கோட்டூர், : பொள்ளாச்சி அருகே, நா.மூ.சுங்கம் - அங்கலக்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது, வேடசெந்துார். கிராமத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை குவியல், துார்வாரப்படாத சாக்கடை, திறந்தவெளிக் கழிப்பிடம் என அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கை வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது.
ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, அங்கலக்குறிச்சி ஊராட்சியின் சிறு கிராமமான வேடசெந்துாரில், 300 குடியிருப்புகள் உள்ளன. கிராமத்தில், அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்டவை உள்ளன. கழிப்பிடம் பற்றாக்குறை, பல்லாங்குழியான ரோடுகள், குப்பை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாததால், மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
தண்ணீர் பிரச்னை
கிராமத்துக்கு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு, முருகன் கோவில் வீதி, மதுரை
வீரன் கோவில் வீதி உள்பட மொத்தம், நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோவில் வீதியிலுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பழுது ஏற்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பைக்கு தீர்வில்லை
ஊராட்சியில் பணியாற்றும் துாய்மைக் காவலர்களைக் கொண்டு பொதுமக்கள் வீடுகளில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பை தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. ஆனால், ரோட்டோரத்தில் தேங்கும் குப்பையை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
இதனால், நா.மூ.சுங்கம் - வால்பாறை ரோட்டிலுள்ள துவக்கப்பள்ளி அருகே குப்பை மலைபோல் குவிந்து பொது
சுகாதாரத்துக்கு சவால் விடுகிறது. அதுமட்டுமின்றி அங்கலக்குறிச்சி செல்லும் வழியிலுள்ள வாரச்சந்தையின் காய்கறிக்கழிவுகளும், ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர், வீடுகளில் குப்பை சேகரிப்பதோடு தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால், கிராமத்தில் பொதுசுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சாக்கடைகளை முறையாக துார்வாராமல் உள்ளதால், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். வேடசெந்துார் - அங்கலக்குறிச்சி ரோட்டில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
மாணவர்கள் அவதி
முருகன் கோவில் வீதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டடத்துக்கு அருகில் குழந்தைகளுக்காக, 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடம் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க, தங்கள் வீடுகளுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டத்துக்கு அருகில், குப்பை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் குவிந்துள்ளதால், வகுப்பறைக்குள் துர்நாற்றம் வீசுகிறது.
கழிப்பிடம் தேவை
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்தும் போதிய அளவுக்கு கழிப்பிடங்கள் கட்டடப்படாமல் உள்ளது. அங்கலக்குறிச்சி செல்லும் வழியில் முறையான திட்டமிடல் இல்லாமல், நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெகுதுாரம் சென்று கழிப்பிட வசதி பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கழிப்பிடம் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கழிப்பிடம் பற்றாக்குறையாக உள்ளதால், வீட்டில் கழிப்பிடம் இல்லாத பொதுமக்கள் ரோட்டோரங்களை திறந்தவெளியை கழிப்பிமாக பயன்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல்லாங்குழி ரோடு
கிராமத்திலுள்ள கான்கிரீட் மற்றும் தார் ரோடுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், புதுப்பிக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் செல்லும் ரோடு, மதுரைவீரன் கோவில் வீதி உள்ளிட்ட ரோடுகள், வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் பல்லாங்குழி ரோடாக காட்சியளிக்கிறது. தெருவிளக்குகளில், போதிய அளவுக்கு எல்.இ.டி., மற்றும் டியூப் லைட்கள் பொறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பழுதாகும் தெருவிளக்குகளை, ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்யாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால், இரவு நேரங்களில் இருளான ரோட்டில், மக்கள் தடுமாறி செல்கின்றனர்.
கிராமத்தில், கழிப்பிட வசதி, குப்பை குவியல், ரோடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்வு காண வேண்டும் என்பதே வேடசெந்துார் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.