம்
ஏற்படுவது. ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் தோன்றும். இன்னும் சிலருக்குத் தாங்க முடியாத தலைவலி உண்டாகும்.சமீபத்திய புள்ளிவிவரப்படி சுமார் 170 உணவுகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக அறியப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருக்கும்ஒவ்வோர் உணவு அலர்ஜி ஆகும். எனவே, பொதுவான பரிந்துரைகள்எல்லோருக்கும் பொருந்துவது இல்லை.என்றாலும், மற்ற உணவுகளோடு ஒப்பிடும்போது, முட்டை, பசும்பால், கெட்டித்தயிர். கடல் மீன்கள், கருவாடு, கோழி, ஆடு இவற்றின் இறைச்சிகள், தக்காளி, கத்தரிக்காய், கோதுமை, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, முந்திரி, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம். பட்டாணி, பாதாம், பயறு, சோயாபீன்ஸ், சாக்லெட்டில் உள்ள கோகோ, ரொட்டியில் உள்ள ஈஸ்ட், சர்பத். கலர் சோடா போன்றவை பலருக்கும் அலர்ஜி ஆவதாகப் புள்ளிவிவரம் உள்ளது.
உணவுப் பொருள்களுக்குக் கவர்ச்சியான நிறத்தைக் கொடுப்பதற்கும், அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்கும் 'அசோ சாயங்கள்' சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜாம், சாஸ், கெச்சப் போன்ற உணவுகளிலும், அன்னாசி, மாம்பழம், செர்ரி போன்ற செயற்கைப் பழச்சாறுகளிலும், சில மென்பானங்களிலும் டார்ட்டசின், எரித்ரோசின், கார்மோசின் முதலிய சாயங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை உடலில் ஒவ்வாமை கேடுகளை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயை உண்டாக்குவதிலும் முன்னணியில் உள்ளன.

அலர்ஜி ஆகும் பலகாரங்கள்! : லட்டு, அல்வா, ஜாங்கிரி, கேக், கேசரி போன்ற இனிப்புவகைகளிலும், பஜ்ஜி, போண்டா போன்ற காரவகைகளிலும், கோழி பிரியாணி யிலும், பல வடநாட்டு இறைச்சி வகைகளிலும், கவர்ச்சியான நிறம் கொடுப்பதற்காக காரீய ஆக்சைடு மற்றும் 'கோல்தார் சாயங்களைக்' கலந்து விடுகின்றனர். இவையும் பலருக்கு ஒத்துக்கொள்வதில்லை; உடனடியாக அலர்ஜி குணங்களைக் காட்டிவிடுகின்றன. குடலில் கட்டிகள் உருவாகவும் இவை
காரணமாகின்றன.சாக்லெட், ஐஸ்கிரீம், கேக், ரொட்டி, கஸ்டர்ட் புட்டிங்க்ஸ் போன்ற
வற்றில் செயற்கை மணம் தருவதற்காக 'வெனிலா எசன்ஸ்' சேர்க்கப்படுகிறது. பல வகை இனிப்புகளில் அழகுக்காக செயற்கை குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. இவையும் அலர்ஜி குணங்களை ஏற்படுத்தக் கூடியவையே.அசைவ உணவுகள் பலவற்றில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் 'அஜினோமேட்டா' எனும் உப்பு சேர்க்கப்படுகிறது. இதிலுள்ள 'மோனோ சோடியம் குளுடோமேட்' எனும் வேதிப்பொருள் தாங்க முடியாத தலைவலியை உண்டாக்கக் கூடியது. காலப்போக்கில் இது உயர் ரத்த அழுத்த நோயை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்தது.
குளத்து மீன்களைவிடக் கடல் மீன் உணவுகள் அலர்ஜி நோய்களை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக, கடல் இறால் மீன்களில் 'டைரமின்' எனும் வேதிப்பொருள்
இயற்கையாகவே அதிகமாக இருக்கும். இந்த மீன்களை அடிக்கடி சாப்பிட்டால் ஒற்றை தலைவலி வரும். காரணம், கடல் மீனில் உள்ள டைரமின் குடலுக்குச் சென்றதும் அது சிதைக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு என்சைம் தேவை. சிலருக்கு இந்த என்சைம் அளவு மிகக் குறைவாக இருக்கும். அப்போது அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும். எனவே, கடல் மீன் உணவுகளில் எச்சரிக்கை அவசியம்.

எப்படித் தடுப்பது : தினமும் சாப்பிடும் உணவுகளை ஒரு டைரியில் குறித்துவைத்துக் கொண்டு, எந்த நாளில் எந்த உணவுக்கு அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த உணவைத் தவிர்த்தால், அலர்ஜியிலிருந்து விடுதலை பெறலாம்.அடுத்த வழி இது: எந்த உணவுக்கு அலர்ஜி என்பதைக் கண்டுபிடிக்க ஒரு ரத்தப் பரிசோதனையும் உள்ளது. அலர்ஜி சிறப்பு
மருத்துவரிடம் கலந்தாலோசித்து, இந்தப் பரிசோதைனையை மேற்கொண்டு அலர்ஜியை அறியலாம். ரத்தத்தில் குறிப்பிட்ட உணவுக்கான ஐஜிஇ அளவு ( Allergen specific serum IgE) அதிகரித்திருக்கும். இதைத் தொடர்ந்து அலர்ஜிக்கான தோல் பரிசோதனைகள் மற்றும் பட்டைப் பரிசோதனைகள் செய்யப்படும்.

என்ன சிகிச்சை : உணவு அலர்ஜிக்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இதுவரை இல்லை. அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். ஒருவருக்கு ஒருமுறை ஒரு உணவு அலர்ஜி ஆகிவிட்டது என்றால், அந்த உணவை அவர் அடுத்தமுறை சாப்பிடக்கூடாது
என்பதுதான் இதற்கான சிகிச்சையின் பொதுவான விதி.இது இறுதியானது என்றாலும்
முக்கியமானது: உணவு அலர்ஜி உள்ளவர்களுக்கு வீட்டுச் சாப்பாடே நல்லது. அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிட்டால், அலர்ஜி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. ஒருவருக்கு அலர்ஜி ஆகும் உணவு பொருள்கள் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் சட்டி, கரண்டி, தட்டுகளில் கொஞ்சமே ஒட்டிக் கொண்டு இருந்தாலும், அவர் சாப்பிடும் அலர்ஜி இல்லாதஉணவுடன் அவை ஒட்டிக்கொண்டு வந்துவிட்டால், அப்போதும் அவருக்கு அலர்ஜி ஆகும் வாய்ப்பு அதிகமாகும். இதைத்
தவிர்க்கவே இந்த யோசனை.

டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X