kalvipurachi | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 20| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 20

Added : நவ 22, 2017 | கருத்துகள் (1)
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 20

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட, கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துகளையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.
27.முருகானந்தன், மாணவர் திறன் மேம்பாட்டு பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர் , திருப்பூர்
தேச கட்டமைப்பில், கல்வி முன்னேற்றத்தில், மாணவர் நலனில் எப்பொழுதுமே அக்கறை காட்டும் நமது தினமலர், இன்றைய கல்வித்தரம் மலர, உயர, "கற்பித்தலில் சுதந்திரமான செயல்பாடுகள் தேவை' என்கிற கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதற்கு ஒரு பெரிய சபாஷ் முதலில். பாராட்டுக்கள் தினமலர்.

ஆசிரியர்களது முக்கிய கடமை, எந்தவிதமான குறுக்கீடுகளும், வேலைச்சுமைகளும் இன்றி, முழுமையாக மாணவர்களுக்கு கற்பித்தல். ஆனால் இன்றைய சூழலில் அதிகபட்சம் 60% அவர்களது பணிகளை செய்தாலே பெரிதாக இருக்கிறது. காரணம் வருடா வருடம் வாக்காளர் கணக்கெடுப்பு, தேர்தல் பணி, குடும்ப அட்டை பணி, இத்யாதி... என்றே நேரம் போய் விடுகிறது. இப்போது புதிதாக சாதிச்சான்றிதழ் போன்ற பணிகள் வேறு.ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு தலைமையாசிரியைகளுக்கு கல்வித்துறை அதிகாரிகளுடான மீட்டிங் வாரா, வாரம். மாணவர் திறன் மதிப்பீடு, மேம்பாடு குறித்து அதீத ரெக்கார்டு வேலைகள் ஆசிரியர்களுக்கு. பஸ் கண்டக்டர் போல, பார்ம்களை நிரப்பவே அதிகமாக ஆகும் நேரம். ஆனால் என்ன பிரயோஜனம்?
மாறி வரும் காலச் சூழலில், எல்லா வகையிலும் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயகரமான நேரத்தில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களது கவனிப்பு, குறைந்து வரும் காலகட்டத்தில் பெற்றோர்களது கவனிப்பையும் , அரவணைப்பையும் ஆசிரியர்கள் தான் தந்தாக வேண்டியதாகிறது . இப்படியான நிலையில் தேவையற்ற பணிச்சுமைகளால் அவர்களது இறகுகளும் வெட்டப்பட, நடைமுறையில் மாணவ குஞ்சுகளுக்கு பறக்க கற்றுத் தருவது எப்படி? என்று குழம்பி போய் கதிகலங்கி நிற்கிறார்கள் ஆசிரியர்கள் .

வாராது வந்த மாமணி போல தன்னாட்சி அதிகாரம் என்கிற உன்னதமான கொள்கையை, சீர்திருத்தத்தை ஆட்சியாளர்களின் முன் வைத்திருக்கும் தினமலரின் பணி, வரலாற்றில் நிலைத்து நிற்கும் திருப்பணி மட்டுமல்ல, ஆங்கில, அடிமை முடக்குவாத முறையான மெகல்லே முறைக்கு சரியான மாற்று முறையும் தான்... காலத்தின் கட்டாயமும் கூட.
ஆசிரியர்கள் ஒரு வரைமுறைக்குள் சுகமாய் செயல்படுகிற பொழுது, எதிர்பார்த்த மாற்றங்கள் விரைந்து நடக்க ஏதுவாக இருக்கும். மாணவர்கள் சுதந்திரமாய் வானில் பறக்க, ஆசிரியர்களது சிறகுகளை விடுவிப்பது மிக அவசியமல்லவே..? தினமலர் , திசை காட்டும் மலர் .


தினமலர் விளக்கம்:


பள்ளிகளில் கல்வித்தரம் உயர, 'பள்ளிகளில் தன்னாட்சி' கருத்தை தினமலர் முன் வைத்திருப்பதைப் பாராட்டியிருக்கும் தங்களுடைய செயலுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

15 ஆண்டுகள் ஆசிரியர்களோடும், மாணவர் களோடும் தாங்கள் நெருங்கி பழகி, பெற்றிருக்கும் அனுபவம் தங்கள் கடிதத்தில் துல்லியமாகத் தெரிகிறது. அடிநாதமாக, இன்றைய கல்விச் சூழலைப் பற்றி தாங்கள் சொல்லியிருக்கும் செய்திகளோடு, தாங்கள் உணரும் வேதனையையும் நாம் உணர முடிகிறது. சுருக்கமாக, ஆசிரியர்களின் பணி, கற்பித்தல் என்ற ஒன்றோடு மட்டும் தான் இணைந்திருக்க வேண்டும். அந்த நியாயமான சூழல் இல்லாததை தாங்கள் நன்கு விளக்கியிருக்கிறீர்கள். பல பணிகளின் நடுவே கற்பித்தலும் ஒன்றாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதோடு மட்டுமின்றி, 8 வரை 'ஆல் பாஸ்' திட்டம் உண்மையில் மாணவர்களிடம் 'கற்றுத்தேற வேண்டும்' என்ற அக்கறையைத் தோற்றுவிப்பதில் பெரும்பாலும் தவறி விடுகிறது. மாணவர்களிடம் காணும் தவறைத் திருத்த, சற்று கண்டிப்புடன்- நிச்சயமாக கடுமையாக அல்ல,- செயல்பட விரும்பும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் இன்னல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

இப்படி ஒரு சூழலில், ஆசிரியர்கள் பொதுவாக 'படிச்சா படி; இல்லாட்டி போ' என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது ஒருபுறம் என்றால், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் கவனம் சரியான அளவில், முறையில், 'மாணவர்களுக்கு' கிடைப்பதில்லை என்ற நிலை மற்றொரு புறம். 'பாவம் மாணவர்கள்' என்று ஒருவர் நினைத்தால், அது தவறு என்று உறுதியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இங்கே, தங்களிடம் ஒரு வேண்டுகோள். கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்க க்எஇ இடும் நிபந்தனைகளைப் படித்துப் பாருங்கள். அவ்வளவும் தரம் ஒன்றை நோக்கியே வரையறுக்கப்பட்டவை. அதே வழியில் பள்ளிகளில் தன்னாட்சி என்ற உன்னத சூழல் அமைந்தால், தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பல அவலங்கள் மறைந்தே விடும், உறுதியாகக் குறைந்து விடும். இந்த நம்பிக்கையில் தான் பள்ளிகளில் தன்னாட்சியை 'தினமலர்' வலியுறுத்தி வருகிறது. இந்தப் புரட்சி நிகழ்ந்தால் உறுதியாக மாணவர்களின் நலன் போற்றிப் பாதுகாக்கப்படும். கற்பித்தலும், கற்றலும் அவற்றிற்குரிய நியாயமான வழியில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

முடிக்குமுன் ஒரு செய்தி. அரசு பள்ளிகளிலும் மிகவும் திறமையான ஆசிரியர்கள் இன்றும் இருக்கின்றனர் என்று தாங்கள் சுட்டிக் காட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக, இதமாக இருக்கிறது. ஏனெனில் பொதுவான கருத்தை தாங்கள் நேர்வழியில் மறுத்து, உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். சுதந்திரமாக இயங்க முடியாமையை காரணமாக சொல்லி இருக்கிறீர்கள்.

'பள்ளிகளில் தன்னாட்சி' தாங்கள் வலியுறுத்தியிருக்கும் சுதந்திர இயக்கமும், கற்பிக்கப் போதிய கால அளவும் தவிர்க்க முடியாதவை. தங்களுடைய பாராட்டுக்கு மறுபடியும் நன்றி சொல்லி, பள்ளிகளில் தன்னாட்சி மலரும்; இது உறுதி என்ற சமூக பொறுப்புணர்வுடன் கூடிய நம்பிக்கையோடு இருப்போம். வணக்கம்.

-தொடரும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X