பாதிரியார் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் போதகர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் போதகர் கைது

Added : டிச 21, 2017
Share

துாத்துக்குடி: துாத்துக்குடியில், பாதிரியார் கொலை வழக்கில், போதகர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் கனகராஜ், 73. இவர், 1960ல் இருந்து, துாத்துக்குடி பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ அமைப்பில், பாதிரியாராக இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. பெந்தேகொஸ்தே மிஷன் கட்டட மாடியில் தங்கியிருந்தார். 2016 அக்., 6ல், படுக்கையில் இறந்து கிடந்தார்.அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறி, உடலை அடக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர், போலீசில் புகார் அளித்தார். எனவே, உடலை பரிசோதனைக்கு அனுப்பினர்.
மதுரை, தடயவியல் ஆய்வக சோதனையில், பாதிரியார் கனகராஜ் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமானது. இருப்பினும், குற்றவாளிகளை கைது செய்வதில், போலீசார் தாமதம் காட்டினர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, கனகராஜின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், வாத்தியார்விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ், 31. இவர், கனகராஜ் சபையில் போதகராக இருந்தார். வெளியிடங்களுக்கு ஜெபத்திற்கு சென்ற போது, பெண்களிடம் பாலியல் ரீதியாக டைட்டஸ் தவறாக நடந்துள்ளார். அவரை கனகராஜ் கண்டித்து, வெளியிடங்களுக்கு அனுப்பாமல், தலைமை மையத்திலேயே பணியமர்த்தினார். ஆத்திரமடைந்த டைட்டஸ், தன், 29 வயது தம்பி, 35 வயது நண்பருடன் சேர்ந்து, பாதிரியாரை, தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனர். கொலையை மறைப்பதற்காக அதிகாலையே, அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம், 'இறப்பு மாரடைப்பால் நடந்தது' என, போலி சான்றிதழ் பெற்றுள்ளனர்.
கனகராஜ் கொலை செய்யப்பட்ட, ஒரு ஆண்டுக்கு பின், தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'கொலையை மாரடைப்பாக மாற்றி, போலி சான்றிதழ் வழங்கிய டாக்டரை கைது செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X