madurai | கனி இருக்கக் கவலை எதற்கு...| Dinamalar

கனி இருக்கக் கவலை எதற்கு...

Added : டிச 20, 2017 | கருத்துகள் (7)
கனி இருக்கக் கவலை எதற்கு...


கனி இருக்கக் கவலை எதற்கு...
ஒரு பழைய மோட்டார் சைக்கிள்
அந்த மோட்டார் சைக்கிளின் முன்,பின்,பக்கவாட்டுப்பகுதி என்று எல்லாபக்கங்களிலும் பைகளும், பெரிய பாத்திரங்களும் தொங்குகின்றன.
பைக்கை ஒட்டிச் செல்பவர் பெயர் பெரோஸ்கான் ஆனால் கனி என்றுதான் எல்லோரும் அழைக்கின்றனர் நாமும் அப்படியே அழைப்போம். அவர் யார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் சுமந்து செல்லும் கனமான பைகளுக்கான விடை கிடைத்துவிடும்.
வடை சுடுவதில் ஒரு எக்ஸ்பர்ட். மதுரையில் உள்ள ஒரு டீக்கடை வாசலில் இவரது வடையை சாப்பிடுவதற்காக தனிக்கூட்டம் வரும்.சில வருடங்களுக்கு முன் இவரிடம் அறிமுகமான தன்னார்வலர் மணிகண்டன் ரெகுலராக இவரிடம் நுாறு இருநுாறு வடை வாங்குவர்.

எதற்காக இவ்வளவு வடை என்று கேட்கும் போது முதியோர் இல்லங்களுக்கு வழங்க இட்லி,பொங்கல் வீட்டில் செய்து எடுத்துட்டு போறோம், அதோட சேர்த்து வடையும் கொடுக்கலாம்னு நினைச்சோம், நாங்க வீட்டில் சுடுறதைவிட உங்க வடை நல்லாயிருக்கு விலையும் நியாயமாயிருக்கு என்று பதில் தந்து இருக்கின்றனர்.
வடை மட்டுமில்லை இட்லி,பொங்கல்,பூரி என்று எல்லாமே செஞ்சுதருவேன் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றதுடன் மறுநாள் பத்து ரூபாய்க்கு இரண்டு பூரி கிழங்கு வைத்து அதை அழகாக பொட்டலமும் போட்டு நுாறு பாக்கெட் கொடுத்திருக்கிறார்.
பராவாயில்லையே ஆயிரம் ரூபாய் செலவில் நுாறு பேரின் காலைப்பசியை போக்கிடலாம் என்று முடிவு செய்து கனியை அன்னதானம் செய்யும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
அதன் விளைவு டீகடை வாசலில் வடை சுட்டுக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் முதியோர் இல்லங்களுக்கான உணவு தயாரிப்பவராக மாறிவிட்டார்.காலை உணவு மட்டுமின்றி சுவையான மதிய உணவும் தயார் செய்கிறார்.

பிறந்த நாள்,நினைவு நாள் போன்ற நாட்களில் ஒரு நுாறு பேருக்கு சாப்பாடு போடணும்னு நினைப்பவர்கள் இவரிடம் போன் செய்து உங்களுக்கு விருப்பப்பட்ட இல்லத்தின் பெயரைச் சொல்லி பணத்தை சேர்த்துவிட்டால் போதும் மிக கச்சிதமாக சாப்பாடு தயார் செய்து அதை பாத்திரம் மற்றும் பைகளில் எடுத்துக் கொண்டு போய் உரிய நேரத்தில் கொடுத்துவிடுவார்.
வீட்டில் தாயார் மனைவி மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர் எல்லோருமே சமையலில் உதவுவதால் சமையல் கூலி என்று தனியாக செலவு இல்லை மேலும் நானே எனது மோட்டார் சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் கொண்டு போய்க்கொடுப்பதால் போக்குவரத்து செலவும் டூவிலருக்கான பெட்ரோல் செலவு மட்டுமே ,ஆகவே இதன் மிச்சங்கள் எல்லாம் சாப்பாடு செலவை குறைவாக்குகின்றன.இப்போதும் முப்பது ரூபாய்க்கு என்னால் முழுச்சாப்பாடு கொடுக்கமுடியும் சாப்பாடும் நாங்கள் என்ன சாப்பிடுகிறோமே அதே தரமான சாப்பாடுதான் இன்னும் சொல்வதானால் அவர்களுக்கான சாப்பாட்டில்தான் எங்கள் சாப்பாடு இருக்கிறது.

போன் செய்து அப்பாவோட நினைவு நாள் இரண்டாயிரம் ரூபாய் பட்ஜெட் நீயே பார்த்து ஏதாவது இரண்டு இல்லத்திற்கு சாப்பாடு கொடுத்துடுப்பா என்று சொல்வார்கள் அதற்கேற்ப சமைத்து அவர்களுக்கும் முன்கூட்டியே சொல்லிவிட்டு சாப்பாட்டை கொடுத்துவிடுவேன்.
சைவம்,அசைவம் எது கேட்டாலும் கொடுத்துவிடுவேன் வாரத்தில் ஏழு நாளும் என் வண்டி ஒடிக்கிட்டேதான் இருக்கும், எனக்கு ஆர்டரே இல்லைன்னாலும் அன்னதானம் நடக்கும் இடத்திற்கு போய் அங்கே என்னால் முடிந்த சேவையை செய்துவிட்டு வருவேன்.காரணம்ஆதரவற்றவர்களுக்கு உதவுவது அதுவும் அன்னதானம் மூலமாக உதவுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தவிஷயம். இதற்காக ஒரு நாளைக்கு நுாறு கிலோ மீட்டருக்கு மேல் அலைகிறேமே என்ற அலுப்பெல்லாம் கிடையாது 'கனி உன் சாப்பாடு நல்லாயிருந்துச்சுப்பா' என்று பெரியவர்கள் என் கன்னம் தடவி சொல்லும் அந்த ஒற்றைச் சொல்லுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அலையலாம், உழைக்கலாம் என்று சொல்லும் கனியிடம் பேசுவதற்க்கான எண்:8608127024.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X