ஸ்ரீ வில்லிபுத்தூரின் பெருமை பென்னிங்டன் நூலகம்| Dinamalar

ஸ்ரீ வில்லிபுத்தூரின் பெருமை பென்னிங்டன் நூலகம்

Updated : நவ 17, 2017 | Added : நவ 17, 2017
Advertisementஸ்ரீ வில்லிபுத்துாரின் பெருமை பென்னிங்டன் நுாலகம்


ஆண்டாள் கோவில் கொண்டு குடியிருக்கும் தொன்மையான நகரமான ஸ்ரீவில்லிபுத்துாரின் பல பெருமைகளில் 142 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நுாலகமும் ஒன்று.

1875 ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த பென்னிங்டன் தமது ஆளுகைக்கு உள்பட்டு இருந்த ஸ்ரீவில்லிபுத்துார் வருகை தரும்போது மக்கள் பொழுது போக்குவதற்கு ஒரு நுாலகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று என்ணினார்.அதன்படி 1875 ம்ஆண்டு ஏற்ப்படுத்தப்பட்டதுதான் பென்னிங்டன் பொது நுாலகம்.

மாவட்ட ஆட்சியாளரை தலைவராகவும் ஊரில் உள்ள தரும சிந்தனை கொண்டவர்களையும் நுாலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப்பக்குவம் கொண்டவர்களையும் செயலர் தலைவர் உறுப்பினராகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருவதுதான் இந்த நுாலகம்.

இந்த நுாலகத்திற்கு புதிய நுால்கள் வாங்குவது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது நுாலகத்தை பராமரிப்பது உள்ளீட்ட செலவுகளுக்கு யாரிடமும் போய் நிற்கக்கூடாது என்பதற்காக 142 கடைகள் கட்டி அதன் வாடகை வருமானத்தில் நுாலகம் நடந்திடவும் பென்னிங்டன் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

1344 சதுர அடியில் தரைத்தளம் முதல் தளத்தைக் கொண்ட இந்த நுாலகத்தில் ஆண்களுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, சிறுவர்களுக்கு என்று தனித்தனியாக இடங்கள் உள்ளன.எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக இந்த நுாலகத்திற்கு பெண்கள் பெருமளவில் வருவதும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை படிப்பதையும் காணமுடியும்.அதே போல சிறுவர்கள் பகுதியில் அவர்கள் கைக்கு எட்டும் உயரத்திற்கு புத்தக அலமாரி செய்யப்பட்டு புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு தலைப்புகளில் தமிழில் 35,936 புத்தகங்களும்,ஆங்கிலத்தில் 30,988 புத்தகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.பழைய மிகப்பழைய புத்தகங்களும் அரசு ஆவணங்களும், அபூர்வமான பொக்கிஷம் போன்ற புத்தகங்களும் கூட இங்கு உள்ளது.

நவீன யுகத்திற்கு ஏற்றாற் போல மாணவர்களுக்கு போட்டித்தேர்வு புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.இங்கு இந்த புத்தகங்களை படித்து வேலை வாய்ப்பு பெற்றோர் ஏாரளம், அவர்கள் தங்கள் நன்றியை இங்குள்ள குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர்.

முற்றிலும் இலவசமாக இயங்கும் இந்த நுாலகத்தில் உறுப்பினராகி வீட்டிற்கே புத்தகங்கள் எடுத்துச் சென்றும் படிக்கலாம், அதற்கு மட்டும் உறுப்பினர் கட்டணம் உண்டு.செவ்வாய் கிழமை வாரவிடுமுறை இருந்தாலும் நாளிதழ் படிக்க வருபவர்களின் நலனுக்காக அந்தப்பிரிவு மட்டும் அன்றும் செயல்படும்.நாளிதழ்கள் மட்டுமே 17 வாங்கப்படுகிறது.பிடித்த பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள நுாலகத்திற்கு உள்ளேயே வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.நுாலக விழா போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு வாசகர் -எழுத்தாளர் சந்திப்புகள் வருடம் முழுவதும் நடக்கின்றது.

பழமையான புத்தகங்களை மிக அருமையாக பாதுகாத்து வருவதற்காகவும், உள்ளார்ந்த அன்போடு மக்கள் படிக்க இலவசமாக வசதி செய்து கொடுத்து இருப்பதற்காகவும், கொல்கத்தாவில் உள்ள ராஜராம் மோகன்ராய் நுாலக அறக்கட்டளை நாட்டில் உள்ள நுாலகங்களில் சிறந்த நுாலகம் என்று பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

இப்படி ஒரு நுாலகத்தை உருவாக்கி அந்த நுாலகம் நுாற்றாண்டைத் தாண்டியும் வெற்றிகரமாக செயல்பட சிந்தித்தவரும் அதற்கான நிரந்தர நிதிக்கு வழி செய்தவருமான கலெக்டர் பென்னிங்டன் படம் இருந்தால் கொடுங்கள் என்று நுாலக செயலாளர் முத்து பட்டரிடம் கேட்டபோது, கலெக்டர் பெனிங்டன் கொஞ்சமும் விளம்பரம் விரும்பாதவராக இருந்திருக்கிறார் ஆகவே அவர் படம் எங்குமே இல்லை, நாங்களும் தேடிக்கொண்டே இருக்கிறோம் கிடைக்கவில்லை. அவர் மீதான அபிமானம் காரணமாக மக்கள்தான் அவர் பெயரை நுாலகத்திற்கு வைத்துவிட்டனர். அவரது நோக்கம் தான் பெயர் பெறவேண்டும் என்பதாக இல்லை நுாலகம் பெயர் பெறவேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது என்றார்.

நுாலகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளீட்டோர் வருகை தந்து தங்களது வாழ்த்தினை குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர்.நீங்களும் உங்கள் வாழ்த்தை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : செயலாளர் முத்து பட்டரின் எண் 9944535101, நுாலக எண்:04563-260967.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X