chennai | லட்சுமியக்காகிட்டே போட்டோ எடுத்துக்குங்க...| Dinamalar

லட்சுமியக்காகிட்டே போட்டோ எடுத்துக்குங்க...

Updated : டிச 18, 2017 | Added : டிச 18, 2017 | கருத்துகள் (2)
லட்சுமியக்காகிட்டே போட்டோ எடுத்துக்குங்க...


சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயில் கடற்கரை

உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்ட எளியோர் சிலர் சுண்டல் விற்றுக்கொண்டிருந்தனர் சிலர் குழந்தைகளுக்கான ராட்டினம் சுற்றிக்கொண்டு இருந்தனர் சிலர் பலுான், பட்டம் விற்றுக்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு நடுவே நடுத்தர வயது பெண் ஒருவர் கழுத்தில் கேமிராவுடன் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை நெருங்கி சார்,மேடம் போட்டோ எடுத்துக்குங்க முப்பது ரூபாய்தான் என்று ஏற்கனவே எடுத்த படங்களை காட்டிக் கொண்டு இருந்தார்.

இவர் சொன்னதை பலரும் அலட்சியப்படுத்திவிட்டு சென்றார்கள் அதற்காக கலங்கிவிடாமல் அடுத்து அடுத்து வரக்கூடியவர்களை பார்த்து ஆர்டர் பிடிக்க கடற்கரை சுடுமணலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தார்.
படம் போட தேவைப்படும் இன்ஜெக்ட் பிரிண்டிங் மெஷினின் உள்ள பெரிய கேமிரா பேக் இவரது தோளில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.அதன் எடை காரணமாக ஒரு பக்க தோளை சாய்த்து சாய்த்து நடக்கிறார்.

வெயில் மற்றும் வேலை காரணமாக கறுத்துப் போன உடம்பு, சாயம் போன சேலை ஜாக்கெட், தேகம் போலவே வறண்டு சுருண்டபடி கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு இவற்றுக்கு சொந்தக்காரரான லட்சுமி காலையில் வீட்டு வேலையும் மாலையில் போட்டோகிராபியும் செய்து வருகிறார்.
கடலுார் தேவனாம்பட்டியைச் சேர்ந்தவரான லட்சுமி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார் வீட்டு சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தார்.

திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில் கணவர் கைவிட்டுவிட நான்கு குழந்தைகளுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு இடம் பெயர்ந்தார்.பகலில் வீட்டு வேலை இரவில் வயதான நோயாளிகளின் பராமரிப்பாளர் என இரவு பகலாக வேலை பார்த்து நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவிட்டார்.
இதற்கு பிறகும் இவரது சுமைகளும் பிரச்னைகளும் குறையாமல் கூடுதலாகியது. அதனை ஈடுகட்ட என்ன செய்வது என்று யோசித்த நிலையில் கடற்கரையில் போட்டோ எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் கண்ணில் பட்டனர். தானும் அது போல போட்டோ எடுத்து பிழைப்பது என முடிவு செய்தார்.

அதுவரை எந்த கேமிராவையும் கையால் கூட தொடாதவர்,வீட்டு வேலை மட்டுமே செய்து பழகியவர்,கிராமத்து சூழலில் வளர்ந்தவர், வாழவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக போட்டோகிராபராக முடிவு செய்தார்.
அங்கேயும் இங்கேயும் கடன் வாங்கி கேமிரா மற்றும் பிரிண்ட் மெஷினுடன் தொழிலுக்கு தயராகிவிட்டார்,எப்படி போட்டோ எடுப்பது என்பதையும் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கற்றுக்கொண்டு விட்டார்.இப்போது அதிகாலை எழுந்து வீட்டு வேலை பிறகு மாலை வேளையில் கடற்கரையில் போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் வேலை.

ஒரு குடும்பத்தை போட்டோ எடுத்து அடுத்து இரண்டு நிமிடத்தில் பிரிண்ட் போட்டு கொடுத்து முப்பது ரூபாய் வாங்குகிறேன்.எதற்கு முப்பது ரூபாய் என்று பேரம் பேசுபர்களும் இருக்கிறார்கள், என்கிட்ட ஐம்பாதயிரம் ரூபாய் போன் இருக்கு அதுலேயே நாங்க எடுத்துக்குவோம் நீ போம்மா அப்பால என்று அலட்சியப்படுத்தி துரத்துபவர்களும் இருக்கிறார்கள்,இந்த வயதில் இவ்வளவு எடையை துாக்கிக் கொண்டு படம் எடுத்து பிழைக்குதே இந்த அம்மா என்று இதற்காகவே படம் எடுத்து முப்பது ரூபாய் கேட்ட இடத்தில் ஐம்பது ரூபாய் கொடுக்கும் புண்ணியவான்களும் இருக்கிறார்கள்.
சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பிழைப்பு நல்லா ஓடும் மற்ற நாட்களில் சுமராகத்தான் இருக்கும் சில நாட்கள் ஒரு படம் கூட எடுக்காமல் சும்மாவே சுற்றிவிட்டு போகவேண்டியிருக்கும் இருந்தாலும் இந்த தொழில் எனக்கு பிடிச்சிருக்கு.

சினிமாக்காரர்கள் கட்-அவுட் வைச்சா அது கூட நின்னு எடுக்க பசங்க விருப்பப்படுவாங்களாம், அதே போல ராத்திரி நேரத்துல போட்டோ எடுக்க(பிளாஷ்) லைட் வச்சுக்கலாமாம், அதுக்கு கொஞ்சம் காசு சேர்க்ணும், அதோ ஒரு சுற்றுலா வேன் வருது போய் நின்னா யாராச்சும் போட்டோ எடுத்துப்பாங்க நான் கிளம்பறேன் சார் என்று சொல்லியபடி சுமையை துாக்கி தோளில் மாட்டிக்கொண்டு சாய்ந்தபடி வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.இவரது எண்:8838981482.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X