வால்பாறை : வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், ரேஷன் கடை திறக்க வனத்துறையினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
வால்பாறை தாலுக்காவில் மொத்தம், 48 ரேஷன் கடைகள் உள்ளன. முடீஸ் அடுத்துள்ள கெஜமுடி மேல்பிரட்டில் சமீபத்தில், பகுதி நேர ரேஷன் கடையை, எம்.எல்.ஏ., கஸ்துாரி துவக்கி வைத்தார். இந்நிலையில், வனத்துறையின் திடீர் அறிவிப்பால் புதிய ரேஷன் கடை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகள் ரேஷன் கடையிலுள்ள பொருட்களை உட்கொள்ள கடையை சேதப்படுத்துகின்றன. இதனால், அருகில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
கெஜமுடி எஸ்டேட்டில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு, யானைகள் அடிக்கடி வருகின்றன. இதனால், பாதுகாப்பு கருதி, ரேஷன் கடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என்றனர்.