மாற்றுத்திறனாளி அல்ல நம்மை மாற்றும்திறனாளி வடிவேல் பாலுசாமி.| Dinamalar

மாற்றுத்திறனாளி அல்ல நம்மை மாற்றும்திறனாளி வடிவேல் பாலுசாமி.

Updated : டிச 27, 2017 | Added : டிச 25, 2017 | கருத்துகள் (1)
மாற்றுத்திறனாளி அல்ல நம்மை மாற்றும்திறனாளி வடிவேல் பாலுசாமி.


மாற்றுத்திறனாளி அல்ல நம்மை மாற்றும்திறனாளி வடிவேல் பாலுசாமி
இவரிடம் ஒரு பத்து நிமிடம் இவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

'ஆமாமாம் ஒரு விபத்துல என் இடது கால் போயிடுச்சு' என்று என்று பர்ஸ் காணாமல் போனது போல சாதாரணமாக சொல்பவர். 'அதையே நினைச்சுட்டு இருந்தால் திரும்ப வரவா போகிறது அடுத்து என்ன செய்வது என்று பார்க்கணும் அதுதானே வாழ்க்கை 'என்கிறார் சிரித்துக் கொண்டே
அதே போல அடுத்து என்ன செய்வது என சராசரி மனிதர் போல வாழ சிந்திக்கவில்லை சாதனை மனிதராக மாறவிரும்பினார் தான் விரும்பியபடியே இதோ ஒரே நாளில் 245 கிலோமீட்டர் துாரம் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் சென்று சாதனை படைத்திருக்கிறார்.

வடிவேல் பாலுசாமி
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 27 வயது இளைஞர்.

மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தவருக்கு தன் உறவினர்கள் சரவணன்,மணிகண்டன் ஆகியோர் முயற்சியில் கடந்த 2012ல் வெளிநாட்டு வேலை தேடி வந்தது. புறப்படுவதற்கு சில நாட்கள் முன் விபத்தில் சிக்கி இடது காலை இழந்தார்.
ஒரு வருடம் படுத்த படுக்கையாக இருந்தவர் பின் முடங்கிக்கிடக்கவா நாம் பிறந்தோம் என்று வீறுகொண்டு எழுந்தார்.செயற்கை கால் பொருத்திக்கொண்டு நடக்கவும் ஒடவும் முயற்சியும் பயிற்சியும் எடுத்தார்.

உள்ளூரிலேயே ஒரு வேலையை தேடிக்கொண்டவர் மீண்டும் இரு சக்கர வாகனம் ஒட்டவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். பெற்றோர் வேண்டாம் என்றார்கள் பின் மகனின் பிடிவாதம் காரணமாக 'ஸ்கூட்டி' போன்ற வாகனத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் ஆனால் வடிவேலின் விருப்பம் புல்லட்டாக இருந்தது.
மிரண்டு போனது பெற்றோர் மட்டுமல்ல உற்றமும் நட்பும் கூட.

ஆனாலும் லட்சியத்தில் உறுதியாக இருந்து 'புல்லட்' மோட்டார் சைக்கிள் வாங்கியவர் அதை நார்மலாக இருப்பவர்கள் ஒட்டுவது போலவே ஒட்டினார். இவருக்கு மோட்டார் பைக்கில் நீண்ட துாரம் போகும் ப்ரீடம் மோட்டார் சைக்கிள் கிளப்பின் அறிமுகம் கிடைக்க இதன் காரணமாக தன்னந்தனியாக 6723 கிலோமீட்டர் துாரம் 15 நாட்களில் இந்தியா முழுவதும் சுற்றிவந்து சாதனை படைத்தார்.இவரது இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்திலும் இந்திய சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றது.
அடுத்த முயற்சியாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பயணம் செல்லவேண்டும் என்பது இவரது விருப்பம் அதன் முன் முயற்சியாக மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

கடந்த 23 ந்தேதி காலை 4.30 மணிக்கு கிளம்பிய இவரது சைக்கிள் பயணத்தில் சிட்டி சைக்கிள் கிளப் நாகராஜன்,முத்துக்குமார் உள்ளீட்ட நண்பர்கள் இணைந்து கொண்டு உற்சாகம் தந்து உடன் பயணிக்க, பயணம் இரவு 9:30 மணிக்கு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தை அடுத்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை முதலில் மோட்டார் சைக்கிள் பயணம் பின் சைக்கிள் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார்.

ஒய்வு கிடைக்கும் போது பள்ளி,கல்லுாரி மாணவர்களிடம் இரு சக்கர வாகனம் ஒட்டும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை (ஹெல்மெட் அணிவது உள்ளீட்ட)குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதுதான் என் கதை என்று மூச்சுவிடாமல் பேசுகிறார் ஒரு இடத்தில் கூட காலை இழந்துவிட்ட புலம்பல் இல்லை சோகத்தை பிழியவில்லை உருக்கத்தை காட்டவில்லை மாறாக உற்சாகம் பீறிடுகிறது மகிழ்ச்சி கொப்பளிக்கிறது காது கொடுத்து கேட்பவர் மனதில் நம்பிக்கை விதைக்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வடிவேல் பாலுசாமியிடம் பேசுவதற்கான எண்:9698474848.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X