ஒரு பாசக்கார தந்தையின் போராட்டம்...| Dinamalar

ஒரு பாசக்கார தந்தையின் போராட்டம்...

Updated : டிச 15, 2017 | Added : டிச 15, 2017 | கருத்துகள் (3)
ஒரு பாசக்கார தந்தையின் போராட்டம்...


ஒரு பாசக்கார தந்தையின் போராட்டம்...

பெற்ற மகளுக்காக இவர் படும் பாட்டை, மேற்கொண்டுள்ள போராட்டத்தை படித்தமாத்திரத்தில் யாருக்கும் கண்ணில் நீர் திரளும்


வெங்கடேசன் கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்.
எட்டாவது வரைக்கு மேல் படிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் பிழைப்பு தேடி சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்.

சென்னையில் ஒரு டாக்டர் வீட்டில் உதவியாளராக வேலை பார்த்தார் அந்த டாக்டர் வெளிநாடு போகும் போது வெங்கடேசனுக்கு ஒரு நல்லது செய்யவேண்டும் என்று விரும்பி கார் ஒட்டுவதற்கு கற்றுக்கொடுத்து அதற்கான லைசென்சும் எடுத்துக்கொடுத்தார்.
கார் ஒட்டுனராக சில இடங்களில் வேலை பார்த்தார், புவியரசி என்பவரை திருமணம் செய்தார், இந்த தம்பதியின் அன்பு மகளாக ஆர்த்தி பிறந்தார்.படு சுட்டியான ஆர்த்தி படிப்பிலும் கெட்டி.நன்றாக படித்தார் நன்றாகத்தான் இருந்தார்.

கல்லுாரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டு இருக்கும் போதுதான் அந்த பூதாகரமான பிரச்னை எட்டிப்பார்த்தது.வயிற்று வலி என்று துடித்தவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது பல்வேறு மருத்துவமனை பரிசோதனை செய்துவிட்டு லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய வில்சன் டிசீஸ் என்ற கல்லீரல் பாதிப்பு நோய் வந்துள்ளது என்ற குண்டை துாக்கி போட்டனர்.
இந்த நோய்க்கு மருந்து மாத்திரையே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் வாங்கவேண்டும், மாற்று கல்லீரல் பொருத்துவதற்கு பல லட்சம் செலவாகும் என்றனர்.ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு கூட அடுத்தவர் உதவியால் வந்த சூழ்நிலையில் ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும் எங்கே போவது உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இவ்வளவும் நடந்த போது வெங்கடேசன் சவுதி வேலையில் இருந்தார் குடும்ப கஷ்டத்தையும் கடனையும் அடைக்கவேண்டி வெளிநாடு போனவருக்கு மகளின் நோய்ச்செய்தி இடியாக இறங்கியது.
பாதியில் வேலையைவிட்டால் கடன் சுமை அதிகமாகும் தாங்கமுடியாத அழுத்தம்தரும் என்ற போதும் மகளின் அருகாமையில் தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து வேலையை விட்டுவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை மகள் புவியரசிக்கு தந்தையும் தாயுமாய் மட்டுமல்ல வாழும் தெய்வமுமாக திகழ்கிறார்.மாதக்கணக்கில் மகள் ஆஸ்பத்திரியில் இருந்த போதும் இவரும் அங்கேயே இருந்தார், வீட்டு வாடகை மற்றும் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஒட்டிவரும் இவர் பகலில் ஆட்டோ ஒட்டுவதும் இரவில் மகளுக்கு பாதுகாப்பாக இருப்பதுமாக மாற்று கல்லீரல் கிடைக்கும் வரை தொடர்ந்தது.
கல்லீரல் மாற்று சிகிச்சை முடிந்த அடுத்த நாற்பத்தைந்து நாட்கள் மகளை கண்ணின் மணியாக பார்த்துக் கொண்டார் இரவு 12 மணிக்கு ரத்த மாதிரி கொடுத்து நான்கு மணி நேரத்திற்குள் இதன் ரிசல்ட் வேண்டும் என்பார்கள் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி கெஞ்சி கூத்தாடி ரிசல்டுடன் வருவார் இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல நாள் அலைந்திருக்கிறார்.

எந்த லேப் இரவு முழுவதும் திறந்திருக்கும் உயிர்காக்கும் மருந்துகள் இருபத்திநான்கு மணிநேரமும் எங்கு கிடைக்கும் எங்கே விலை குறைவாக கிடைக்கும் ஆஸ்பத்திரியின் நடைமுறை என்ன என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படி.
இதன் காரணமாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க டாக்டர்களே இவரைத்தான் சிபாரிசு செய்வர் அது இப்போது வரை தொடர்கிறது.

ஆஸ்பத்திரிவாசம் முடிந்து வீட்டிற்கு வந்தாலும் மருத்துவ செலவு தொடர்கிறது அன்றாடம் ஐநுாறு ரூபாய்க்கு ஆட்டோ ஒடினாலே பெரிய விஷயம் இந்த வருமானத்தில்தான் வீட்டு வாடகை மின்சார கட்டணம் வீட்டு செலவு படிப்பு செலவை சமாளித்துவந்தார் இந்த நிலையில் வீட்டிற்கு கூட்டி வந்த மகளின் மருத்துவசெலவுதான் இப்போது இவரை பயமுறுத்துகிறது.
மருந்து மாத்திரை என்று ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கு மேல் செலவழிக்கவேண்டியுள்ளது.இதுவரை நான்கு லட்சத்திற்கு மேல் செலவழித்துவிட்டார் அவ்வளவும் கடன்தான். இதில் இவர் குடியிருக்கும் தெருக்காரர்களை கையெடுத்து கும்பிடவேண்டும் என்கிறார் ஏழை எளியவர்கள் என்றாலும் மனதால் அவர்கள் பெரும் பணக்காரர்கள் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கொடுத்து மகளும் நானும் சோர்வடையாமல் பார்த்துக்கொண்டனர்.

இவர்கள் அவ்வப்போது கொடுத்தையும் தாண்டி வாங்கிய கடன் நான்கு லட்ச ரூபாய்க்கான பயமுறுத்தும் அசல் மற்றும் வட்டி,என்னால் உங்க கஷ்டத்தை பார்க்கமுடியுதுங்க ஆனால் தாங்க முடியலீங்க என்று கண்ணீரும் கதறுலுமாக சொல்லும் மனைவி ,ஏம்ப்பா நான் உங்கள ரொம்பவே கஷ்டப்படுத்திறேன்லப்பா என்று சொல்லும் மகள்,கல்லுாரிக்கு கட்டண பாக்கி எப்ப கட்டப்போறீங்க? என்று கேட்டுவரும் கடிதம் என்று எல்லாவற்றையும் மனதுக்குள் வைத்து பூட்டிக்கொண்டு கிரீம்ஸ் ரோட்டில் ஆட்டோவுடன் காத்திருக்கிறார் வெங்கடேசன், நல்ல வாடிக்கையாளருக்காக மட்டுமல்ல, நல்லதொரு விடியலுக்காகவும்...
ஒரு சின்ன பிரச்னை வந்தால் கூட தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மாய்த்துக்கொள்ளும் கோழையான இந்த உலகத்தில், மகளுக்காக சகலத்தையும் இழந்தாலும் மறந்தாலும் துறந்தாலும் இன்னும் எத்தனை சோதனை வந்தாலும் மகளுக்காக சந்திக்க துணிந்த பாசக்கார தந்தையாக வெங்கடேசன் மனதில் தனித்து நிற்கிறார்.யாரிடம் போவது எவரிடம் கேட்பது என்ற திக்கு தெரியாமல் இருக்கும் இவருக்கு உதவவேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9941878329.

எல்.முருகராஜ்
-murugaraj@dinamalar.inWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X