'காவல் அதிகாரிகள் 'டிஸ்மிஸ்':காரணம் தெரியுமா?'

Added : டிச 12, 2017
Share
Advertisement
 'காவல் அதிகாரிகள் 'டிஸ்மிஸ்':காரணம் தெரியுமா?'

அன்றைய தினம், சித்ராவும், மித்ராவும் பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றிருந்தனர். வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த இருவரும், ஸ்கூட்டரில் கிளம்பிய போது, அவர்களை கடந்து சென்றவர்கள், ஆர்.கே.நகர் தேர்தலை அலசிக் கொண்டிருந்தனர்.அதைக்கேட்ட மித்ரா, ''அக்கா, ஆர்.கே.நகர் எலக் ஷன் என்னாகும்; ரத்தாகிடும்னு பேசிக்கிறாங்களே...'' என, இழுத்தாள்.
''இப்போதைக்கு பணமழை பொழிய ஆரம்பிச்சிருக்கு. ஆளுங்கட்சி ஜெயிக்குதோ, இல்லையோ, எப்ப... இந்த ஆட்சி கவிழும் என நம்மூர் அதிகாரிங்க ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. எந்த அதிகாரிய சந்திச்சாலும்... இன்னும் மூணு வருஷத்துக்கு தாங்காதுங்க... 2018ல மாற்றம் வரும்னு, ஆரூடம் சொல்லிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''புதுசா வந்துருக்கிற போலீஸ் கமிஷனர், துணிச்சல்காரர்தான் போங்க... சொன்னபடி ப்ரூக்பாண்ட் ரோட்டை இரு வழிப்பாதை ஆக்கிட்டாரே,'' என, 'சர்ட்டிபிகேட்' கொடுத்தாள் மித்ரா.''ஆமாப்பா... டூவீலரிலும், காரிலும் போறவங்க ரொம்ப சந்தோஷப்படுறாங்க. பூ மார்க்கெட், காந்திபுரம் ஏரியாவுல, 'டிராபிக்' குறைஞ்சிருக்கு. தப்புக்கணக்கு போட்டு, திரும்பவும் பாதைய அடைச்சிடக்கூடாது,'' என, சூசகமாகத் தெரிவித்தாள் சித்ரா.
''வில்லங்கம் வெளியே தெரிஞ்சு, ஊர்க்காவல் படையை சேர்ந்த ரெண்டு அதிகாரிகளை வெளியேத்திட்டாங்களாமே...'' என, கொக்கியை போட்டாள் மித்ரா.''ஒனக்கும் தெரிஞ்சு போச்சா...'' என்றபடி, ''நம்ம மாவட்ட ஊர்காவல் படையில துணை ஏரியா கமாண்டரா ஒரு 'லேடி'யும், ஏரியா கமாண்டரா ஒருத்தரும் வேலை பார்த்தாங்க. ரெண்டு பேருமே தங்களோட அதிகாரத்தை 'தேவை இல்லாத இடங்கள்ல' பயன்படுத்தி இருக்காங்க...'னு மேட்டரு லீக் ஆச்சு.''இந்த விஷயம் கூடுதல் டி.ஜி.பி., அளவுக்கு போயிருச்சு... விசாரிச்சதுல, உண்மைன்னு தெரிஞ்சதும், 'டிஸ்மிஸ்' பண்ணிட்டாங்க. ரெண்டு பேரும், அரசு சார்ந்த ஆவணங்களை திரும்ப ஒப்படைச்சு கையெழுத்து போட்டுட்டாங்க...'' என்றாள் சித்ரா.''இன்னொருத்தரு, கையெழுத்தே போடாம, டபாய்க்கிறாராமே...'' என, இழுத்தாள் மித்ரா.''அவரா... அவர் அப்படித்தான். எப்பக்கேட்டாலும், என்னோட டேபிளில் எந்த பைலும் 'பெண்டிங்' இல்லீங்க. டேபிளுக்கு வந்தா, கையெழுத்துக் போட்டுக் கொடுத்திடுறேன்னு சொல்வாரு...''''அப்புறம் என்ன...? கையெழுத்திட மாட்டேன்னு சொல்லலையே... '' என, வம்புக்கு இழுத்தாள்.''ஆனா... அவரு... கமிஷன் வாங்குறதுல கறார் பேர்வழின்னு சொல்றாங்க... கமிஷன் இல்லீன்னா... டேபிளுக்கு பைல் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காராம். அதனால, பைல் எடுத்துட்டு போறதுக்கு, அதிகாரிங்களே ரொம்ப தயங்குறாங்க... '' என சித்ரா சொல்வதற்கும், ஆர்.எஸ்.புரத்துல இருக்கற அதிகாரிங்க குடியிருப்பை 'கிராஸ்' செய்றதுக்கும் சரியாக இருந்தது.
ஆர்.எஸ்.புரத்துக்குள் நுழைந்ததும், ''மாதிரி சாலை அமைக்கப் போறதா சொன்னாங்களே... என்னாச்சு... '' என, நோண்டினாள் மித்ரா.''மரங்களை வெட்டாம... மாதிரி சாலை அமைக்கிறதுக்கு, புது வடிவமைப்பு செஞ்சிருக்காங்க... மதிப்பீடு அதிகமாகும் போலிருக்கு. கூட்டி, கழிச்சு கணக்குப் போட்டுக்கிட்டு இருக்காங்க... '' என, சித்ரா சொன்ன போது, குறுக்கிட்ட மித்ரா, ''அப்படியே, கமிஷனயும் சேர்த்துக்கச் சொல்லுங்க... அப்புறம்... அதுக்காக... 'பில்' சேங்ஷன் செய்யாம இழுத்தடிப்பாங்க... '' என, கிண்டலடித்தாள்.''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன்... டில்லிக்காரரை பாடாப்படுத்துறாங்களாமே... 'ஒர்க்' சுத்தமா இருக்கும்; 'கமிஷன்' எதிர்பார்க்காதீங்கன்னு, ஆரம்பத்திலேயே சொல்லியிருக்காங்க. இப்ப காரணம் சொல்லாமலேயே, நாட்களை கடத்திக்கிட்டு இருக்காங்க... '' என்றாள் சித்ரா.''கமிஷன் சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. 'பிரைவேட் ஸ்கூல்' நடத்துவறங்க, ரூ.25 ஆயிரம் கொடுக்கனும்னு, கல்வித்துறை அதிகாரி உத்தரவு போட்டிருக்காங்க. ஏன்... எதுக்குன்னு... ஸ்கூல் நடத்துறவங்க கொந்தளிச்சதும்... பிரச்னை பெரிசானா... சிக்கலாயிடும்னு பயந்துபோன அந்த 'லேடி' அதிகாரி, பிளஸ் 1 எக்ஸாம் நடக்கப்போற ஸ்கூல தேவையான வசதிய நீங்களே செஞ்சு கொடுத்துடுங்கன்னு ஜகா வாங்கிட்டாங்க... '' என்றாள்.''ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, காசு பறிக்கிறதுல, அரசு அதிகாரிகளை மிஞ்ச முடியுமா... '' என்ற சித்ரா, ''அரசு மருத்துவமனையில இருக்கற சில டாக்டர்களால, ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுது... '' என, அங்காய்த்தாள்.''அப்படி, என்னக்கா, நடந்திருச்சு...''
''புற்றுநோயால பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிய, ஜி.எச்.,க்கு அழைச்சிட்டு வந்திருக்காங்க. இங்க, அந்த வசதி இல்ல; சென்னைக்கு போகணும்னு சொல்லி இருக்காங்க. பெத்தவங்கள்ட்ட வசதி வாய்ப்பு ரொம்ப கம்மி. '108' ஆம்புலன்ஸ் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க.''ஆம்புலன்ஸ் 'ரெடி'யாகியும், கையெழுத்திட்டுக் கொடுக்க, அங்க இருந்த டாக்டர் மறுத்துட்டாரு. 'அட்மிட்' ஆன அன்னைக்கே, சென்னைக்கு பரிந்துரை செஞ்சி அனுப்ப முடியாதுங்கன்னு, நொண்டிச்சாக்குச் சொல்லி, கையெழுத்திடாம நோகடிச்சிருக்காரு. இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்தரவேலுவுக்கு தகவல் சொன்னதும், அவரே வந்து, கையெழுத்திட்டு, சென்னைக்கு அனுப்பி வச்சாங்க...'' என்றாள் சித்ரா.''இப்ப வரவர பிரைவேட் ஆஸ்பத்திரியிலயும் கொடுமை தாங்கலக்கா... '' என, பொங்கினாள் மித்ரா.''என்னாச்சுப்பா.... ''''நம்மூர்ல... கொச்சின் சாலையில இருக்கற அந்த ஆஸ்பத்தியில, நோயாளிகளிடம் 'கேர்' எடுத்துக்கிறது இல்ல... பர்ஸ்ல இருக்கற பணத்தை ராத்திரி நேரத்துல திருடிடுறாங்க''''என்னப்பா சொல்ற... இப்படியுமா, செய்வாங்க... ''''ஆமாக்கா... ஒரு நோயாளி, 11 ஆயிரம் ரூபாய் வச்சிருந்தாரு. ரூ.9 ஆயிரத்தை திருடிட்டாங்க. மறுநாள் உறவுக்காரங்க பிரச்னை செஞ்சதும் 'டாய்லெட்' பக்கத்துல, கீழே கிடந்துச்சுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்திருக்காங்க. 'சிசி டிவி' கேமரா பதிவை பார்த்து, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கணும். ஆனா, கண்டுக்காம விட்டுட்டாங்க...'' என, நொந்து கொண்டாள் மித்ரா.அப்போது, வீட்டை வந்தடைந்திருந்தனர். ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் சித்ரா.'டிவி'யை 'ஆன்' செய்ததும், 'லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது' என, செய்தி ஒளிபரப்பானது.அதைக்கேட்ட சித்ரா, ''நம்ம மாவட்டத்துல, சூலுார் தாலுகாவுல கரன்சி மழை பொழியுதாமே... ஏகப்பட்ட புகார் வந்துருக்குன்னு சொல்றாங்க...'' என்றாள்.
''ஆமாக்கா... அரசாங்க ஆபீசுக்கு போறதுன்னா, பை நிறைய பணம் கொண்டு போகணும்போல. இலவச பட்டாவுக்கு ரூ.25 ஆயிரம்; பட்டா பெயர், முகவரி மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம்; இருபது வருஷத்துக்கு மேல அரசாங்கா நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிக்கு, அனுபவ சுவாதீனம் செஞ்சு, 'அயன்' பட்டா வழங்குறதுக்கு ரூ.3 லட்சம்னு, அறிவிப்பு பலகை வைக்காத குறை...''பண மழையில கொழிச்ச சூலுார்காரர், அரசியல்வாதிகிட்ட பேரம் பேசியிருக்காரு. பேரம் பேசுனதை பதிவு செஞ்சு, கலெக்டருக்கு முன், ஒலிபரப்பி இருக்காங்க. விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல, 'சஸ்பெண்ட்' செஞ்சிடுவாங்கன்னு சொல்றாங்க... '' என்ற மித்ரா, ''பக்தவச்சலம்னு, என்னோட சொந்தக்காரர வீட்டுக்கு அடுத்தவாரம் போகணும்'' என்று, சம்மந்தமேயில்லாமல் பேசினாள்.
''பணத்தாசை யாரை விட்டது. நம்மூரைச் சேர்ந்த உணவு கலப்பு தடுப்பு பிரிவு அதிகாரிங்க. மாசமானா... அன்னுாருக்கு 'விசிட்' அடிக்கிறாங்க... இலவச அரிசிய மாவு போல் அரைச்சுக் கொடுக்கிறீங்க. ஒங்க மேல கேசு போடப்போறோம்னு சொல்லி, மாமூல் கேட்டு மெரட்டுறாங்க. மாவு மில் நடத்துறவங்க புலம்பிக் கிட்டு இருக்காங்க... '' என்றாள் சித்ரா.''இதெல்லாம் சாதாரண விஷயம்க்கா... குருடம்பாளையம் ஊராட்சியில, சோலார் விளக்கு பொருத்துனதுல... பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துருக்கு கீழ இருந்து மேலதிகாரி வரைக்கு எல்லாருமே 'கமிஷன்' வாங்கியிருக்காங்க... தணிக்கைத்துறை அதிகாரிங்க ஆய்வு செஞ்சு, தப்பை கண்டுபிடிச்சிட்டாங்க... ஆனா, இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கல... '' என்றாள் மித்ரா.''கோர்ட்டுல வழக்கு போட்டும் கூட ஒன்னும் ஆகலை. இனி என்னாகும்னு பார்ப்போம்,'' என, புதிர் போட்டாள் சித்ரா.''என்னக்கா... என்ன... சொல்ல வர்றீங்க...''''வேற ஒருத்தரோட பிறந்த தேதி, 'எம்ப்ளாய்மென்ட்' நம்பர்ல, நம்ம கார்ப்பரேஷன்ல ஒரு அதிகாரி வேலை பார்க்குறாருல்ல. குறுக்கு வழில பதவிக்கு வந்துருக்காருன்னு வழக்கு போட்டிருக்காங்க.
''அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிச்சு, 12 வாரத்துக்குள்ள நடவடிக்கை எடுக்கச் சொல்லி, துறை செயலருக்கு கோர்ட் உத்தரவிட்டு இருக்கு... என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல... மாநகராட்சியில இருக்கற அதிகாரிங்க வட்டாரம் ரொம்ப உஷாரா கவனிச்சிட்டு இருக்காங்க... '' என்றாள் சித்ரா.
''எதுக்கு... அந்த பதவிய கைப்பத்துறதுக்கா...'' என, கிண்டலடித்தாள் மித்ரா.''சுந்தர்ராஜனை அவ்ளோ சீக்கிரமா பதவிய விட்டு இறக்கிட முடியுமா, என்ன...'' என்ற சித்ரா, ''இல்லீகலா... 'சரக்கு' விக்குறது ரொம்ப அதிகமாயிடுச்சாமே... '' என, கேட்டாள். ''ஆமாக்கா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, போத்தனுார் போலீஸ்காரங்க ரோந்து போனப்ப, ஏகப்பட்ட 'சரக்கு' பாட்டில்கள பறிமுதல் செஞ்சாங்க; ரெண்டு பேர் மேல வழக்கு பதிஞ்சிருக்காங்க. ஆனா, 'அம்பி'யா இருக்கற ஆளுங்கட்சிக்காரர் தப்பிச்சிட்டாராம்... '' என்றாள் மித்ரா. அப்போது, 'டிவி'யில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை பற்றிய செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X