திருச்சி: திருச்சியில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், திருமண உதவி வழங்கப்பட்ட பெண்களுக்கு, இன்னும் அதற்கான தொகை வழங்கப்படவில்லை.
ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, பட்டதாரி பெண்களுக்கு, திருமண நிதியுதவியாக, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் தங்கம், பிளஸ் 2 படித்த பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பணம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட, 3,500 பெண்களுக்கு, அக்., 26ல் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், ஒரு சிலருக்கு மட்டும் முதல்வர் பழனிசாமி, தங்கம் மற்றும் பணத்திற்கான, 'செக்' வழங்கினார்.
மீதியுள்ளவர்களுக்கு, 8 கிராம் தங்கம் மட்டும் அடுத்த இரு நாட்களில் வழங்கப்பட்டன. இன்னும் ரொக்கம் வழங்கப்படவில்லை. மொத்தம், 22.12 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.
பெண்கள் கூறுகையில், 'வங்கிக் கணக்கில் பணம் வந்து விடும் என கூறினர். ஆனால், இதுவரை வங்கியில் வரவு வைக்கப்படவில்லை. சமூக நலத்துறை அலுவலகத்தில் கேட்டால், சரியான பதில் சொல்ல மறுக்கின்றனர்' என்றனர்.
சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரித்த போது, 'பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தான், பணம் வரவு வைக்கப்படும். அவர்களிடம் வங்கிக் கணக்கு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அனைவரின் வங்கிக் கணக்கை சேகரித்ததும், ரொக்கம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தனர்' என்றனர்.