மாணவ மனிதர்களை உருவாக்குவோம்!| Dinamalar

மாணவ மனிதர்களை உருவாக்குவோம்!

Added : டிச 14, 2017

வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளை, மாணவ மனிதர்களாக மாற்றிச் சமுதாயத்துக்கு அனுப்பி வைக்கும் சிறந்த பணியாளர்களே பள்ளி ஆசிரியர்கள்.முன்பு, ஆசிரியர் பணி தன்னலமற்ற தொண்டு, சேவை எனக் கருதப்பட்டது. இப்போது, இது ஒரு தொழில், ஒரு பணி அவ்வளவுதானா?

1. பெற்றோர்கள், குழந்தைகளைத்தான் பள்ளிக்கு அனுப்புகிறார்களா?
2. ஆசிரியர்கள், அக் குழந்தைகளை மாணவ மனிதர்களாக உருமாற்றிச் சமுதாயத்துக்கு அனுப்புகிறார்களா?

இந்த இரண்டு வினாக்களுக்கும் விடை 'இல்லை' என்பதே.கற்பித்தலும் கற்றலும் முடிவற்ற
வாழ்வியல் செயற்பாடுகள். வீடு என்பது, மாலை முதல் இரவு வரை செயல்படும் பள்ளி. பள்ளி என்பது, பகல் முழுவதும் செயல்படும் வீடு. வீடும் பள்ளியும் இப்படியாகும் வரை மேற்கண்ட வினாக்களுக்கு விடை 'ஆம்' என்று, என்றுமே வராது.இக்காலத்தில் வீட்டிலும் பள்ளியிலும் என்னதான் நடக்கின்றன? பெற்றோர், குழந்தை, ஆசிரியர் என்ற இந்த முத்தரப்பினரில்,
எத்தரப்பினருள் சிக்கல் உள்ளது? 'முத்தரப்பினருள்ளும் உள்ளது' என்பதுதான் கசப்பான
உண்மை.

வீட்டுச்சூழல் : குழந்தைகள், வீட்டுச் சூழலில் அறியநேர்ந்த தீயவை அனைத்தையும் பள்ளியில்தான் செயல்படுத்தி மகிழ்கின்றனர். குழந்தைகள், பள்ளியில் கற்றுக்கொண்ட மிகப் பல நல்லவற்றுள் மிகச் சிலவற்றையே வீட்டில் பயன்படுத்தி வாழ்கின்றனர். குழந்தைகளின் செயல்களைக் கண்காணிக்கும் பொறுப்பு யாருக்கு? கற்றுக்கொடுக்கும் பணியோடு இணைந்த பணிதான் கண்காணிக்கும் பொறுப்பும். ஆசிரியர்களே இப் பொறுப்பினை ஏற்க வேண்டும்.அப்படியானால், வீட்டில்? பெற்றோர்களும் சிலநேரங்களில் தங்கள் குழந்தைகளிடம் ஆசிரியர் களாகவே நடந்து கொள்ளவேண்டும். அப் பொறுப்பிலிருந்து பெற்றோர் தவறினால், அவர்களின்குழந்தைகளை வருங்காலத்தில் சமுதாயம் தண்டிக்க நேரிடும்.மரத்தடியில் அமர்ந்திருப்போருக்கு, மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்துகொண்டு கற்பிக்கும்போக்கு உருவாகி வருகிறது. வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்து நிலத்தில் உள்ள மேடு, பள்ளங்களைக் கடக்க முடியுமா? ஒவ்வொரு குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கற்பிக்காமைதான்

கல்விமுறையின் பெரும்பிழை. : கடல்நீரைக் கடலுக்குள் வைத்து கொண்டே நன்னீராக மாற்ற
முடியாது. எல்லா இடத்திலும் கூட்டுக்கற்றல் சூழல் பயன் தராது. மனதைப் பக்குவப்படுத்தத் தனிநபர் கற்றல் சூழல் சிறந்தது. கற்பித்தல் என்பதே, அறிவுப் பங்கீடுதானே! அதனைக்
கூட்டத்தில் பங்கிட்டால் என்ன? மறைவாகப் பங்கிட்டால் என்ன? 'பங்கீடு சரிசமமாக நடந்தேற வேண்டும்' என்பதுதானே பொதுக்கல்வியின் இலக்கு!

அறிவு வளர்க்க வேண்டும் : பள்ளிகள் குழந்தைகளின் அறிவை, நாளொன்றுக்கு குழந்தைகளின் தலைமுடி வளரும் அளவுக்காவது நாள்தோறும் வளர்க்க வேண்டும். குழந்தைகள் வாரந்தோறும் அடையவேண்டிய, 'குறைந்தளவு அறிவு வளர்ச்சி'யைப் பொதுக் கல்வித்துறை வரையறைசெய்து, நிர்ணயம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அதனை இலக்காகக்கொண்டு, அதற்கு
ஏற்பத் தன் தனித்துவமானகற்பித்தலை நிகழ்த்த வேண்டும்.எரியும் ஆயிரம் மெழுகுவர்த்திகளின் மீதுதான் ஆசிரியர்களின் சிந்தனை குவிகிறது. அவற்றுள் அணையும் சில மெழுகுவர்த்திகளின்மீதும் ஆசிரியர்கள் தனிப் பார்வையைச் செலுத்த வேண்டும். 'அணைந்த சுடர்' என்பது,
மீண்டும் பற்றிக்கொள்ள முடியாத சுடரல்ல; மீண்டும் பற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படாத சுடர்.பள்ளியை விட்டு வெளியே வரும் மாணவ மனிதர்கள், எதைப் பற்றியும் மூன்று நிமிடங்கள்
பேசவும் ஒரு பக்கம் எழுதவும் அது தொடர்புடைய இரண்டு முதன்மையான நுால்களை அல்லது மூன்று வலைதளங்களைப் பரிந்துரைக்கவும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய மாணவ மனிதர்களை உருவாக்காத கல்வி உண்மையிலேயே 'போலிக்கல்வி' தான். பயனற்ற மருந்துகளால் நோய் நீங்காது. புதிய நோய்களே தோன்றும். போலிக்கல்வி பயின்று, உடலால்மட்டும் வளர்ந்து வெளியேவரும் மாணவ மனிதர்களைச் சமுதாயம் ஏற்பதில்லை.

பள்ளி என்பது என்ன'பள்ளி' என்பது, நெடும் பயணத்தின் வழியிடைத் தங்கும்இடம் அல்ல! இதனை பெற்றோர், குழந்தை, ஆசிரியர் என்ற முத்தரப்பும் புரிந்து கொள்ளவேண்டும். வாழ்வெனும் நெடும் பயணத்தின் நோக்கத்தையும் பாதையையும் எதிர்ப்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறனையும் கற்றுக்கொடுத்து, முன்பயிற்சியை வழங்கி, வழியனுப்பும் பட்டறைதான் 'பள்ளி'.நவீனச் சமுதாயம் எதிர்பார்க்கும், விரும்பும் வகையில்தான் மாணவ மனிதர்களைப் பள்ளிகள் உருவாக்குகின்றனவா? நேரங்காலம் பார்க்காமல், கடினமாக உழைக்கும் பணியாளர்களை நவீனச்சமுதாயம் விரும்புவதில்லை.எளிதான வழிகளில், விரைவாகப் பணியாற்றும் புத்திசாலிப் பணியாளர்களுக்கே இங்கு முதல் மரியாதையும் கிடைக்கும். அத்தகைய மாணவ மனிதர்களே வெற்றியாளர்கள். மற்றவர்கள் 'வேடிக்கை பார்க்கும் கூட்டம்' மட்டுமே. இத்தகைய மாணவ மனிதர்களை உருவாக்காதபள்ளிகள், நவீனச் சமுதாயத்துக்குதிறனற்ற பணியாளர்களையும் இளங்குற்றவாளிகளையும் தான் அனுப்பும். என் பன்னிரண்டாண்டுகல்விப் பணியில் நான் கற்றுக்கொண்டது, 'எதையும் யாருக்கும் யாரும் கற்றுக்கொடுக்க முடியாது; எதையும் யாருக்கும் யாரும் கற்றுக் கொள்ள வழிகாட்ட மட்டுமே முடியும்' என்பதைத்தான்.

ஆசிரியர் மாற வேண்டும் : காற்றடிக்கும்போது பந்தத்தைக் கொளுத்த முடியாது. ஓர் அரவணைப்புத் தேவை. அதைக் குழந்தைகள் ஏற்க வேண்டும். அதன் பின்னரே, கற்பித்தல் வழியாகக் கல்விச்சுடரை ஏற்றமுடியும். தன்னோடு ஒரு சக பயணியாக ஆசிரியர் மாறாத வரையில்
மாணாக்கருக்குக் 'கல்வி' என்பது, வேப்பங்காய்தான். அன்பற்ற ஆசிரியர்களின் அறிவார்ந்த
கற்பித்தல் என்றுமே மாணாக்கர் மத்தியில் வெறுப்பையே பெருக்கும்.இத்தகைய சூழலில், மாணாக்கர்கள் தன்னில் மெல்லப் பற்றும் அறிவுச் சுடரைத் தாமே ஊதி, ஊதி அணைத்துக்கொள்வர். இது ஒருவகையில் அறிவுத் தற்கொலைதான்.எந்தக் குழந்தையும் வெற்று
மனத்துடன் பள்ளிக்கு வருவதில்லை. நிறைந்து வழியும் குப்பை தொட்டியில் மேலும் மேலும்
நல்லவற்றைக் கொட்டமுடியாது. முதலில் அதிலிருக்கும் தேவையற்றதை நீக்குங்கள். பின்னர் அதில் தேவையானதைத் தேவையான அளவுக்கு மட்டும் நிரப்புங்கள். மாணாக்கருக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குங்கள். எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற
அறிவுத் தெளிவைப் புகட்டுங்கள். 'மீன் பிடிக்க மட்டுமே இங்குக் கற்றுத்தர வேண்டும்'. ஆசிரியர்கள் மாணாக்கருடன் இணைந்து பயணிக்காதவரை, மாணாக்கர்கள் ஓர் அடிகூட முன் நகரமாட்டார்கள்.

கற்றலில் மாற்றம் : ஒவ்வொரு தலைமுறை மாணாக்கரும் ஒவ்வொருவிதம்தான். தலைமுறைக்கு ஏற்பக் கற்றுக் கொடுக்கும் முறையில் மாற்றம் தேவை. மாறாத கற்றல் முறையால், எந்த மாற்றத்தையும் மாணாக்கரிடம் கொண்டுவர முடியாது. தேசியக் கல்விக்கொள்கை இதனை கருத்தில்கொண்டுதான் வகுக்கப்படுகிறது. ஆனால், அது நடைமுறைக்கு வருவதற்குள் ஒரு தலைமுறை கடந்துவிடுகிறது. ஒட்டுமொத்தத்தில், இந்தியக் கல்வி முறையே ஒருதலைமுறைக் காலஅளவில் பின்தங்கியுள்ளது.தொடர்ந்து படிக்கும் ஆசிரியராலேயே கற்றல் முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். கற்பித்தலில் எளியமுறை, கற்றலில் எளியமுறை என்பன, குறுக்குவழிகள்தான். ஆனால், அவை குற்ற வழிகளல்ல. புதிய தலைமுறைக்குப் புதிய கற்றல் முறைதான் ஏற்புஉடையது. இதனைப் புரிந்துகொள்ளாத, வளைந்து
கொடுக்காத ஆசிரியர்கள் கல்விப் பெருங்காற்றால் புறந்தள்ளப் படுவார்கள்.
தற்போது தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. மனிதனிலிருந்து மனிதநேயத்தைப் பறிக்கும் அதன் தந்திரத்திலிருந்து மனிதனைக் காப்பதும் மனிதநேயத்தை வளர்ப்பதும் ஆசிரியரின் கடமைகளுள் ஒன்று.

போலி நட்பு: அன்று, வெட்டவெளியில் தன் வயது நண்பர்களோடு, ஓடி விளையாடித் திரிந்த குழந்தைகள் அனைவரும் உடற்திடத்தில் சிறந்து, நட்பின் உறவால் உயர்ந்து, அகம் மகிழ்ந்து வாழ்ந்தனர்.இன்று, கைப்பேசியோடு தனித்து, மறைவில் அமர்ந்து, தலைகுனிந்து, முகமறியாத, ஆணா? பெண்ணா? எனத் தெரியாத, பொய்ப்பெயருடைய போலிநட்புக்கு எண்ணற்றத் தகவல்களை அனுப்பியும் பெற்றும் வருகின்றனர். இரவில், நேரலையில் அவர்களோடு மெல்லப் பேசிச்
சிரிக்கின்றனர். இவையெல்லாம் ஒருவகையான மன நோயின் தொடக்கமே! தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை முட்டாள்தனமாகப் பயன்படுத்தும் இளந்தலைமுறைக்கு, நல்வழிகாட்டும்
அறிவாளிகளாக ஆசிரியரும் பெற்றோரும் இருக்கவேண்டும்.கடமை தவறிய பள்ளிகளால்
உருவாக்கப்பட்டு நவீனச் சமுதாயத்துக்கு அனுப்பப்படும் மாணவ மனிதர்கள், ஓட்டப்பந்தையம் முடிந்த பின்னர் ஓடத் தொடங்கிய முட்டாள்கள். அவர்களும் ஒருகாலத்தில் சாதிப்பார்கள்தான்.
அவர்களின் சாதனைகள்அனைத்தும் காலந்தவறிய,யாராலும் கண்டுகொள்ளப்படாத வெற்றிக் குப்பைகள்தான். காலந்தவறிய சாதனையும் ஒருவகையில் வேதனைதான். அவர்கள் தோல்வியடைந்த சாதனையாளர்கள் தான். அவர்கள் அனைவரும், 'இப்படி இருக்கக் கூடாது' என்பதற்கான முன்மாதிரிகளாகவே எதிர்காலத்தில் எஞ்சுவார்கள்.இனிமேலாவது, முத்தரப்பினரும் இணைந்து முயன்றால்தான், புதிய தலைமுறையினர் புதிய சாதனைக்கான இலக்குகளை நோக்கி, அறிவுப் பாதையில் வெற்றிநடைபோடுவர்.

-முனைவர் ப. சரவணன்
ஆசிரியர், லட்சுமி பள்ளி மதுரை. 98945 41523

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X