கோவையிலிருந்து போனது நோட்டு... சென்னையில் விழவில்லை ஓட்டு!

Updated : ஜன 06, 2018 | Added : டிச 26, 2017
Share
Advertisement
கோவையிலிருந்து போனது நோட்டு... சென்னையில் விழவில்லை ஓட்டு!

பொங்கல் பண்டிகைக்கு, 'பர்ச்சேஸ்' வேட்டை முடிந்தபாடில்லை. சித்ராவும், மித்ராவும் கிராஸ்கட் ரோட்டிற்கு, டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். பாலத்துக்குக் கீழே, வழக்கம்போல, 'டிராபிக்' இருந்தது. கொதித்தாள் மித்ரா...
''பாலத்துக்கு மேல ஏதாவது வண்டி போகுதா பார்த்தியா... இந்த இடத்தைக் 'கிராஸ்' பண்றப்ப எல்லாம் மனசு கொதிக்குதுக்கா!''''இப்பிடி ஒரு பாலத்தைக் கட்டிட்டு, அதை முதல்வரை வச்சு, பெருமையா திறந்த கொடுமைய என்ன சொல்ல...?'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் பரவாயில்லைக்கா... இந்த பாலம் திறப்புவிழாவுக்கு, ஆட்களைக் கூப்பிட்டு வர, வண்டிகளுக்கு ஏற்பாடு பண்ணலைன்னு, நம்மூருல இருக்குற ஒரு ஆர்.டி.ஓ.,வை, 'சஸ்பெண்ட்' பண்ணுனாங்க தெரியுமா?'' என்று நிறுத்தினாள் மித்ரா.''ஓ... நல்லாத் தெரியுமே... நம்ம ஆர்யாவும், சந்தானமும் நடிச்ச, 'படத்தோட பேருள்ளவர்தான... அவரோட பிரேக் இன்ஸ்பெக்டர் ஒருத்தரையும் இங்க இருந்து துாக்குனாங்களே. அதுக்கென்ன இப்போ?'' என்று கேட்டாள் சித்ரா.''அந்த ஆர்.டி.ஓ., கொதிச்சுப் போயி, டிரான்ஸ்போர்ட் கமிஷனரைப் பாத்ததுக்கு, 'நீங்க போய் மினிஸ்டரைப் பாருங்க'ன்னு சொல்லீட்டாராம். அங்க போனதுக்கு, வேற யாரையோ பார்க்கச்சொன்னாங்களாம். அங்கேயும் போயிருக்காரு. அங்க பல மணி நேரம் காக்க வச்சிருக்காங்க,'' என்று மீண்டும் நிறுத்தினாள் மித்ரா.''அச்சச்சோ... கடைசியில என்னதான் ஆச்சு?'' ஆர்வமாய்க் குறுக்கிட்டாள் சித்ரா.''பாவம்... வெறுத்துப் போயி, 'வேலை வர்றப்ப வரட்டும்'னு கிளம்பிப் போயிட்டாராம்,'' என்று விவகாரத்தை விளக்கினாள் மித்ரா.''மித்து... சூலுார்ல இருக்குற ஆர்.டி.ஓ., யூனிட் ஆபீஸ்ல பொறுப்பா இருக்குற பிரேக் இன்ஸ்பெக்டருக்கும், கண்காணிக்குற லேடி ஆபீசருக்கும் இடையில, 'பங்கு' பிரிக்கிறதுல பயங்கர தகராறாம். ஆபீஸ்ல அடிச்சுக்காத குறையா, சண்டை நாறிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.கிராஸ்கட் ரோட்டில், 'பார்க்கிங்'கில் வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.பரபரப்பான வீதியில், துப்புரவுத் தொழிலாளிகள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணமும் இன்றி, சுத்தம் செய்வதைப் பார்த்துக் கொண்டே பலரும் கடந்து சென்று கொண்டிருந்தனர்.''என்னக்கா இதுக்கெல்லாம் ஒரு முடிவே வராதா... கழிவுநீர்த்தொட்டியை 'கிளீன்' பண்ணப் போயி, அநியாயமா மறுபடியும் மூணு பேரு செத்திருக்காங்க. இன்னும் எத்தனை உசிரு போனா, இவுங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்?'' என்று மீண்டும் கொதித்தாள் மித்ரா.''எனக்குத் தெரிய, தமிழ்நாட்டுலயே நம்மூர்லதான் விஷவாயு சாவு அதிகமா நடக்குது. ஒவ்வொரு முறை உசிரு போறப்பயும், சங்கங்கள் பேருல சிலர் 'சவுண்ட்' விடுவாங்க. அப்புறம் பணத்தாலயே வாயை அடைச்சிருவாங்க,'' என்றாள் சித்ரா.''உண்மைதான்க்கா... இப்பவும் கலெக்டர்ட்ட போயி, பேசிருக்காங்க. அவரு, ஆர்.கே.நகர் எலக்ஷன் முடிஞ்ச பிறகு 'மீட்டிங்' போடுறேன்னு சொல்லிருக்காரு. ஆனா, இப்பவரைக்கும் எதுவும் நடத்தலை,'' என்றாள் மித்ரா.''ஆர்.கே. நகர்னு சொன்னதும், ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு... இங்க இருந்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சில பேரு, அங்க போயி வேலை பாத்திருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒன்றரை கோடி ரூபாய் வரைக்குச் செலவழிச்சாங்களாம். ஆனா, 'ரிசல்ட்' இப்பிடி வந்ததும் அதிர்ச்சியாயிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''இப்போ என்ன காரணம் சொல்றாங்க?'' என்று கேட்டாள் மித்ரா.''இதுக்கு முன்னாடி, எலக்ஷன் வேலை பார்த்த அதே ஏரியாவுலதான் இப்பவும் பாத்திருக்காங்க. ஆனா, மக்கள் எல்லாரும் காசை வாங்கிட்டு, 'குக்கர்'ல குத்தித் தள்ளீட்டாங்களாம். 'டிடிவி'க்காகத்தான், மறுபடியும் ஓட்டுக் கேக்க வந்திருக்காங்கன்னு நினைச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... குக்கர்னு சொன்னதும் எனக்குப் பசிக்க ஆரம்பிச்சிருச்சு,'' என்ற மித்ரா, 'கானா' ஓட்டலுக்குள் புகுந்து, 'சாண்ட்விச்', டீ வாங்கினாள். இருவரும் மாடிக்குச் சென்றனர். டீ குடித்து, 'ரிலாக்ஸ்' செய்து கொண்டே, அரட்டையைத் தொடர்ந்தனர். மித்ராவே தொடர்ந்தாள்...''அக்கா... காந்திபுரம் ஏரியாவுல, மறுபடியும் 'பார்'களை எல்லாம் திறந்துட்டாங்க. ராத்திரி, பகலா சரக்கு வியாபாரம் கொடிகட்டிப் பறக்குதாம். இப்போ வந்திருக்குற ரெண்டு பெரிய ஆபீஸர்களுமே, 'இல்லீகல் பார்'கள்ல அள்ளித் தட்டுறாங்களாம்.''''நீ சொல்ற பெரிய ஆபீசர், ஏற்கனவே இங்க 'எக்சைஸ்' ஆபீசரா இருக்குறப்போ, டாஸ்மாக் கடைகள் வசூல்ல கொடிகட்டிப் பறந்தவராச்சே. இப்போ இருக்குற 'போஸ்ட்டிங்'குக்கு 30 லட்ச ரூபா கொடுத்துதான் வந்திருக்காராமே,'' என்றாள் சித்ரா.''அவரு 'ரிட்டயர்டு' ஆவுறதுக்கே இன்னும் மூணு மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள போட்டதை எடுத்திருவாரா?'' என்ற மித்ராவிடம்...
''அதெப்பிடி எடுக்காம விடுவாரு... 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'ங்கிற மாதிரி, இந்த போஸ்ட்டிங்கை வாங்குறதுக்குதான் மாசக்கணக்குல மெடிக்கல் லீவு போட்டு இருந்தாரே,'' என்றாள் சித்ரா.''அதுக்குதான் 'இல்லீகல் பார்'களுக்கு, கவர்மென்ட்டுக்குக் கட்ட வேண்டிய பணத்துல பாதிப்பணத்தை வாங்கிட்டு, 'பார்'களைத் திறந்து விடுற புது 'டெக்னிக்'கை இந்த மேனேஜர்க அறிமுகப்படுத்தி இருக்காங்களே!'' என்றாள் மித்ரா.''இந்த மாதிரி 'இல்லீகல் பார்'கள்ல பணம் வசூல் பண்றதையே, முழு நேர வேலையாச் செய்யுறாராம், டாஸ்மாக்ல 'டிரான்ஸ்போர்ட்' கான்ட்ராக்ட் பாக்குற மேனேஜர் ஒருத்தரு,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... நீ சொல்ற ஆளைப் பத்தி, நானும் கேள்விப்பட்ருக்கேன். அவரு, அவரோட ஓனருக்கே தெரியாம, ஏழெட்டு வண்டிகளை, டாஸ்மாக்ல கான்ட்ராக்ட் விட்ருக்காராமே. அவரும், இன்னொருத்தரும் சேர்ந்து தான், இந்த ஆபீசரகளுக்கு 'பார்'க்காரங்க கிட்ட பேரம் பேசுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.அருகில் இருந்த டேபிளில் உட்கார்ந்திருந்த ஒருவர், தனது அலைபேசியில் 'இங்க பாருங்க ஷாஜி... அந்த அமவுன்டை நீங்க வசூல் பண்ணிக் கொடுத்துட்டா, நீங்க தான் எனக்கு 'தெய்வம்' மாதிரி!' என்று சொல்லிக் கொண்டு போக, சிரித்தாள் சித்ரா.''வசூல்பத்திப் பேசவும் எனக்கு கார்ப்பரேஷன்ல இருக்குற குப்பை இன்ஜினியரோட ஞாபகம் வந்துச்சு. வெறும் ஏடபிள்இ அந்தஸ்துல இருக்குற அவருக்கு, நேரு திட்டத்துல இ.இ.,யா கூடுதல் பொறுப்பு கொடுத்தது, மறுபடியும் பெரிய புகைச்சலா ஆயிருக்கு,'' என்றாள் மித்ரா.''மித்து... அவருதான் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துல, குப்பை அள்ளுற வேலைக்கும் முக்கியப் பொறுப்புல இருக்குறாரு... தெரியாதா?'' என்றாள் சித்ரா.''அவருதான், ஆளுங்கட்சிக்கு முக்கியமான பினாமி கம்பெனி ஆளுங்க கூட, ஒண்ணோடு ஒண்ணா கலந்துட்டாராமே. அதனால தான், நேரு திட்டத்துல, ஏற்கனவே காலி பண்ணுன இ.இ., போஸ்ட்டிங்ல அவரைப் போட்டு, அழகு பாக்குறாங்க,'' என்றாள் மித்ரா.''அதுல வேற ஒரு அரசியல் இருக்குடி... துாத்துக்குடி 'ரிட்டர்ன்' இன்ஜினியரை இப்போ 'சிட்டி இன்ஜினியர்' ஆக்கிருக்கணும். ஆனா, அவரை இன்னமும் நேரு திட்டத்துலதான் வச்சிருக்காங்க. அதுலயும் அவரு தனியா முடிவு எடுத்துரக் கூடாதுன்னு, இந்த குப்பை இன்ஜினியரைப் போட்ருக்காங்க,'' என்றாள் சித்ரா.''கார்ப்பரேஷனே பெரும்பாலும் 'இன்சார்ஜ்'லதான் ஓடுது. அதுலயும் இந்த ஏ.சி.,க்கள் இம்சை தாங்கலை. கிழக்குல இருக்கிறவரு, ரெவின்யூல இருந்து வந்து முழுசா மூணு வருஷம் முடிஞ்சிருச்சு. ஆனா, இன்னமும் அங்க இருந்து கிளம்ப மாட்டேங்கிறாரு. காரணம்...சம்பாத்தியம்!'' என்றாள் மித்ரா.''அவரு பேருல பாதிப்பேரை வச்சிருக்கிறவரு, தெற்கால மூணு வருஷத்துக்கு மேல ஓட்றாரே... அவரு சம்பாதிக்காததா... அவர் 'ரிட்டயர்டு' ஆவுறதுக்கே கொஞ்ச நாள்தான் இருக்கு. அதுவரைக்கும் அவரை அசைக்க முடியாது. ஆளுங்கட்சியில அவரோட செல்வாக்கு அப்பிடி!'' என்றாள் சித்ரா.இருவரும் கிளம்பி வெளியே வந்தனர். மறுபடியும் கிராஸ்கட் ரோட்டில், தேடல் தொடர்ந்தது. பெரும் சத்தத்தோடு, ஆம்புலன்ஸ் ஒன்று கடந்து சென்றது.''ஆம்புலன்சைப் பார்த்ததும், ஞாபகம் வந்துச்சுக்கா... ஆக்சிடென்ட் ஆவுறவுங்களை ஆஸ்பிடலுக்குக் கடத்துறது ரொம்ப அதிகமாயிருச்சு. ஒண்டிப்புதுார்ல இருக்குற எலும்பு ஆஸ்பிடலுக்கு, ஆளைக் கடத்திட்டுப் போயி, ரொம்ப அராஜகமாப் பணம் பறிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''கரெக்டா ஞாபகப்படுத்துன மித்து... அந்த ஹாஸ்பிடல் டாக்டருக்காக, ஒரு வீட்டை மெரட்டி எழுதி வாங்கிருக்காரு, சிங்காநல்லுார்ல இருக்குற ஒரு இன்ஸ்பெக்டர். நொந்துபோன அந்த குடும்பத்துல, முக்கியமான ஒருத்தரு, நீலகிரி வெலிங்டன்ல போய் தற்கொலை பண்ணிருக்காரு,'' என்றாள் சித்ரா.''அட ஈஸ்வரா... யாருக்கா இந்த அநியாயத்தைப் பண்ணுனது?'' என்று கேட்டாள் மித்ரா.''பீளமேட்லயும், சிங்காநல்லுார்லயும் சமீபமா, வீடு வாங்குறது, விக்கிறது, காலி பண்றதுன்னு பயங்கர கட்டப் பஞ்சாயத்து நடக்குதுன்னு அந்த ஏரியாக்காரங்க புலம்புறாங்க. இதுவும் சிங்காநல்லுார் ஏரியாவுல தான் நடந்திருக்கு,'' என்றாள் சித்ரா.''போலீஸ்ல இதுக்குன்னே படிச்சிட்டு வருவாங்க போலிருக்கு!'' என்றாள் மித்ரா.''படிக்கிறதைப் பத்திச் சொன்னியே... நம்மூரு சிஇஓ ஆபீஸ்ல இருக்குற முக்கியமான பிஏ ஒருத்தரைப் பத்தி, ஏற்கனவே பேசிருக்கோமே... மூணு சிஇஓ மாறியும் இவரை மட்டும் மாத்தவே இல்லை. அதனால, டிரான்ஸ்பர்ல புகுந்து விளையாடுறாராம்,'' என்றாள் சித்ரா.''நானும் அவரைப் பத்தி கேள்விப்பட்ருக்கேன்... அவரு ஏதோ சங்கத்துக்காரங்களுக்கு மட்டும் தான் 'ஹெல்ப்' பண்றார்னு சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.''அதுவும் உண்மைதான்... அவரை விட்டா, வேற ஆளே இல்லாதது மாதிரி, அவரை மாத்தவே மாட்டேங்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''நான் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன்... நம்ம மாவட்டத்துல தொடக்கக்கல்வி பத்தி, அதிகமா 'நெகட்டிவ்' நியூஸ் வருதுன்னு, இங்க வந்த டைரக்டர், சத்தம் போட்டுப் போனாராம்,'' என்றாள் மித்ரா.''இல்லாத விஷயத்தையா எழுதுறாங்க?'' என்று கோபமாய்க் கேட்டாள் சித்ரா.''இதுல கொடுமை என்னன்னா, டிஇஓக்களுக்கு அவர் மீட்டிங் நடத்துனப்போ, 'ரிப்போர்ட்டர்ஸ் யாராவது பின்னால இருக்காங்களா'ன்னு கேட்டாராம்'' என்றாள் மித்ரா.அதைக்கவனிக்காத சித்ரா, பெரிய ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள். பேச்சை நிறுத்தி விட்டு, பின் தொடர்ந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X