பெண்மைக்கு பாதுகாப்பான இந்தியா!| Dinamalar

பெண்மைக்கு பாதுகாப்பான இந்தியா!

Added : டிச 06, 2017

இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருபவை
'மகாபாரதம், ராமாயணம்'. ராவணனிடமும், துரியோதனிடமும் ஆணவம், கர்வம், ரிஷிகளைத் துன்புறுத்துதல், பேராசை என கெட்ட எண்ணங்கள் இருந்தாலும், வர்களின் அழிவுக்கு வழி
காட்டியது பெண்களின் மீது அவர்கள் தொடுத்த வன்முறை தான். பலபேர் அடங்கிய சபையில்
துரியோதனன், திரவுபதியின் துயில் உரிக்கச் செய்தானோ அன்றைய நாளில் இருந்து, அவனின் அழிவுக்கான நாளின் எண்ணிக்கை தொடங்கியது. இந்த தவறைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பத்து தலை கொண்டு பராக்ரம சாலியாய்த் திகழ்ந்த ராவணன், தன்னுடைய ஒரு இதயத்தில் எழுந்த மாற்றான் மனைவியைக் கவர வேண்டும் என்ற ஆசையால் மண்ணானான். ஒருவன் எந்த தவறு செய்தாலும் மன்னிக்கப்படுவான். ஆனால் பெண்களுக்கு எதிரான தவறு செய்தால், அவனுடைய முடிவு அழிவுதான் என்பதே, நம் இதிகாசங்கள் நமக்குச் சொல்லும் உண்மை.

பெண்மையின் மகத்துவம் : பெண்மையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல 'சர்வதேச மகளிர் தினம்', பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு எடுத்துச்சொல்லி அதற்கான
தீர்வுகளை காட்டுவதற்காக 'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம்' ஆகியவை முன்வைக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிச., 17ல் கூடியபோது ஆண்டு தோறும் நவ., 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும்
தீர்மானத்தை நிறைவேற்றியது.
டொமினிக்கன் குடியரசைத் சேர்ந்த மிராபெல் சகோதரிகள் என்று அழைக்கப்படும் மூன்று சகோதரிகள், சமூகத்தில் பாதிக்கப்
படும் பெண்களுக்காகக் குரல் கொடுத்தனர். 1960 நவ., 25ல் அவர்களின் அரசியல் செயற்பாடு
களுக்காக, அந்நாட்டின் ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலோவின் (1930--1961) உத்தரவால் படுகொலை செய்யப்பட்டனர்.
'மறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகள்' என பெயர் பெற்ற மிராபெல் சகோதரிகள், லத்தீன்
அமெரிக்காவில் பெண்களுக்கு
எதிரான வன்முறைக் கொடுமை யின் சின்னமாக மாறினர். மிராபெல் சகோதரிகளின் கதை 'இன் தி டைம்ஸ் ஆப் பட்டர்பிளை' என்ற பெயரில் நாவலாகவும், திரைப்
படமாகவும் உருவாகியது.
1980 முதல் அந்த நாள், அவர்
களின் படுகொலையை நினைவு
கூர்வதற்காகவும், பாலியல் வன்
முறைகளுக்கு எதிராக விழிப்
புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்
களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகளாவிய செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டன. இந்த செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிச.,10ல் தொடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறை உடல் அல்லது
உளவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்தது என பல வடிவங்களை எடுக்கிறது.
கருவை உருவாக்கி உலகிற்கு தரும் பொறுப்பு பெண்ணிடம் தரப்பட்டதால், பெண்
குடும்பத்திற்காக உழைக்கவும், ஆண் வெளியே சென்று பொருள் ஈட்டி வரவும் வேண்டும் என்ற
கலாசாரமும் தொடங்கியது. பின்னாளில் அதுவே பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கமாக உருவெடுத்தது.

பாரதியின் கனவு

பெண் என்பவள் உணவு சமைக்கவும், ஆணையும் பிள்ளை களையும் பேணிக்காக்கவுமே பிறந்தவர் என்ற எண்ணம் தலை துாக்கியது. இளமைத்திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்த ராஜாராம் மோகன்ராய், பாரதியார் போன்றவர்களின் வருகையால் பெண்களின் நிலை மாறியது.

'ஏட்டையு ம் பெண்கள் தொடுவது

தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி'
என்ற பாரதியாரின் கனவு
நனவானது.
ஆனால் சமத்துவத்தோடு
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், ஆபத்துகளும் வளர
ஆரம்பித்தன. அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளில் ஆரம்பித்து, அலுவலகங்கள், பாடசாலைகள் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சுற்றி இருப்பவர்
களினாலும், நெருங்கிய உறவுகளினாலும் கூட பெண்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.
பெண்களைப் போகப்
பொருளாக பார்க்கும் சில கயவர்
களின் பார்வை, சிறு குழந்தைகளை கூட விட்டுவைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்.
பெண்களை, பூவின் மென்மைக் கும், நிலவின் இனிமைக்கும்
ஒப்பிட்டு வர்ணித்தவர் நிறைய பேர் உண்டு. ஆனால் இந்தப் பெண்
களுக்கு இணையாக உலகில் எந்த உயிரினமும், பொருளும் இதுவரை ஜனிக்கவில்லை என்றுதான்
தோன்றுகிறது. தன்னம்பிக்கையின் உச்சம் இவர்கள்.
வேதனையை சாதனை ஆக்கியவர்கள்
சிறுவயதில் இருந்தே விளையாட்டில் துரித ஆர்வமாய் இருந்து, தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் பங்குபெற்றவர்
அருணிமா சின்ஹா. ரயில் பயணம் என்பது நினைக்கும் இடத்தை அடைய உதவும். ஆனால் அருணிமாவிற்கு வாழ்க்கையின் தளத்தையே மாற்றும் பயணமாக மாறியது. பணத்திற்காகவும், நகைக்காகவும் எதுவும் செய்யலாம் என்ற கயவர்களின் செயலால் ஓடும் ரயிலில் இருந்து வீசி எறியப்பட்டார். தன் கால்களை இழந்தார். கால்களின் பலத்தால் வெற்றிச் சிகரம் தொட நினைத்தவரின் கனவு கலைந்தது. போகும் பாதை தான் மாறியதே தவிர தன்னுடைய
இலக்கைக் கைவிடவில்லை. கால்களால் தரையில் சாதிக்க
நினைத்ததை கால்களை இழந்தபின், தரணியின் உச்சத்தில் சாதித்தார். உலகின் உயரமான
சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார்.
பார்ப்பவர்களை வசீகரிக்கும் அழகுடன் பிறந்த லட்சுமி
அகர்வால், 15 வயதில் தன்னிடம்
காதலைச் சொன்ன 32 வயது ஆணின் விருப்பத்தை மறுத்ததால், திராவக வீச்சுக்கு உள்ளானாள்.
போராடும் அக அழகு
எந்த ஒரு கொடூரனும்
பெண்ணின் புற அழகை அழிக்க முடியும், ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்த்து போராடும் அக அழகை அழிக்க முடியாது. லட்சுமி அமில திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவராக இருக்க
விரும்பவில்லை. திராவக வீச்சை எதிர்த்து போராடும் போராளியாக மாறினார். திராவக வீச்சால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் 'சாவ்' அமைப்பின் தலைவரானார். கடந்த 2014 ம் ஆண்டின்
உலகின் தைரியமான பெண்மணியாக அமெரிக்க அரசால் தேர்ந்
தெடுக்கப்பட்டார்.
இதே போல் லக்னோவில் உள்ள ஸீரோஸ் தேனீர் அங்காடி, திராவக வீச்சில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வொரு
வரும் வாழ்க்கைக்குப் பின் தாங்கமுடியாத வலியையும், வேதனை
களையும் படிக்கட்டாகக் கொண்டுதான் இந்த சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
தன்னுடைய 12 வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான சுனிதா கிருஷ்ணன் 'பிரஜ்வாலா' என்ற அமைப்பை ஏற்படுத்தி காவல் துறை மற்றும் சட்ட துறையுடன் இணைந்து பாலியல் கொடுமை
களுக்கு எதிராக போராடி வருகிறார். இவர் 2014 நவ., 24ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த விழாவில், 'நெல்சன்
மண்டேலா கிரகா மைகேல்' புதுமை விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர்தான்.
உறுதி கொண்ட மலாலா
'பெண்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும்' என ஆழமாய்ச் சொல்லிஅதற்கு பரிசாக பயங்கரவாதிகளால் சுடப்பட்டார் பாகிஸ்தானிய சிறுமி மலாலா. குருதி சிந்தினாலும் உறுதியில் மாறாத மலாலா இன்றளவும் பெண் கல்விக்காக போராடும் இளம் போராளியாகவும், இளம் வயதில் நோபல் பரிசை வென்ற சாதனை
யாளராகவும் இருந்து வருகிறார்.
தாயின் கருவறையில்
உறங்கிய காலமும், தந்தையின் தோள்களில் மயங்கி உறங்கிய
காலமும் தவிர்த்து, தெருவில் விளையாடச் செல்வது முதல்
ஆரம்பிக்கிறது ஒரு பெண்ணை பாதுகாப்பாய் வளர்ப்பதின் பயம்.
'ஒரு பெண் தன்னந்தனியாக எந்த வித பயமும் இன்றி, நடுநிசியில் சாலைகளில் நடந்து செல்ல இயலுமோ அன்று தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்' என்கிறார் மகாத்மா காந்தி. பெண்ணில் உறுப்புகளின் உன்னதத்தைக் காணாமல், உயிரைச் சுமக்கும் பெண்ணின் உன்னதத்தைக் காணும் தலைமுறையை உருவாக்குவோம். உள்ளத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அம்பிகையாக போற்றப்படும் பெண்களின் மீதான அமில வீச்சு அறவே ஒழிய வேண்டும்.

எது வல்லரசு : ஒரு நாடு அணு ஆயுதங்களின் வளர்ச்சியால் வல்லரசாவதைவிட, பெண்களின் பாதுகாப்பில் வல்லரசாக மாறினால் இன்னும் சிறப்பு. 'பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி குடும்பத்தையே வளமாக்கும்'என்றார் பாரதிதாசன். குடும்பத்தை காக்கும் பெண்டிருக்கு முதல் தேவை தற்காப்பு தான் என்று சூளுரைப்போம். அன்னமூட்டும் போதே, 'பிள்ளைகளுக்கு அம்பிகையின் அம்சம்தான் பெண். பெண்மையை மதிக்கும் ஒருவன் தான் உண்மையான வீரன்' என அறிவூட்டுவோம். பெண்மைக்கு பாதுகாப்பான புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

-லாவண்யா ேஷாபனா
திருநாவுக்கரசு
எழுத்தாளர், சென்னை
shobana.thiruna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X