"மனம் அது செம்மையானால்”| Dinamalar

"மனம் அது செம்மையானால்”

Added : நவ 30, 2017
"மனம் அது செம்மையானால்”

“எண்ணங்களின் போர்க்களம்”
“மனம் எனும் போர்க்களம்”
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”
என்ற கூற்றின்படி நம்மில் எந்த அளவிற்கு உயர்வான எண்ணங்கள் (சிந்தனைகள்) இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மால் வாழ்க்கையில் உயர்வடைய முடிகிறது. பணம், புகழ், நிம்மதி, இன்பம் மற்றும் வெற்றி இவைகளை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
இவைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றையோ நம் மனம் விரும்புகிறதை நம்மால் உணரமுடியும். அவற்றை அடைய நம்முடைய கல்வி மற்றும் அறிவு மட்டும் போதாது.
நாம் நம்மை புரிந்துகொள்ளும் பொழுதும், மற்றவர்களின் உணர்வுகளை திறம்படகையாளும் பொழுதும் அந்த வெற்றியை நம்மால் அடைய முடிகிறது. ஒரே ஒரு சிந்தனை சில நேரங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றி அமைத்து விடுகிறது. பிறக்கும்போது அனைவரும் சாதாரண மனிதனாகத்தான் பிறக்கிறோம். ஆனால் நம் எண்ணங்களை கையாளுவதின் மூலம் நாம்
பேராற்றல் மிக்கவர்களாக மாறிவிட முடியும். நம்முடைய எண்ணங்கள் நம்மை ஆளுகை செய்கிறதா அல்லது நாம் அதை ஆளுகை செய்கிறோமா என்பதை முதலில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வளமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க நம் எண்ணங்களே
உதவுகிறது.

சிந்தனைகளின் ஊற்று : ஒவ்வொரு நாளும் நம் மனதில் தோன்றும் சிந்தனைகள் பல
ஆயிரங்கள் ஆகும். அவைகளில் பெரும்பாலானவை எதிர்மறை எண்ணங்களே என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய சிந்தனைகளின் பிறப்பிடம் அல்லது ஊற்று நம்முடைய மனமாகும். அறிவியல் கூற்றின்படி அது நம்முடைய மூளை என்பதை அறிவோம். பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மகான்கள் இத்தகைய ஊற்றை தங்கள் வசப்படுத்திக் கொள்ள முயற்சித்து, பலர் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். நம்முடைய சவுகரியம் நாம் எடுக்க வேண்டிய நல்ல முயற்சிகளை சில நேரங்களில் கைவிட வைக்கிறது.
உதாரணமாக காலையில் சீக்கிரம் விழிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவைகள். இங்கே அதை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நம்முடைய சவுகரியம் அதை தடுப்பதை காண முடிகிறது. இந்த சவுகரியத்தை நம் முயற்சியால் மேற்கொள்ள
சிந்தனையின் ஊற்று நமக்கு தேவைப்படுகிறது. ஒரு மனிதன் இறக்கும் போது
இந்த ஊற்றானது (மனம்) சிந்தனைகளை சுரப்பதை நிறுத்தி விடுகிறது. இறுதி மூச்சுவரை போராடும் ஒரு போர்களமாகவே நமக்கு காட்சியளிக்கிறது.

சிந்திக்கத் தொடங்குங்கள் : ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முதலாவது நாம் சிந்திக்கத் தொடங்கவேண்டும். ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற நம் எண்ணங்களை ஆராய்ந்து பார்க்கவும் மற்றும் அதைப்பற்றிய தெளிவான பார்வையும் நமக்குத் தேவைப்படுகிறது. “நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்”; என்ற கருத்தின்படி இன்றிலிருந்து முதலாவதாக நேர்மறை எண்ணங்களை கூட்ட வும், எதிர்மறை எண்ணங்களை
குறைக்கவும் சிந்திக்கத் தொடங்குவோம். இவ்வகையான தொடக்கம் நம்மை வேறு மனிதனாக மாற்றி அமைக்கிறது.

மிகப்பெரிய வெற்றி வாழ்க்கையை சிந்திக்கத் தொடங்குவதிலேயே ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு மனிதனிடமும் அபார திறமை ஒளிந்துள்ளது. அதை கண்டு பிடிக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் வாழ்கிறார்கள். நாம் கவனிக்க தவறிய சிறிய விஷயங்கள் கூட நம்முடைய வெற்றிக்கு தடைக்கல்லாக மாறியிருக்கும். அவற்றை கண்டுபிடிக்க இன்றே சிந்திக்கத் தொடங்குங்கள்.

மன ரம்யம் எனும் மருந்து : எந்த இடத்தில் இருக்கும் போது அல்லது யாருடன் நாம் இருக்கும் போது ஒரு மன ரம்யத்தை உணர்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் நம் உடம்பில் சில குறைபாடுகள் அல்லது நோய்கள் ஏற்பட நம்
எண்ணங்களும் காரணமாக அமைகிறது. சில நாட்களில் அது நாட்பட்ட வியாதியாகவும் மாறி
விடுகிறது. மனதாலும் உடம்பாலும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை அமைக்க மன ரம்யம் உதவுகிறது. முறையாக அனுபவிக்க வேண்டிய விஷயங்களை தவிர வேறு எந்த
தவறான சிந்தனைகளுக்கும் இடம் தராமல் இருக்கும் போது அங்கே மனரம்யம் உண்டாகிறது. எந்த ஒரு செயலும் பழக்கத்தால் சாத்தியமாகிறது.மனப்பாங்கு என்பது ஒருவர் ஒரு காரியத்தை எந்த வகையில் எந்த கோணத்தில் பார்க்கிறார் என்பதே. ஒரு விஷயத்தில் வெற்றிபெற
சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்களைக் காட்டிலும் அதை எப்படி உருவாக்குவது என்று
எண்ணுபவர்களே மிகச்சிறந்த வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி துல்லியமாக புரிந்து வைத்துள்ளார்கள். உதாரணமாக கோயிலுக்குச் செல்கிறோம் என்றால் கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரனுக்கு ரூ. 1 அல்லது 2 தானம் செய்கிறோம். உள்ளே சென்ற பின்பு அங்கு சேவை செய்யும் பூஜாரிக்கு பணத்தை தட்டில் போடுகிறோம். கோயிலுக்கு வெளியே நம் மனநிலை வேறு மாதிரியாகவும் கோவிலுக்கு உள்ளே வேறு மாதிரியாக
மாறுவதை நம்மால் உணரமுடிகிறது. இங்கே யாருக்கு அதிகம் போடவேண்டும் என்பதை
விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் நம் மனம் சில வித்தியாசமான கோணங்களில் பார்க்கிறதை காணமுடிகிறது. குழியில் விழுந்த ஒரு கழுதை தன் மேல் வாரி இறைத்த மண்ணை வைத்தே மேடாக்கி வெளியில் வந்த கதையை நாம் நன்கு அறிவோம். அத்தகைய நேர்மறை மனப்பாங்குடன் செயல்படும் போது வெற்றி நிச்சயமே.

மன அழுத்தம் : இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் கூட எனக்கு ஒரே “டென்ஷன்” என்று சொல்வதைக் காணமுடிகிறது. ஏனென்றால் காலத்தோடு கூட அவர்களது மன
நிலையும் மாறிவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மன அழுத்த நோய் பலரைப் பாதித்திருப்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம். இத்தகைய மன அழுத்தம், பயம், சோம்பல், துாக்கமின்மை மற்றும் இதனால் வரும் நோய்கள் நம் இயல்பு வாழ்வை பாதிக்கும். இன்றைய நவநாகரிக உலகில்
நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, வாசிக்கும் பழக்கம், முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு ஆகியவை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இவை ஒருகாலத்தில் நம்முடைய எண்ணங்களை சீர்படுத்திக் கொண்டிருந்தவைகள் என்பதை நாம் மறந்து விட்டோம். ஆகையால் நமக்கு தேவையில்லாத மற்றும் முறையற்ற எண்ணங்கள் நிறைந்து அது மன அழுத்த நோயாக மாறிவிடுகிறது. இன்றைய மாணவர்களுக்கும் இதில் விதி
விலக்காக அமையவில்லை. தனக்கு மன அழுத்த நோய் இருக்கிறது என்று தெரியாமல் பலர் இன்று வாழ்ந்து வருவதைக் காணமுடி கிறது. இத்தகைய மன அழுத்தம் இருதயம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கிறது.பிரார்த்தனைகளும் தியானங்களும்
மனம் அது செம்மையானால் மந்திரம் ஏதும் ஜெபிக்க வேண்டாம் என்ற திருமூலர் வாக்குப்படி
முதலாவது நம் மனதை பண்படுத்துவதிலேயே நம்முடைய வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இன்றைய இளைய சமுதாயத்தில் மிகவும் நலிந்து காணப்படுவது இந்த பிரார்த்தனை மற்றும் தியானமாகும். ஆனால் இந்த இரு செயல்களுமே ஒரு மனிதனை மகானாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. தினமும் காலையில் முதலாவது செயலாக இரவில் கடைசிச் செயலாகவும் இதைச்செய்யும் போது அது நம்முடைய ஆழ்மனதை துாண்டி அந்த இலக்கை அடைய வைக்கிறது.
என்னால் முடியும், நான் சாதிக்கப் பிறந்தவன், மேலும் என் வாழ்க்கை வெற்றியுள்ளதாய் மாறும் என்பதை நாம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பதால் நம் வெற்றி நிச்சயமே. பிரார்த்தனை, தியானம் மூலம் நம்முடைய எண்ணங்களை ஆழ்மனதில் விதைத்து அதை
வெற்றிக்கனியாக்க தொடர்ந்து முயற்சிப்போம், வெற்றி பெறுவோம் மனம் எனும் போர்க்களத்தில்…

-மீ.கருப்பசாமி, பேராசிரியர்
ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை
98940 51015

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X