சுத்தம் எங்கே... இங்கே இல்லை| Dinamalar

சுத்தம் எங்கே... இங்கே இல்லை

Added : நவ 11, 2017 | கருத்துகள் (3)
 சுத்தம் எங்கே... இங்கே இல்லை

!இந்த விஷயத்தை பற்றி பேசவும், படிக்கவும், ஏன், பார்க்கவும், சற்று அருவருப்பாக தான் இருக்கும். ஆனால், இது தான் மிகவும் முக்கியமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரதமராக மோடி பதவியேற்றதும், முதலில் கவனம் செலுத்தியது, இந்த, சுத்தம், சுகாதாரம் மீது தான்!'சுவச் பாரத்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர், மோடி, நாடு முழுவதும், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என, கொள்கை முழக்கம் செய்தார். அதற்காக, அவரே பல நாட்கள், துடைப்பத்தை கையில் ஏந்தி, சுகாதார கேடான பகுதிகளை சுத்தப்படுத்தினார்.அதன்பின், இந்த மூன்று ஆண்டுகளில், நாடு சுத்தமாகி விட்டதா... அறவே இல்லை!ஏனெனில், அதற்கான திட்டம், கீழ்மட்டத்தில் இருந்து துவங்கவில்லை. விளம்பரத்திற்காக புகைப்படம் எடுப்பது, பத்திரிகைகளில் அந்த படங்களை வர செய்வது என்ற அளவில் தான், அந்த உன்னத திட்டம் உள்ளது.
சுகாதாரம் மேம்பட வேண்டும் என்றால், சுகாதார பணியாளர்கள், போதுமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு, போதுமான சம்பளம் கிடைக்க வேண்டும். முக்கியமாக அவர்களுக்கு, கவுரவம் இருக்க வேண்டும்.
தாங்கள் செய்யும் தொழில், உன்னதமான தொழில் என்ற உணர்வு அவர்களுக்கும், அவர்கள், உத்தமமான தொழிலை செய்கின்றனர் என்ற எண்ணம், பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும்.
நம் வீட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைத்துக் கொண்டால், நாம் அதை சரிசெய்ய எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டோம்.
அதற்கென உள்ள, குறிப்பிட்ட சில துப்புரவு பணியாளர்களை அழைத்து வருவோம். அவர்கள் தான், முகம் சுளிக்காமல், நம் வீட்டு கழிவுகளை, கையை விட்டு அப்புறப்படுத்துவர்.'பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்...' என்றால் கூட, பிறர் இந்த பணிகளை செய்ய முன்வர மாட்டார்கள்.ஆனால், கழிவுகளை சுத்தப்படுத்தி, நம் வீட்டில், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்கும் பணியாளர்கள் பெறும் சம்பளம், மிகவும் குறைவு என்பது, எத்தனை பேருக்கு தெரியும்?
ஒவ்வொரு கிராமத்திலும், சுகாதாரத்தை பராமரிக்க, பணியாளர்கள் எத்தனை பேர் இருப்பர் தெரியுமா... ஒருவர் அல்லது இருவர் தான் இருப்பர். அவர் தான், அந்த கிராமம் முழுக்க சுற்றி வந்து, பெருக்கி, கூட்டி, சுகாதாரத்தை பேண வேண்டும்.அந்த சுகாதார பணியாளரும், 60 வயது வரை வேலை பார்ப்பார். ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவர். உடனடியாக அவருக்கு பதில், புதிதாக யாரையாவது நியமிப்பரா... மாட்டார்கள்!ஒன்று, அவரே, சம்பளம் இன்றி வேலை பார்ப்பார் அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்கள், காலாகாலத்திற்கு, அந்த கிராமத்தை பெருக்கி, கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்வர். இதற்காக, அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கிடைக்குமா... பஞ்சாயத்து தலைவர் மனது வைத்தால், கொஞ்சம் கிடைக்கும்!
மேலும், அந்த கிராமம் முழுக்க சுகாதார பணிகளை, ஒன்றிரண்டு நபர்களால் எப்படி பார்க்க முடியும் என, ஊரக அதிகாரிகள் யோசிப்பதில்லை.இன்னமும் நம் மாநிலத்தில், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அரசின் முறையான ஊதிய வரையறை வீதத்திற்குள் வரவில்லை. அவர்களுக்கு, மிக மிகக் குறைவான தொகுப்புதியம் தான் கிடைக்கிறது.கிராமங்களில் சுகாதார பணியாளர்கள், தெருக்களை சுத்தப்படுத்துகின்றனரோ இல்லையோ, கிராமத் தலைவரின் வீட்டில், எடுபிடி வேலை செய்ய வைக்கப்படுவர். இது தான், பெரும்பாலான நம் கிராமங்களின் நடைமுறை.அதிகாரிகள் அல்லது சுகாதார குழுக்கள், கிராமங்களின் சுகாதாரத்தை பார்வையிட வருகின்றன என்றால், அன்று மட்டும் முன்னேற்பாடாக, சில ஏற்பாடுகள் செய்யப்படும். 'பிளீச்சிங்' பொடி துாவி, 'எப்போதும் இப்படித் தான் இருக்கும்' என, காட்ட முயற்சிப்பர்.
இந்நிலையில், கிராமங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மாநில நிதிக்குழு மானியம், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தொகையை காட்டிலும், மிகக் குறைந்த அளவிலேயே, சமீபகாலமாக விடுவிக்கப்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. யாரும் அறிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லாத மர்மமாகவே உள்ளது. அதனால், கிராமப்புறங்களில் சுகாதாரம், கேள்விக்
குறியாக உள்ளது.

கிராமங்களில் சுகாதாரத்தை கண்காணிக்க, துாய்மை காவலர்கள் உள்ளனர். அவர்களும் தினக்கூலிகள் தான்!நுாறு நாட்கள் முடிந்து விட்டால், தொடர்ந்து பணியாற்ற முடியாது; சம்பளம் கிடைக்காது. இவர்களால், குப்பையை மட்டும் அள்ள முடியும். அருவருக்கத்தக்க கழிவுகளையும், வாய்க்கால் அடைப்புகளையும், 'செப்டிக் டேங்க்'குகளையும் சுத்தம் செய்ய முடியாது.சென்னையில் சாலை ஒன்றில், கழிவுநீர் அடைத்து கொண்ட போது, போலீஸ் இன்ஸ்பெக்டர், வீரகுமார் என்பவர், அடைப்புகளை தன் கையால் சுத்தப்படுத்தியது, உண்மையிலேயே ஆச்சரியமான செயல் தான்.உண்மையான, துாய்மையான நாடாக விளங்க வேண்டும் என்றால், அடித்தளத்தில், முழு மூச்சுடன் இறங்கி வேலை பார்க்கக்கூடிய, சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அவர்களுக்கான ஊதியம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் உயர்த்த வேண்டும்.கிராமங்களின் நிலை இவ்வாறு இருக்க, நகர்ப்புறங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்படுகிறது. 200 குடும்பங்களாவது குப்பையை போடுவர்.
வீட்டிலிருந்து குப்பையை எடுத்து வருவோர், குப்பைத் தொட்டிக்கு அருகில் வந்ததும், 'குப்பையை தொட்டியில் போடவும்' என, எழுதி இருப்பதை பார்த்தும், பார்க்காதது போல, தொட்டி அருகே கொட்டிச் செல்வர்.
இது தவறு, அருவருக்கத்தக்க செயல் என, மக்களுக்கு புரிவதில்லை. இதில், மக்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.
நிரம்பி வழிந்தாலும், ஒரு குப்பைத் தொட்டியுடன், கூடுதலாக இன்னொரு தொட்டியை யாரும் வைப்பதில்லை. குப்பை சேர்ந்ததும், வண்டியை அனுப்பி, அப்புறப்படுத்துவதும் கிடையாது.
சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், அவர்களின் குறைந்த சம்பளமும், சுகாதாரத்தை பல விதங்களில் பாதிக்கிறது என்பதை, இன்னமும் நம் அரசும், அதிகாரிகளும் உணராமல் உள்ளனர் என்பது, வேதனையாக உள்ளது.
சுகாதாரத்தை பேண, 'சுவச் பாரத்' போன்ற திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நாட்டின் சட்ட, திட்டங்களையும் மாற்ற வேண்டும்.
நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பேருந்து நிலைய கழிப்பறைகளை பார்த்தால், ஒரே மாதிரி தான் இருக்கும். உள்ளே நுழைய முடியாது; நாற்றம், ஆளை துாக்கும். தண்ணீர் வசதி, தாராளமாக இருக்கும். ஆனால், தண்ணீர் வீணாகி கொண்டிருக்கும்.கழிப்பறைகளை ஏலம் விட்டு, பணம் கிடைத்ததும், 'நமக்கென்ன...' என, பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள், கழிப்பறையின் நிலைமை பற்றியும், அதன் மோசமான நிலையால் பாதிக்கப்படும் அப்பாவி பயணியர் பற்றியும், கவலைப்படுவதே இல்லை.நாட்டின், 99 சதவீத நகரங்களின் பேருந்து நிலையங்களின் நிலைமை இது தான்!குறிப்பாக, மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான, தமுக்கம் மைதானம், நாள் ஒன்றுக்கு, 75 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுகிறது. இவ்வளவு வசூல் செய்யும் மாநகராட்சி, அதன் பராமரிப்பு பற்றி கவலைப்படுவதே இல்லை.
மைதானத்தின் உள்ளே உள்ள, கூட்ட அரங்கம், எந்தக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதோ தெரியவில்லை; அவ்வளவு மோசமாக உள்ளது. அங்குள்ள கழிப்பறைகளை பார்த்தால், 'அய்யோ... அப்பா...' என, அலறியடித்து ஓட வேண்டியிருக்கும்.சுகாதாரம் பற்றிய சிந்தனை, உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், நம் நாட்டில், போதிய அளவு இல்லை. இந்நிலை மாற வேண்டும். எந்த அளவுக்கு சுகாதாரம் பேணப்படுகிறதோ, அந்த நாடு தான் வளர்ச்சி அடைந்த நாடு. அந்த நாட்டுக்குத் தான், சுற்றுலா பயணியர் அதிகம் வருவர்.
சுகாதாரத்தை பராமரிக்கும் விஷயத்தில், உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதற்கான திட்டமிடலை உணர்வுபூர்வமாக செய்து, நிதி ஒதுக்கீட்டையும், பணியாட்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து, துரித கதியில் செயலாக்கம் செய்ய வேண்டும்.கடை வீதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், நடமாடும் கழிப்பறைகளை, போதுமான தண்ணீர் வசதியுடன் நிறுத்த வேண்டும். பல கிராமங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கும் நிலை காணப்படுகிறது.
இதை மாற்ற, போதிய கழிப்பறைகளை, வீடுகள் தோறும் கட்ட வேண்டும். அதை பயன்படுத்த, பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும்.மாதம், 40 ஆயிரம் ரூபாய் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் அதிகாரிகள் பணியாற்றும், அரசு அலுவலகங்களின் கழிப்பறைகளை பார்த்தால், அந்த அதிகாரிகள் மீதான மரியாதையே போய் விடும்.மேலும், அவர்களில் பலருக்கு, கழிப்பறையை சுத்தமாக பயன்படுத்த தெரியாது என்ற தகவலும் தெரிய வருகிறது. கழிப்பறைகளை பயன்படுத்திய பின், தண்ணீரை ஊற்றக் கூட, பலருக்கு தெரியாது.அவர்களில் சிலர் நினைத்தாலும், குழாய்களில் தண்ணீர் வராது.அலுவலகத்தின் பிற அறைகளை பராமரிக்க நிதி ஒதுக்கப்படுகிறது. கழிப்பறைகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது கிடையாது. சில இடங்களில், அந்தந்த அலுவலக பணியாளர்களே, தங்களுக்குள் பணம் வசூலித்து,
பராமரித்துக் கொள்கின்றனர்.அரசு அதிகாரிகளின் கழிப்பறைகளே அசுத்தமாக இருந்தால், பொதுமக்களுக்கான கழிப்பறைகள் எப்படி இருக்கும்... மோசமாகத் தான் இருக்கும். இதிலும் கொடுமை, 99 சதவீத அரசு அலுவலகங்களில், பொதுமக்களுக்கான கழிப்பறைகள் தனியாக கிடையாது.
வந்து போகக்கூடிய பொதுமக்கள், வேறு எங்காவது உள்ள கட்டண கழிப்பறைகளைத் தான் பயன்படுத்த வேண்டும்.எனவே, சுத்தம், சுகாதாரம் வெறும் கோஷமாக இல்லாமல், உள்ளார்ந்த அர்த்தத்துடன் இருக்க வேண்டும்.
அப்போது தான், இந்தியா உண்மையிலேயே வளர்ச்சி அடைந்த நாடாக விளங்கும். அந்த நிலையை நம்மால் அடைய முடியும். முயற்சிப்போம்; நாட்டை முன்னேற்றி காட்டுவோம்! இ - மெயில்: ranimaran1955@gmail.com -- சி.சுகுமாறன் -ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், ஓய்வுWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X