குழந்தையும், தெய்வமும் ஒன்று!

Added : நவ 14, 2017
Advertisement
குழந்தையும், தெய்வமும் ஒன்று!

குழந்தையும், தெய்வமும் ஒன்று' என்பார்கள்... ஆம்... தெய்வம் நம் குறைகளைக் கண்டறிந்து அதை நீக்கி நமக்கு சந்தோஷத்தை தருகிறது. அதே போல் தான், கொஞ்சி பேசும்
மழலையரும்... அவர் தம் மொழிகளும். நம் குறைகளை அறியாது அதை போக்கும் அருமருந்தாக அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. இன்றும் நான் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் உள்ளங்கள் நாட்டில் ஏராளம் என்றால் அது மிகையல்ல.
ஆனால் - நம்மில் இருக்கும் குழந்தை மனம் குழந்தை பருவம் போல் குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் இருக்குமா? குழந்தை மொழி, குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு, கற்றுக்
கொள்ளும் திறன் இவையனைத்தும் மறந்து விட்டதா? இல்லையெனில் மறக்கடிக்கப்பட்டு விட்டதா? என்பது கேள்விக்குறியே... மறந்து போன அந்த கற்றலைக் கொஞ்சம்
நினைவூட்டவே இந்தப் பார்வை.ஐந்து வரை உள்ளவர்கள் தான் குழந்தைகள் என்றில்லை. ஐம்பதை தாண்டியவர்களும் குழந்தைகளே. அந்த வயோதிகக் குழந்தை
களிடமும் நாம் அனுபவம் சார்ந்த கற்றல்களை நிறையவே கற்க
வேண்டியுள்ளது. நாம் நம்மை சுற்றியிருப்பவர்களிடமிருந்து
தினமும் கற்க வேண்டியுள்ளது இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்பவர்கள் கொஞ்சும் மொழி பேசும் பிஞ்சுக் குழந்தைகளே.

குழந்தை மனம் : எதிரியைக் கூட மன்னிக்கும் பண்பை குழந்தைகளிடம் இருந்து மட்டுமே நாம் கற்க முடியும். மன்னிப்பு என்பதை விட தேவையற்றதை மறக்கும் பண்பு அதனை தங்கள் எளிய செயல்களால் நமக்கு கற்றுத் தருகின்றனர். எந்த ஒரு கெட்டதையும் தேடிச் செல்ல மாட்டார்கள். விட்டு விலகவும் மாட்டார்கள்.குழந்தைகள் எந்தவொரு விஷயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியோடு தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் பெரியவர்கள் ஆனதும் அந்தப் பக்கம் மெல்ல மெல்ல அவர்களிடத்தில் குறைந்து ஒருகட்டத்தில் சமூகத்தில் உள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
பள்ளிப் படிப்பில் இருந்து நம் வாழ்வின் முடிவிற்கு செல்லும்வரை கேள்வி கேட்கவேண்டும். கேள்வி கேட்டால் தானே நல்ல பதில் கிடைக்கும் என்பதை உணர்ந்து, கேள்வி கேட்டு அதன் பதிலை தேடத் தொடங்குங்கள்.அம்மா, அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த பிஞ்சு மனம் அவர்களுக்கு என்னவென்று கூட சொல்லத்தெரியாது. ஆனால் அவர்களை சுற்றியே அக்குழந்தைகள் வலம் வந்து கொண்டிருப்பார்கள். உதாரணமாக அம்மாவிற்கு காய்ச்சல் என்றவுடன் அந்த பிஞ்சுக் குழந்தையின் கை அம்மாவின் நெற்றியில் வைத்து அன்பான ஒரு பார்வை பார்க்குமே.அதற்கு அந்த ஸ்பரிசத்திற்கு இணையான ஒரு மருந்து இவ்வுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் 'பெத்த
மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு' என்ற மொழிக்கேற்ப அந்த அக்கறையான கை தான் அவர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுகிறது. அது தான் ஏனென்று புரிவில்லை. அந்த அன்பும் அக்கறையும் நாளடைவில் நாகரீகம் என்ற போர்வையில் மூடி வைக்கப்பட்டு விட்டதோ?.நாளை நமக்கும் இந்த நிலை வரக்கூடும் என்பதை அறிந்து தங்கள் அறியாமையை விலக்க வேண்டும். அந்த கைமாறு கருதா அன்பான அக்கறையை துளிர்விடச் செய்ய வேண்டும்.

கற்றுக் கொள்ளும் திறன்: கற்றுக் கொள்வதில் குழந்தை போல் இருங்கள். ஏனெனில் குழந்தைக்கு தோல்வியும்தெரியாது. எந்தவொரு அவமானமும் அறியாது... என்ற கூற்றுப்படி குழந்தைகளுக்கு தான் அடுத்தவர் பேச்சில் அக்கறை இல்லை. பாரபட்சமும் இல்லை. நமக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதை கற்கத் தொடங்கும். யாரிடமும் எந்த நேரமும் கற்றுக் கொள்ளத் தயங்காது. அந்த கற்றலினால் எந்த விதம் பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. அந்த கற்றலினால் அனைவருக்கும் மனதிருப்தி மட்டுமே ஏற்படும்.வெற்றியோ...
தோல்வியோ குழந்தைள் தன் பங்கை முயற்சிக்க தயங்குவதில்லை. ஆம். அத்தகைய முயற்சிகளை பிறந்த உடனே தொடங்கி விடுகின்றன. தத்தித் தத்தி தழுவக் கற்றல். விழுந்து எழுந்து நடக்கக் கற்றல் என குழந்தைகளின் கற்றல் பயணம் இனிதே துவங்குகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மனிதர்கள் பல்வேறு விஷயங்களை முயன்று கூட பார்ப்பதில்லை. அப்படியே முயன்றாலும் முதல் தோல்வியிலேயே முடங்கி போய்விடுகிறார்கள். அப்படி
விட்டுவிடக்கூடாது.விடா முயற்சி என்ற ஒன்றை குழந்தைகள் பாணியில் விடாமல் தொடர வேண்டும். உளி அடி விழும் போது வலியென நினைத்தால் சிற்பம் ஆக முடியாது, என்பதை
சிந்தனையில் நிறுத்தி இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும்.

பிடிவாதம் : நினைத்ததை அடைய வேண்டும் என்கிற பிடிவாதம் இங்கு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது. ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை. தாங்கள் நினைத்ததை அடையும்வரை அவர்கள் ஓயமாட்டார்கள். குழந்தைகள் தாங்கள் எண்ணியதை நிறைவேற்ற எந்தவொரு
மூலைக்கும் செல்வர். அப்படியிருக்க, நாம் ஏன் நம் எண்ணத்தை, நம் குறிக்கோளை அடைய எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடாது. சற்று நிதானமாக இதை யோசியுங்கள். ஆனால். அவ்வாறான எண்ணம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டுமே தவிர யார் அழிவிற்கும் காரணமாக இருந்துவிடக்கூடாது. அதே போல் நம் குறிக்கோளானது நம் வளர்ச்சிக்கோ, நம் நாட்டின் வளர்ச்சிக்கோ ஊன்று கோலாய் இருக்கணுமே தவிர எவரின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்துவிடக்கூடாது.
'சிரிப்பில் உண்டு பலவகை - அதில்
சிறார்கள் சிரிப்போ தனிச் சுவை'
கொஞ்சும் மொழி பேசும் மழலையரின் பேச்சும்,
காரணம் அறியாச் சிரிப்பும் கதைகள் ஆயிரம் சொல்லும்.
குழந்தைகள் பேசுவதின்
அர்த்தமோ, சிரிப்பின்
அர்த்தமோ யாருக்கும் புரியாது. ஆனால் முழுமையடையாத அந்த பேச்சும், ஓட்டைப் பல் தெரியும் சிரிப்பும் நம் எல்லா துன்பத்தையும் மறக்கடிக்கும் வலிநிவாரணி என்பதில் ஆச்சரியமில்லை. ஆறுதலான அந்த சிரிப்பின் துணையோடு ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

பங்கீட்டுப் பண்பு : குழந்தைகள் தனக்கு எது கொடுத்தாலும் அதை தன் சுற்றத்தினரோடோ அல்லது நாய், காகத்தோடோ பங்கிட்டு உண்ணும். ஆனால் வளர வளர பெரியோர் களின் வழிகாட்டுதலினால் தன் வீடு, தன் மக்கள், தன் நலம் என தன்னலமாகி விடுகின்றனர். பள்ளிப் பருவத்தில் மதிய உணவு கொடுத்து விடும் தாய்மார்கள் நீ மட்டும் சாப்பிடு. யாருக்கும் கொடுத்து
விடாதே, என சொல்லாமல்இருப்பது நல்லது. பங்கு போட்டு உண்ணக் கற்றுக் கொடுக்க
வேண்டும்.பால் மணம் மாறாக் குழந்தைகளிடமிருந்து நாம் இன்னும் எவ்வளவோ நல்ல பண்புகளை கற்க வேண்டியுள்ளது. வசீகரிக்கும்திறன் ஒன்றுமை பேணுதல், உதவும் மனப்பான்மை, எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் தன்மை என ஏராளம் உள்ளது. அதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியம். அதற்கு நாமும் மனதாலும், தெளிந்த
செய்கையானாலும் வளர்ந்த குழந்தைகளாக மாற வேண்டும்.இவன் என்னை விட சிறியவன். இவனிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது. இவனிடம் போய் அனுபவம் வாய்ந்த நான் கற்றுக் கொள்வதா? என ஏளனமாக எண்ணாமல் 'யானைக்கும் அடி சறுக்கும்', 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' போன்ற பொன்மொழிகளை மனதில் நிறுத்தி நம் கற்றலை தொடங்க வேண்டும்.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். தலைவர்கள் ஆன பிறகு கற்றுக் கொள்வதை விட இப்போதே கற்க தொடங்கிவிடுவோம். குழந்தைகளிடமிருந்து நாம் கற்கவும், கற்றுக் கொள்ளவும் வயது தடையில்லை.

ரெ. கயல்விழி
ஆசிரியை, டி.எம்.எச்.என்.யு., மெட்ரிக் பள்ளி
முத்துதேவன்பட்டி
90925 75184

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X