சென்னை: சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு சி.பி.ஐ., கோர்ட் வழங்கிய 2 வருட சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.
தீர்ப்பு
சசிகலாவின் கணவர் நடராஜன்; லண்டனில் இருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என, தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளர் சுசுரிதா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. தொழிலதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால்,நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த, எழும்பூர் நீதிமன்றம், நடராஜன் உட்பட நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, நான்கு பேரும், சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர்.
மறுப்பு:
இதை விசாரித்த கோர்ட், 4 பேரின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும் என 4 பேரும் கோரிக்கை விடுத்தனர். இதனை நிராகரித்த நீதிபதி, சரணடைய கால அவகாசம் குறித்து சிபிஐ கோர்ட்டை அணுக உத்தரவிட்டார்.