சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன?

Added : டிச 04, 2017
சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன?

நம் வீடு, நம் குடும்பம் என்று மட்டும் நம் வட்டத்தை சுருக்கிக் கொண்டு 4 சுவற்றுக்குள் நம் வாழ்க்கையை பலர் நடத்திக் கொண்டிருக்கிறோம். சமூகத்திற்கும் நமக்கும் தொடர்பில்லாமல் வாழும் இந்த நடைமுறை ஆரோக்கியமானதா? சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்…

சத்குரு: ஒரு முறை ஒரு பெண் இருந்தாள். ஆண்களிடையே அவள் மிகவும் பிரபலம். ஒரு முறை ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவள் அவனிடம் கேட்டாள், எல்லோருக்கும் என்னை பிடித்திருக்கிறது, எல்லோரும் என்னிடம் பழக விரும்புகிறார்கள். அவர்களுக்கு எதனால் என்னை பிடிக்கிறது? என் கண் காரணம் என்றா நினைக்கிறாய்? அதற்கு அவன் சொன்னான், கிடையாது. சரி, என் முகஅழகு காரணமா? கிடையாது. என் நடத்தை காரணமா? கிடையாது. சரி, எனக்குத் தெரியவில்லை, நீயே சொல். அப்போது அவன் கூறினான், 'ம், இதுதான், இதுதான், இதற்காகத்தான் உன்னை அனைவருக்கும் பிடித்திருக்கிறது'. பெண்மை எப்போதும் எளிதாக விட்டுக் கொடுக்கிறது.

ஆதிக்கம் பல மட்டங்களில்..
உலகில் பெண்மை மீது மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தத்தான் மக்கள் நினைக்கிறார்கள். ஆண்கள் யாராலும் ஆதிக்கம் செலுத்தப்பட வில்லை என்று நினைக்கிறீர்களா? ஆண்களையும் வேறு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், இல்லையா? எல்லா மட்டத்திலும் ஆதிக்கம் என்பது இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மீது, ஆண்கள் மீது, பெண்கள் மீது, மிருகங்கள் மீது, தாவரங்கள் மீது யாரோ ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறார்கள். ஆதிக்கம் செலுத்தப்படாமல் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பாருங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்தியபடிதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒன்று ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதற்காக அதை இல்லாமலே செய்துவிடலாமா? பூக்களைப் பறித்து மாலை செய்கிறார்கள். யாரோ பூக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக, பூக்களே இல்லாமல் செய்து விடலாமா? அதே போல் பெண்மை மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்காக பெண்மையே இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லதுதானா? எனவே இவ்வளவு காலமாக நிலவிய ஆணாதிக்கத்திற்கு எதிர்செயலாக செயல்படாமல் இனிமேல் பெண்கள் நலமாய் வாழ என்ன செய்யவேண்டும் என்பதை கவனித்து செயல்பட்டால் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்.

அசிங்கத்திற்கு தீர்வு அசிங்கம்தானா?
ஒரு அசிங்கத்திற்கு பதிலாக இன்னொரு அசிங்கத்தை உருவாக்கக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக உலகத்தில் இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஒருவர் ஒரு அசிங்கம் செய்தால் நீங்கள் அதைவிட அதிகமாக இன்னொரு அசிங்கம் செய்ய நினைக்கிறீர்கள், இதுதான் தீர்வுக்கு வழியா? உங்களை ஆதிக்கம் செலுத்துபவரை விட நீங்கள் எந்த விதத்தில் மேம்பட்டவர்? ஒருவர் உங்களை ஆதிக்கம் செலுத்தி துன்புறுத்தும்போது, அந்த துன்பத்தையும் விட நீங்களே உங்களுக்கு செய்துகொள்ளும் துன்பம் அதிகமாக இருக்கிறது. யாராவது ஒருவர் உங்களை பயன்படுத்த நினைக்கிறார்கள். கோபப்படுகிறீர்கள், விரக்தி அடைகிறீர்கள், இது யாரோ உங்களை கொஞ்சமாக பயன்படுத்திக் கொள்ளும்போது நீங்கள் அடையும் சேதத்தை விட நீங்கள் கோபமோ விரக்தியோ அடையும்போது உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் சேதம் இன்னமும் அதிகமாக இருக்கிறது. எனவே வேறு யாரோ உங்களுக்கு எதிரி இல்லை, உங்களுக்கு நீங்களே எதிரி. யாராவது உங்களுக்குத் தீமை செய்ய நினைத்தால் சிறிது உங்களைத் தூண்டிவிட்டால் போதும், மீதியை நீங்களே ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதை முதலில் நீங்கள் நிறுத்த வேண்டும். உங்களை நீங்களே சேதப்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளத் தெரிந்தால் அடுத்தவர் உங்களுக்கு ஏற்படுத்தும் சேதத்தையும் நிறுத்திக் கொள்ளத் தெரிந்து கொள்வீர்கள்.

நமக்கு நாமே செய்யும் தீமை
பெண்மையின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அது உலகில் இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு நாளில் மாற்ற முடியாது. ஆனால் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் தீமையை நீங்கள் நினைத்தால் ஒரு வினாடியில் நிறுத்திக் கொள்ளலாம். அதையே உங்களால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்றால் உலகம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? மக்கள் பல நேரங்களில் பெண்மை மிகுந்த வழியானது வலிமை குன்றியது என கருத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பணியில் ஆகட்டும், வியாபாரத்தில் ஆகட்டும், நீங்கள் கடைப்பிடிக்கும் வழி பெண்மை நிறைந்ததா ஆண்மை நிறைந்ததா என யாரும் கவனிப்பதில்லை. நீங்கள் கடைபிடிக்கும் வழியில் பலன் கிடைக்கிறதா, இல்லையா என்பதைத்தான் உலகம் கவனிக்கிறது. ஆண்மை வழியா, பெண்மை வழியா, தெய்வீக வழியா அல்லது மிருக வழியா அது யாருக்கும் கவலையில்லை. இறுதியில் நீங்கள் பலன் ஈன்றெடுத்தால் இந்த உலகமே உங்கள் வழியைப் பின்பற்றும், அப்படித்தானே? பெண் விடுதலை என்று பாடுபடுபவர்கள் பெண்மை தழைத்தோங்க பெரிய சேவை செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெண்கள் அமைப்புகள் நடத்திய சில கூட்டங்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் பேச்சு கண்டிப்பாக பெண்மை நிறைந்ததாக இல்லை. ஆண்களை விட இவர்கள் அதிகம் ஆண்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மிகவும் கடுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இது பெண்மைத் தன்மையல்ல. உண்மையில் ஒரு ஆண் கூட சிறிது விட்டுக்கொடுக்க நினைப்பார். ஆனால் இவர்கள் ஒரு ஷணம் கூட விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை.

சமூகத்தில் ஆணும் பெண்ணும்…
ஆணோ பெண்ணோ 100 சதவீதம் ஆண்மை நிறைந்தவர்களோ அல்லது 100 சதவீதம் பெண்மை நிறைந்தவர்களோ கிடையாது. ஆண் என்பவனுக்கு ஆண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது, பெண் என்பவளுக்கு பெண்மை அதிக சதவீதத்தில் இருக்கிறது. உலகில் பிழைக்கும் வழிதான் முக்கியமாக இருக்கும்போது ஆண்மைதான் மேலோங்கியிருக்கும். பெண் எப்போதும் பிழைப்புக்கான வழிக்காக துரத்தப்படுவதில்லை. அவள் தளர்வு நிலையில் இருக்கமுடியும். ஆணுக்கும் இது தேவைப்படுகிறது. அவனுக்கு இது பெண் மூலமாக தேவைப்படுகிறது. அவன் பிழைப்புக்கான வழியில் ஈடுபட்டு, எதாவது சம்பாதித்தால், அதை வீட்டிற்கு கொண்டுவந்து தளர்வடையவே முயற்சிக்கிறான். பெண்மை இல்லாமல் அவன் தளர்வடைவது முடியாது. இசை, கலை, அன்பு, அக்கறை ஆகியவை பொருளாதாரம் போன்று எப்போது மேலோங்கி இருக்கிறதோ அப்போது ஆணுக்கு நிகராக பெண்ணின் பங்கும் இருக்கும். எனவே பெண்களோ அல்லது பெண் இயக்கங்களோ பெண்மையை தழைத்தோங்கச் செய்வதையே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அர்ப்பணிப்பும் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. இவ்விரு தன்மைகளையும் தன்னுள் மேம்பட்ட நிலைக்கு கொணரும்போது பெண் என்பவள் பராசக்தியாக பரிணமிக்க முடியும். அந்தநிலை வரும்போது இந்த உலகம் வாழ்வதற்கு மிகவும் ஆனந்தமானதாக இருக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X