கொஞ்சம் செவி கொடுத்து கேளுங்களேன்!| Dinamalar

கொஞ்சம் செவி கொடுத்து கேளுங்களேன்!

Added : டிச 15, 2017

செல்வத்துள் சிறந்த செல்வம் செவிச் செல்வமென வள்ளுவம் கூறுகிறது. கண்களை விடவா செவி சிறந்தது என்று கேட்கத் தோணலாம். வாய் வழியாகக் கூறப்படும் தகவல்களை உள் வாங்கி உடனடியாக மூளைக்கு சென்று பரப்பும் செவிகள், சில சமயங்களில் இதயத்தைத் தொடுவதற்கும் காரணமாக உள்ளன. அப்படியான காரணத்தினாலேயே செல்வத்துள் எல்லாம் தலையாக செவி சிறப்பிக்கப் படுகிறது. அதனால் தான் பாரதி 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாடினார்.செவி வழியான தகவல்களே பல்லாயிரம் கி.மீ., துாரம் சென்று விடுகிறது. செவி வழியாக கேட்ட புராணங்களும்,பாடல்களுமே பின்னர் எழுத்து வடிவம் கொண்டன.வெளியில் ஏற்படும் ஓசையைவாங்கி மூளைக்குப் பாய்ச்சுவது செவியாகும்.

மன ஓசை : மற்றவர்களின் மன ஓசைகளைக் கேட்கும் செவி உடைய மனிதர்களே கருணைக்குரியவர்களாக இருக்கின்றனர். பூப் பூக்கும் ஓசையைக் கேட்பது போல அது ஒரு மென்மையான தருணம். அந்த தருணங்களை உணர்தலே கேட்டலின் சிறப்பாகும். அப்படி இல்லாத செவிகளை கேட்கப் படாத செவியாகவே கூறப்படுகிறது.எங்கள் கோரிக்கைகளுக்கு யாரும் செவி கொடுக்கவே இல்லை என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். இந்த செவி கொடுத்தல் என்பதற்கு ஏன் மனித மனம் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது? ஏனென்றால் உலகில் வாழும் அனைவருக்கும் பிறரிடம் சொல்வதற்கும், பகிர்வதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது.அதனால் தான் பகிரப்படும் இன்பம் இரட்டிப்பாகவும்,பகிரப்படும் துன்பம் பாதியாகக் குறைவதாகவும்
சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த வெற்றியாளர்களிடம் உங்கள் வெற்றியின்
ரகசியம் என்ன என்று கேட்டால் நான் வாழ்வில் நம்பிக்கையற்று இருந்த போது தன் கவலைகளைக் கேட்டு நம்பிக்கை ஏற்படுத்திய மனிதர்களே வெற்றி அடையக் காரணம் எனக் கூறுவதுண்டு. ஆறுதல் சொல்வது நீயென்றால் அழுவது கூட சுகம் தான் என்ற கவிதை
வரிகள் கூட நிதர்சன நோக்கு தான்.நம் கவலைகளை கேட்பவர்கள் யாராவது இருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர் களிடமும் உண்டு. இதற்கு யாரும் விதி விலக்கில்லை. 'என்பார்வையில்' வந்த எனது கட்டுரையைப் பார்த்து விட்டு வந்த பெரும்பான்மை விமர்சன கடிதங்கள் வயதான பெரியவர்களிடமிருந்தே. தங்கள் துயரங்களையும், கஷ்டங்களையும் அந்த கடிதங்களில் பகிர்ந்து இருந்தார்கள்.அப்போது தான் நான் யோசித்து பார்த்தேன். அறிமுகம் இல்லாத என்னிடம் எண்ணங்களை எழுத்தில் வடித்த இந்த முதிய
குழந்தைகளின் வார்த்தைகள் இது வரை கேட்கப் படாத மொழியாக இருந்திருக்கிறதே..இது போன்ற பல மனிதர்களின் மவுனங்கள் உடை படுவது எப்போது? நாம் ஏன் கேட்பவர்களாக இல்லை?

பேச்சை அடக்கலாமா : பள்ளிகளில் குழந்தைகள் பேசுவதைக் கேட்க யாரும் தயாரில்லை. வாயை மூடு என்ற அடக்கு முறை வீடுகளிலும்! விளைவு குழந்தைகள் தொலைக்காட்சிகளிலும், அலைபேசிகளிலும் அடிமையாகி விடுகின்றனர்.வீட்டில் மனைவியின்
பேச்சைக் கேட்காத கணவனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் மனைவி,இறுதியில் நாடுவது குடும்ப நல நீதி மன்றத்தை. ஏதோ சொல்ல வரும் மனைவியின் கருத்தை செவி மடுப்பதில் என்ன கெட்டு விடப் படுகிறது. நமக்கு பேசக் கற்றுக் கொடுத்த பெற்றோரை வயதான காலத்தில் தொண தொணன்னு பேசாதப்பா..என்று அடக்கும் நாகரீக தலைமுறையாக நாம். திசைகள்
தெரியாமல், வலிகளோடே பயணம் செய்து கொண்டு இருக்கும் மனிதர்கள் நம்முடனே இருக்கிறார்கள். அவர்களின் குரல்களை கேட்பவர்களாக நாம் இருக்கலாமே.வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தொலைத்தவர்களில் பலருக்கு நாம் செவி சாய்த்தோமென்றால்அவர்களின் வாழ்வை துளிர்க்க செய்ய முடியம் தானே?அன்பால் சூழப்பட்டது தானே இவ்வுலகு! மற்றவர்களுக்கு எதைச் செய்கிறீர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள் என்ற இறைவனின் குரல் கேட்கிறது தானே!

ஆறுதல் : இறந்த வீடுகளில் துக்கம் விசாரிக்க செல்லும் போது இறந்த உறவினர்களிடம் துக்கம்
விசாரிப்பது கூட இந்த கேட்டலின் வகை தான். உன் துக்கத்தைக் கேட்க நானிருக்கிறேன் என்ற
ஆறுதல் தான் கேட்டலின் முக்கிய அம்சமாகும். நான் படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது.
கணவனை இழந்த இளம் பெண் ஒருத்தி தினமும் இரவில் தன் சோகங்களை எல்லாம் அவள் வீட்டில் உள்ள சுவரிடம் பகிர்ந்து கொள்வாளாம். ஒரு நாள் அந்த சுவர் இடிந்து விழுவதாக கதை
முடியும். அத்துணை கஷ்டங்களைத் தாங்காமல் அந்த சுவரே இடிந்து விழுகிறதென்றால் எத்தகைய வலிகள் அவளிடத்தில் இருந்திருக்கும் என்று யோசித்துப்
பாருங்கள். இதைத் தான் புரட்சி கவிஞன் அழகாகக் கூறுவான்.
'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே! இங்கு வேரில் பழுத்த பலா' என்று. ஒவ்வொரு
வீடுகளும் இப்போதெல்லாம் மவுனத்தை சுமந்து கொண்டு களை இழந்து காட்சியளிக்கிறது.
திண்ணைகளின் காதுகள் எல்லாம் அறுத்தெறியப்பட்டதால் திண்டாட்ட வாழ்க்கையோடே நகர்கிறது மனித சமூகம். அப்பா சொல்வதைக் காது கொடுத்து கேட்காத மகன் அவரை அலட்சியம் செய்வதாக நினைத்துக் கொண்டு தன் வாழ்விற்கான நல்ல வழி
காட்டலை இழக்கிறான்.

மாமியாரின் அனுபவக் கருத்துக்களை கேட்கத் தயாரில்லாத மருமகள் தன் குழந்தைகளுக்கான வாழ்க்கைப் பாட அனுபவங்களை இழக்கிறாள்.கேட்டலுக்குத் தயாராய் இல்லாத இன்றைய தலைமுறை கூட்டங்களில் பேச முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
கேட்டலின் அவசியம்வள்ளுவன் கூட கற்றலின் கேட்டல் நன்று என்றும், செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப் படும் என்றும் கூறியதன் மறை பொருள் என்ன தெரியுமா?கேட்டல் தான். கோயில்களில் நம் குறைகளையும்,வேண்டுதல்களையும் கேட்கும் கடவுளை புராணங்கள்
தோடுடைய செவியோன் என்றே கூறுகிறது.

அம்மாவிடம் அவருக்கான அவசியத் தேவைகளைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். அவளுக்கான தேவைகள் என்று எதுவும் இருக்காது.அப்பாவிற்கு மாத்திரை தீர்ந்து போனதை மகனிடம் சொல்ல அம்மாவிற்கு உங்கள் செவி தேவைப்படலாம்.மனைவிக்கு தனது மாத விடாய் வலியைக் பகிர உங்கள் செவி தேவைப் படலாம்.பிள்ளைகளுக்கோ பள்ளியில் கூறிய
கதைகளைக் கூறுவதற்கு உங்கள் காதுகள் தேவைப் படலாம்.ஆண்களுக்கோ தன் அலுவலக விஷயங்களை பகிர தன் மனைவிகளின் காதுகள் அவசியப் படலாம்இப்படியாக நம் சமூகத்தில் யாரோ ஒருவருக்கு நம் காதுகள் தேவைப்படலாம்.காது கொடுப்போம். வலிகள் நிறைந்த மனிதர்களின் வலிகளுக்கு ஒத்தடமாய் நம் காதுகள் இருக்கட்டுமே.படைத்ததற்கான பிறவிப் பயனை நம் காதுகள் இப்படி அடையட்டுமே.

காதோரம் வந்து செல்லும் தென்றல்கள் நம் இதயத்தையும் வருடி விட்டுச் செல்லட்டுமே. காதுகளில் நுழையாத விஷயங்கள் நிறைய உண்டு நம் அனைவரிடமும்.காதுகளைப் பெரியதாக்குவோம்நல்ல விஷயங்களைக் கேட்க காதுகளைப் பெரியதாக்கிக் கொள்வோம். தீயவற்றைக் கேட்க நேரிடும் போது காந்தியின் குரங்கு பொம்மை தத்துவங்களில் ஒன்றான காது மூடும் பொம்மையைப் போல மூடிக் கொள்ளலாம். பள்ளி விட்டு வரும் பருவ வயதுப் பிள்ளை
களிடம் அன்றைய தின வகுப்பறை நிகழ்வுகளைக் கேட்க வேண்டும். நாம் கேட்கத் தயாராய்
இருந்தால் தான் பிள்ளைகள் பேசத் தயாராய் இருக்கும். பள்ளியில் ஆசிரியர்கள் கூறும் பாடத்தை நன்கு கவனித்துக் கேட்டாலே போதும். பாடங்களைத் திரும்ப படிப்பது இலகுவாகி விடும். கோயில்களில் ஆன்மிகச் சொற் பொழிவு, நல்ல கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள்
நடக்கும் இடங்களுக்கோ, நல்ல இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கோ நாம் சென்று கேட்பதோடு மட்டுமல்லாமல் நம் குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.மற்றவரைப் பேச விட்டுக் கேட்டு விட்டு அடுத்த படியாக நம் கருத்துகளைக் கூற வேண்டும் என்பதே அடிப்படை நாகரிகமாகும்.

காதுகளில் ரகசியம்: காதுகளில் சொல்லப் படும் ரகசியங்கள் நம் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்துகிறது. அவர் காதுல போட வேண்டியத போட்டாச்சு.மத்தத அவர் தான் பார்த்து செய்யணும் என்பதான உரையாடல்கள் கூட இந்த நம்பிக்கையை சார்ந்த்து தான். அவருக்கு பாம்பு காதுப்பா என்பதான பேச்சோ எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணர்வை மனிதர்களிடத்தில் ஏற்படுத்துவதாகவும், என்ன சொன்னாலும் காதில ஏற மாட்டேங்குதே என்பதோ
சலிப்புணர்வை ஏற்படுத்தும்உணர்வுகளால் ஆனவை என்பதையும் உணர முடிகிறது
அல்லவா? நல்ல உரைகளைக் கேட்பதின் மூலம் மனதில் நல்ல எண்ண அலைகள்
ஏற்படுகிறது. நல்ல இசையைக் கேட்கும் போது புத்துணர்வு உண்டாகிறது.நல்ல உரையாடல்களைக் கேட்கும் போதோ வார்த்தைகள் வசப் படுகிறது. வாழ்வு இனிதாக கேளுங்கள். பிறரின் வாழ்வையும் வளமாக்க செவி கொடுங்கள். இதனை செவி வழிச் செய்தியாக நினைத்து விட்டு விடாமல் இதயம் உணர்த்தும் செய்தியாக நினைவில் கொள்வோம்.
ம.ஜெயமேரி.
ஆசிரியை. ஊ.ஒ.தொ.பள்ளி.
க.மடத்துப் பட்டி.bharathisanthiya10@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X