ஈகை உள்ளவரை குறைவிலா வாழ்வு | Dinamalar

ஈகை உள்ளவரை குறைவிலா வாழ்வு

Added : டிச 20, 2017
ஈகை உள்ளவரை குறைவிலா வாழ்வு

'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே உள'இல்லையென இரந்து வந்தவருக்கு இல்லை எனாமல் இயன்றதை தருவதே ஈகை எனும் கொடையாகும். ஈரம் நிறைந்த உள்ளத்தால் பிறர் விழிநீரையும், மனவலியையும் துடைப்பதே கொடை
யாகும். மனிதனின் தேடும் உள்ளத்தால், வாடும் மனமறிந்து, மாற்ற நினைப்பதும், உதவுவதும் கொடையே. இரந்து நிற்கும் உறவையும், தொலைந்து போன அன்பையும், தேடி நின்றால் அங்கே அன்பு, அக்கறை, கழிவிறக்கம் போன்ற பண்புகள் கருணையாய் சுரக்கும். சுரக்கும் கருணை வலிந்து பெறுவதல்ல. தானாய் தோன்றுவது.வறியார்க் கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்துவிரும்பி அளிக்கும் பண்பே ஈகை எனப்படும். இறைவன் கொடுப்பது அருட்கொடை. மனிதன் தருவது பொருட் கொடை. கொடை என்பது
பெருங்கடலாய் விரிந்திருக்கும். அன்பான இதயம், கள்ளமிலா நேசம், நல்லெண்ணம் உடைய உள்ளம், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் ஈரம்
சுரக்கும் மனம், பகிர்ந்து அளிக்கும்பாசம், தொண்டு செய்யும் குணம், இவை அனைத்தும் சங்கமிப்பதே கொடை என்ற பண்பு.


கண்ணோட்டம் தரும் கனிவு


கனிவு என்பது பிறரிடம் பரிவு கொண்டு தேவை அறிந்து செய்வது. பரிவு என்பது மனிதரிடம் மட்டுமின்றி பிற உயிரினங்களிடமும் காட்டும் கனிவாகும். படர முடியாத முல்லைக் கொடிக்கு கனிவு கொண்டு தேர் கொடுத்தான் பாரி. வறுமையிலும் பரிவு காட்டி பறவைகளுக்கு உணவளித்தான் பாரதி. மாக்களினத்திலிருந்து மக்களினமாக மாற்றும் தன்மையே பரிவு. பரிவால் செய்யப்படும் தானங்கள் பல உண்டு. கல்வி தானம், ஞான தானம், பொருள் தானம், உறுப்பு தானம், சேவை தானம் என தானத்தை பகுத்தால் அது விரிவாகும். தானம் என்பதற்கு எல்லை கிடையாது. எதை யாருக்கு எவ்விடத்தில் செய்ய வேண்டும் என்பதை சார்ந்து இருக்கிறது. கற்ற கல்வியை பயன்கருதாது எளியவர்களுக்கு அளிப்பதும் கொடையே. ஈன்ற பொருளை வறியவர்க்கு தருவதும் கொடையே. எத்தனை வழிபாடு செய்தாலும், மந்திரங்களை உச்சரித்தாலும், யாகங்கள் வளர்த்தாலும், உள்ளத்தின் ஈரத்தின் சுவடு இல்லை
யெனில் இறையருளை காண முடியாது. தர்மத்தை நாடினால் இறையை தேட வேண்டியதில்லை. இறையேநாடி, ஓடி வருவார்.


அடியவர் தொண்டு'கருணையற்ற கண்கள் புண்கள்:
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பற்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே'
என்கிறது திருமந்திரம்.சிற்பங்கள் நிறைந்திருக்கும் கோயிலில் இருக்கும் இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனுக்கு மட்டும் உரியதாகும். நடமாடும் உடலாகிய கோயிலை கொண்டு உலாவுகிற அடியவரை சென்று அடையாது. ஆனால் நடமாடும் அடியவர்களுக்கு அளித்தால் அது இறைவனை சென்று
அடையும். அடியவர் தொண்டு ஆண்டவன் தொண்டு என திருமந்திரம் உரைக்கிறது. அதற்கு உதாரணமாக அன்னை தெரசா, வாடும் மக்களுக்கு தொண்டாற்றி அதில் இறைவனை கண்டார்.


கருணையால் அமைந்த அணை


ஆங்கிலேய அரசால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜான் பென்னிகுக் என்ற கண்காணிப்பு பொறியாளர் மனதில் பெரியாற்றின் வெள்ளத்தை வீணாக்காது நீர்தேக்கத்தை கட்டி தென் தமிழகத்திற்கு திருப்பி விட்டால் வறண்ட பூமி வளம்பெறும் என்ற எண்ணம் உருவாகியது. அணை கட்டும் பணி துவங்கும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி
யிருந்தது. மின்சாரம், போக்குவரத்து இல்லாத காலம்., அடர்ந்த காடு, வன விலங்குகள், மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்த பல தொழிலாளர்கள், வெள்ளம், நிதி பற்றாக்குறை என பல நெருக்கடிகளை சமாளித்து முல்லை பெரியாறு அணை கட்ட வேண்டியிருந்தது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணை உடைந்தவுடன் அத்திட்டத்தை கைவிடும்படி ஆங்கிலேய அரசு பென்னி குக்கிற்கு உத்தரவிட்டது. நல்லவை எண்ண வேண்டும், எண்ணியது முடித்தல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும் என பாரதி பாடிய கூற்றின்படி நலிந்து போன விவசாயிகளுக்கும், வறண்ட நிலங்களுக்கும், பயன் அளிக்கும் இத்திட்டத்தை தன்னுடைய
மனைவியின் நகைகள், இங்கிலாந்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணையை கட்டி முடித்து மக்களின் மனதில் நீரூற்றாய் முல்லை மலராய், நிறைந்து நிற்கிறார் பென்னிகுக். அவரின் உள்ளத்தில் சுரந்த கருணையால் உருவானது முல்லை பெரியாறு அணை.


ஈத்துவக்கும் இன்பம்கொடுத்து வருவதே இன்பம் என்பதை அறிந்து கண்ணிற்கு அணிகலம் இரங்கும் கண்ணோட்டம் என தெளிந்து உடல் தானம் செய்து உயிர்களாய் பலர் நிலைத்து நிற்கின்றனர். இரக்கம் என்பது இறையாண்மை. அது ஒரு வேள்வி.உலகில் முதல் பணக்காரரான பில்கேட்ஸிடம் ஒருவர், ''நீங்கள் யாரை மிகவும் பணக்காரர் என கருதுகிறீர்கள்,'' என கேட்டார். வேலையின்றி இருந்த சமயத்தில் வேலை வாய்ப்பை கண்டறிய நாளிதழ் வாங்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஒரு சிறுவன் இலவசமாக நாளிதழை அளித்தான்.
நான் செல்வந்தரானவுடன் அந்த பையனை 19 ஆண்டுகள் கழித்து தேடிச் சென்று இளைஞனாய் இருந்த அவனுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தேன். நீங்கள் ஏழையாய் இருந்த போது நான் செய்த உதவிக்கு கைமாறாய் எதுவும் பெற விரும்பவில்லை என கூறினார்.'காலத்தினால் பயன் நினையாது எனக்கு அன்று செய்த உதவிக்கு எதுவும் எதிர்பார்க்காத அவ்விளைஞனே பெரிய செல்வந்தன்' என பில் கேட்ஸ் பதிலளித்தார். உதவும் மனதிற்கு பணம் முக்கியமல்ல. அதற்கு காலம், இடம், பொருள் தேவையில்லை.
தவித்திருக்கும் மனமறிந்து உதவி செய்து நலிந்திருக்கும் உடல் கண்டு, கரம்நீட்டி, செயல் இழந்து நிற்போர்க்கு செவி சாய்த்து, முகவரி அறியா குழந்தைகளுக்கு முகம் காட்டி, வாய் பேசா குழந்தைகளுடன் உரையாடி, விழி இழந்தவர்க்கு ஒளியாய் நின்று,
மவுனத்தின் முதுமைக்கு முற்றுப்புள்ளியாய் இல்லாது கரம் கோர்ப்பவரே ஈரமுள்ள உள்ளங்கள்.

கருணையெனும் குணத்தால் கண்கள் பனிக்கும்
பனிக்கும் மாண்பால் வாழ்வு வளப்படும்
வளப்படும் எண்ணத்தால் நேயம் சுரக்கும்
சுரக்கும் ஈரத்தால் வயப்படும் ஈகையே
மண்ணில் ஈகை எனும் பண்பு உள்ளவரை குறைவிலா வாழ்வு என்றும் மலரும்.
---முனைவர் ச.சுடர்கொடிகாரைக்குடி94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X