சகிப்புத்தன்மையே மானுடத்தின் மேன்மை: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்| Dinamalar

சகிப்புத்தன்மையே மானுடத்தின் மேன்மை: இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

Updated : நவ 16, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சகிப்புத்தன்மையே மானுடத்தின் மேன்மை:  இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

இன்றைய நம் தேவைகளைப்பட்டியலிட்டால் அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். உண்மையில் நமக்கு உடனடித் தேவை சகிப்புத்தன்மை. இன்றைய பல்வேறு சிக்கல்களுக்கு அது இல்லாததே காரணம்.

நம்மைப் பொறுத்தவரை சகிப்புத் தன்மை என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டிருக்கிறோம்? மனைவி தரும் சுவையில்லாத உணவை மறுப்பேதும் தெரிவிக்காமல் சாப்பிடுவதையும், மின்சாரம்இல்லாமல் இரவுகளில் கொசுக்கடியில் துாங்குவதையும், அத்தியாவசியபொருட்கள் விலை உயர்வை மவுனமாக ஏற்றுக்கொள்வதையும், குடிநீர்வரி செலுத்தியும் அடிகுழாயில் தண்ணீர் வராததையும், குண்டும் குழியுமான ரோடுகளில் எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் பயணிப்பதையும், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்கள் விடும் புகையினைக் கண்டும் காணாமல் கடப்பதையும், தனியார்கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணத்தையும், பேருந்துக்குள் மழைக்காலங்களில் குடைபிடிக்கும்இம்சையையும்... இப்படி நாம் சகித்துக் கொள்ளும் பல விஷயங்களையே சகிப்புத்தன்மை எனக் கருதுகிறோம். ஆனால், சகிப்புத்தன்மை என்பது அதையும் தாண்டியது.


சகிப்புத்தன்மை என்றால்?

பல்வேறு ஜாதி, மதம், இனம், கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதோடு அதனைப் போற்றுவதும்தான் சகிப்புத்தன்மை. நான் நானாக இருப்பதும், நீ, நீயாக இருப்பதும், அதேநேரத்தில் ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதுமே சகிப்புத்தன்மையின் அடையாளம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதாகும். "ஒற்றைப் பண்பை வலியுறுத்துவதுவன்முறை" என்பது நோபல் பரிசு பெற்ற அமிர்தியா சென்னின் கருத்து. சகிப்புத்தன்மை என்பது பலவீனத்தின் அறிகுறியல்ல. பலத்தின் அடையாளம்.

சகிப்பின்மையால் மொழி, மத மற்றும் இன சிறுபான்மையினர், இடம் பெயருவோர், அகதிகள், வெளிநாட்டுக் குடியேறிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பாதித்து வருவதைக் காண்கிறோம். சகிப்பின்மை அமைதிக்கும், மக்களாட்சிக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன் சமூக மேம்பாட்டுக்கும் தடையாக உள்ளது. அது,தேசத்தின் வளர்ச்சியை முடக்கு கிறது. மனித இனத்தின் மனப்போக்கைக் குறுகலாக்கிவிடுகிறது.

ஒவ்வொருவரும் ஒருவரிலிருந்து மற்றவர்கள் மாறுபட்டவர்கள்; சகிப்புத்தன்மை என்பது மனித உரிமைகள் குறித்தும், மற்றவர்களின்அடிப்படை உரிமைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது. சகிப்புத் தன்மை என்பது ஒரு தார்மீகக் கடமை. உலக மக்கள் கூட்டாக வாழ்வதை உறுதி செய்கிறது. இது ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கும் சம வாய்ப்பினை வலியுறுக்கிறது. மக்களனைவரையும் ஒன்றிணைக்க சகிப்புத் தன்மையைவிட சிறந்த வழி ஏதுமில்லை. மக்கள் சந்தோஷமாக வாழவும், மற்றவர்களை வாழ விடவும் சகிப்புத்தன்மை அவசியம்.

சகிப்புத்தன்மையற்றவர்கள் எவரையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. இது பண்டைகாலம் முதல் இன்றுவரையிலான பிரச்னை. இது, வெவ்வேறு இன, மத, மொழி பேசும் மக்களிடையே மோதலை உருவாக்குகிறது. மேலும் தேசங்கள் இடையேயான போருக்கும் மோதலுக்கும் காரணமாக அமைகிறது.மத்திய கிழக்கு நாடுகளில் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போர், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்இடையேயான சிலுவைப் போர், மதத்தின் உட்பிரிவுகளுக்கு இடையே நடக்கும் மோதல், மியான்மரின் தற்போதைய பிரச்னை, இந்தியாவில் நடக்கும் மோதல் போன்றவை மதங்களுக்கிடையேயான சகிப்பின்மைக்கு உதாரணம்.


தமிழர்களின் சகிப்பு தன்மை


அமெரிக்காவின் பூர்வகுடிகள் கொன்று குவிக்கப்பட்டதும், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதும், கருப்பர்களை வெள்ளையர்கள் அடக்கியாண்டதும், இலங்கையில் சிங்களவர் தமிழர்களை துவம்சம் செய்ததும் இன அடிப்படையிலான சகிப்பின்மைக்கு உதாரணம்.

மொழி அடிப்படையிலான சகிப்பின்மைக்கு இந்தியாவில் சில மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். மொழி அடிப்படையில் தமிழர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். தமிழக முதல்வர்கள் பட்டியலைப் பார்த்தாலேயே அது விளங்கக்கூடும். "பொறுத்தார் பூமி ஆள்வார்..""அகழ்வாரைத் தாங்கும் நிலம்.." போன்ற வார்த்தைகளை நம்முள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பதியம் போட்டு வருபவர்கள் நம் முன்னோர்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவரது அடையாளத்தினை வெளிப்படுத்திட உரிமையுண்டு. அதே நேரத்தில்,அச்சத்தின் காரணமாகவோ இயலாமையின் காரணமாகவோபேசாமல் இருக்கிறோம் என்றால் அது சகிப்புத் தன்மையல்ல.அடிமைத்தனம். எங்கு சகிப்புத்தன்மை இல்லையோ அங்கு ஜனநாயகம் வளராது. இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் சகிப்பின்மையே காரணம்.


இந்தியாவில் சகிப்புத்தன்மை


"இந்தியாவில் இன்றைக்கு சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. பன்முகத்தன்மையைத் தொலைத்துவிட்டோம்" என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு சம்பவங்களும் இதற்கு சாட்சியமாக நடந்திருக்கின்றன. சகிப்புத்தன்மை என்ற அபூர்வமான விஷயம் நம்மிடம் இருப்பதால்தான், நமது கலாசாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது மதிப்புமிக்க கொள்கைகளால்தான் உலக அளவில் நமக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருக்கிறோம். அதனைத் தொலைத்துவிடுவோமோ என்ற கவலை எழுகிறது.

புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதியும் கடமையும் உண்டு.சகிப்பின்மையால் ஏற்பட்ட பல ஆண்டுகால வெறுப்பை போக்குவதற்காக காந்திஜி அளவிற்கு இந்திய வரலாற்றில் வேறு எவரும் முயன்றதாக தெரியவில்லை. வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல. அதை காந்திஜி செய்தார்.


என்ன செய்யலாம்

வன்செயல், பாரபட்சம் காட்டுதல்,அச்சத்தை உருவாக்குதல், ஒதுக்கிவைத்தல் போன்ற தன்மைகளைத் தவிர்த்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்படும் எந்த வொரு அரசாங்கமும் சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டியது நெறிமுறை. சகிப்புத்தன்மையற்றவிதத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருவதைத் தவிர்க்கவேண்டும்.மக்களிடையே சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கவும்,
வெவ்வேறு சமூகங்களின் மென்மையான கலாசார உணர்வுகளை புரிந்து கொள்ளவும்
ஊடகங்கள் நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும்.

சகிப்புத் தன்மையை ஊக்குவிக்க கல்வியே சிறந்த வழி. சகிப்புதன்மையையும், ஒத்திசைவையும் மேம்படுத்தும் கல்வியானது, சகிப்பின்மையால் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு முடிவுகட்டிவிடும். மாணவர்களுக்கு பள்ளியில் சகிப்புத் தன்மையுடனான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதுவே அவர்களை வெவ்வேறு சமூகங்களின் கலாசார வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதிக்கக் கற்றுக் கொடுக்கும்.

சகிப்புத்தன்மை பற்றிய விவாதங்கள் பல்வேறு தரப்பட்ட சமுதாய மக்களிடையே தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.நமது பாரம்பரியமிக்க கொள்கைகள், முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள், கடமைகள் ஆகியவற்றை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது சகிப்புத்தன்மையை வளர்க்கும். சகிப்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் கொள்கைகள் வலுப்படுத்த வேண்டும்.

சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவரது மனதிலும் இருந்து எழும் வாழ்வியல் நெறி. சகிப்புத்தன்மையை மறந்த நாடுகள் மண்ணாசையால் ஆயுதம் ஏந்தி அமைதியைத் தொலைத்திருக்கின்றன. மத, இன, ஜாதி, கலாசாரரீதியான சகிப்பின்மையானது, உயிர்களைப் பலிவாங்குவதும், அகதிகளை உருவாக்குவதுமாக இருக்கிறது. அவல ஓலம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒதுக்கலும், ஒடுக்குதலும் சகிப்பின்மையின் அடையாளம். அதனை ஒதுக்குவோம்.

வாழ்க்கையின் உயர்ந்த அடிப்படையுணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று, சகிப்புத்தன்மையுடன் வாழ முடிவெடுப்போம். எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில், சகிப்புதன்மையே மானுடத்தின் மேன்மை.
ப. திருமலை, பத்திரிகையாளர்
மதுரை. 84281 15522

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-நவ-201703:36:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "ஒற்றைப் பண்பை வலியுறுத்துவது வன்முறை" என்பது நோபல் பரிசு பெற்ற அமிர்தியா சென்னின் கருத்து.. ஆனால் சொன்னதை பற்றி கவலைப்படாமல் அமிர்தியா சென் மேல் சேற்றை வாரி இறைப்பது நம்ம பாலிசின்னு ஒரு குரூப் அலையுது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-நவ-201703:33:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பார்க்கலாம். இதிலே எவன் வந்து எப்படி விஷம் கலக்குறான்னு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X