திருவனந்தபுரம் : உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், 516 கிமீ தூரத்தை 6 மணி 45 நிமிடத்தில் கடந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவரான தமீமிற்கு நவம்பர் 15 ம் தேதியன்று இரவு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவசர அழைப்பு வந்துள்ளது. மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்து 31 நாட்களே ஆன பாத்திமா என்ற குழந்தைக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
ஆம்புலன்ஸ் செல்வதற்காக இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. ஆம்புலன்சிற்கு வழிவிடும் வகையில் போக்குவரத்தை சரி செய்யம் பணியில் கேரளா போலீஸ் மட்டுமின்றி குழந்தைகள் நல அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். இரவு 8.23 மணிக்கு ஆம்புலன்சை இயக்க துவங்கிய தமீம், மணிக்கு 76.4 கி.மீ., வேகத்தில் 516 கி.மீ., தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.
கண்ணூரில் துவங்கி, வழியில் கோழிக்கோடு பெட்ரோல் பங்க்கில் மட்டுமே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் வேகத்தில் ஆம்புலன்சை இயக்கி, குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமீமிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆம்புலன்ஸ் சென்ற வீடியோ, போட்டோக்கள் மற்றும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு போலீசாரும் சிறப்புக் குழு அமைத்து, போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.