சென்னை: 'நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
வைகோ, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும், அவரது மகள், மருமகன் அமெரிக்காவில் தேவ ஊழியத்தில் ஈடுபடுதாகவும் துாத்துக்குடி நாலுமாவடி மத போதகர் மோகன் சி.லாசரஸ் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இதுகுறித்து வைகோ கூறியதாவது:எனது சகோதரி கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர். மகள், மருமகன் கிறிஸ்தவ மதத்தில்தான் உள்ளனர். நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை. வாழ்வை நெறிப்படுத்தும் தேவாரம், திருவாசகம், பைபிள், குரான் படிப்பேன்.என் முன்னோர் கட்டிய சுந்தரராஜப் பெருமாள், ஈஸ்வரன் கோயில்களை இப்போதும் பராமரிக்கிறோம். கலிங்கப்பட்டி விநாயகர் கோயிலுக்கு கோபுரம் அமைத்துக் கொடுத்துள்ளோம். தாயார் இருந்தவரை பூஜை செய்து, என் நெற்றியில் திருநீறு இடுவார். இப்போது, மருமகள் பூஜை செய்கிறார்.
என்னுடைய மனைவி சர்ச்சுக்கு செல்கிறார். நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை. திருக்குறளைப் போல பைபிள், குரான் படிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.