சிகரம் தொட்ட தமிழ் சிறுகதைகள் : மலேசியாவில் சூட்டப்பட்ட மகுடம்

Added : நவ 19, 2017
Share
Advertisement
சிகரம் தொட்ட தமிழ் சிறுகதைகள் : மலேசியாவில் சூட்டப்பட்ட மகுடம்

இந்தியா, இலங்கை உட்பட எட்டு நாடுகளை சேர்ந்த தமிழர்கள் மலேசியாவில் கூடி பாரம்பரியம் மிக்க தமிழ் சிறுகதைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் 'தமிழ் சிறுகதைகள் நுாற்றாண்டு விழா' கொண்டாடியது உலகளாவிய தமிழ் ஆர்வலர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், இலக்கிய பிரியர்களின் நெஞ்சங்களை எல்லாம் மகிழவைத்துள்ளது.

உலக தமிழர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூட பெரும் முயற்சிக்கு முதல் அடியை மலேசியா தமிழ் மணி மன்றம் எடுத்து வைத்தாலும், அடுத்தடுத்த அடிகளை தமிழ் ஆர்வத்துடம் எடுத்து வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது, மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த் துறை.மணக்கும் தமிழுக்கு மலேசியாவில் மகுடம் சூட்டப்பட்டது எப்படி என்பது குறித்து பெரும் முயற்சி எடுத்த தமிழ் துறைத்தலைவர் சத்தியமூர்த்தி நம்மிடம்...

பேராசிரியராக பொறுப்பேற்ற பின் தமிழ் மீதான ஆர்வம் மற்றும் தேடலின் வெளிப்பாடு காரணமாக மலேசியாவின் தமிழ் மணி மன்றம் சார்பில் ஏற்கனவே விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது, "தமிழ் வளர்ச்சிக்காக இம்மன்றமும், பல்கலையும் இணைந்து செயல்பட வாய்ப்பிருந்தால் கூறுங்கள்," என வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கான வாய்ப்பை அம்மன்றத்தின் 10ம் ஆண்டு விழாவில் பங்கேற்க மன்ற தேசிய செயலாளர் சூ.வை.லிங்கம் அழைப்பு விடுத்தார். துணைவேந்தர் செல்லத்துரை யிடம் இதை தெரிவித்த போது சம்மதம் தெரிவித்ததோடு பல்கலை வளர்ச்சிக்காக இந்த அழைப்பை பயன்படுத்த ஆலோசனை வழங்கினார்.

இதன்படி ஏற்கனவே மன்றம் சார்பில் விடுக்கப்பட்ட சிறுகதைகள் போட்டிக்கான அறிவிப்பை நாங்கள் கையில் எடுத்து அதை தொகுக்கும் பொறுப்பை ஏற்றோம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, மொரிசீயஸ், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் மாணவர்கள், எழுத்தாளர், இலக்கியவாதிகள் அனுப்பிய 416 கதைகளை பெற்றோம். இவற்றில் 375 கதைகள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

அவற்றை தமிழ் மற்றும் மலேசியா குழுக்கள் மதிப்பீடு செய்தன. தமிழக கதைகள் தமிழ் பண்பாடு, கலாசார அடையாளம், தொன்மை மருத்துவம், இறை நம்பிக்கை தொடர்பாகவும், மலேசிய கதைகள் அங்குள்ள தோட்ட தொழிலாளர் பிரச்னை உட்பட அந்தந்த நாட்டின் தமிழ் சார்ந்த பெருமை, தமிழர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகவே இருந்தது. வ.வே.சு. அய்யர், மங்கையர்கரசியின் காதல் என்ற சிறுகதை தொகுப்பை 1910ல் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற 'குளத்தங்கரை அரசமரம்' என்ற சிறுகதையே தமிழகத்தில் சிறுகதைக்கான முதல் அடையாளமாக இதுவரை உள்ளது.

அதற்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழ் சிறுகதைக்கான நுாற்றாண்டு விழாவாக மலேசியாவில் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக எட்டு நாடுகள் எழுத்தாளர்களின் 100 கதைகள் தேர்வு செய்யப்பட்டு 'தமிழ் நுாற்றாண்டு விழா சிறுதைகள்' என்ற புத்தகத்தை அந்நாட்டு அமைச்சர்கள் சுப்பிரமணியன், டத்தோ சரவணன் வெளியிட்டனர்.மலேசியாவில் தமிழ் சிறுகதைகளுக்கு அளிக்கப்பட்ட மகுடம், உலகம் முழுவதிலும் வாழும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் பெருமை. மேலும் உள்ள சிறுகதைகளை தொகுத்து 'இந்திய சிறுகதைகள்' என்ற புத்தகம் வெளியிட இப்பல்கலை திட்டமிட்டுள்ளது, என்கிறார் பேராசிரியர் சத்தியமூர்த்தி.இவரை 94886 16100ல் பாராட்டலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X