"காசும்' வாங்கிட்டு "கேசும்' போடும் போலீசு! "கப்பம்' வசூலிக்கும் "மாஜி'யால் ஒரே ரவுசு...!

Updated : ஜன 06, 2018 | Added : டிச 26, 2017
Advertisement
அவிநாசி ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். அங்கிருந்த தேவாலயத்தில், நடந்து கொண்டிருந்த விழா நிகழ்வை பார்த்து, தங்களது தோழியருக்கு வாழ்த்து சொல்லி கிளம்பினர். ""சர்ச் அலங்காரத்தை பார்த்துட்டு, அலங்கோல ரோட்டை கவனிக்காமல் வண்டி ஓட்டாதீங்க,'' என்று, எச்சரித்தாள் மித்ரா.குண்டும், குழியுமான ரோட்டில், லாவகமாக மொபட்டை ஓட்டியபடியே, ""நீ...
"காசும்' வாங்கிட்டு "கேசும்' போடும் போலீசு! "கப்பம்' வசூலிக்கும் "மாஜி'யால் ஒரே ரவுசு...!

அவிநாசி ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். அங்கிருந்த தேவாலயத்தில், நடந்து கொண்டிருந்த விழா நிகழ்வை பார்த்து, தங்களது தோழியருக்கு வாழ்த்து சொல்லி கிளம்பினர். ""சர்ச் அலங்காரத்தை பார்த்துட்டு, அலங்கோல ரோட்டை கவனிக்காமல் வண்டி ஓட்டாதீங்க,'' என்று, எச்சரித்தாள் மித்ரா.
குண்டும், குழியுமான ரோட்டில், லாவகமாக மொபட்டை ஓட்டியபடியே, ""நீ... சொல்றதும் சரிதான். அவிநாசி ரோடு போல் ஒரு அவதியான ரோட்டை எங்குமே பார்க்க முடியாது. காலை, மாலை நேரங்களில் இந்த ரோட்டில் செல்வோருக்கு தான் இதில் உள்ள கஷ்டம் நன்றாக தெரியும். ஏ.சி., அறையில், உட்கார்ந்துள்ள அதிகாரிக்கு, ரோட்டை பற்றி என்ன கவலை?'' என்று ஆவேசப்பட்டாள் சித்ரா.
""ஆபீசிலிருந்து தினமும் இந்த ரோட்டில்தான் கலெக்டர், தனது வீட்டுக்கு போகிறார். அவருக்கு கூடவா, அவிநாசி ரோட்டைப்பத்தி தெரியாம போச்சு?'' என்று சலித்து கொண்டாள் மித்ரா.
""குழாய் உடைந்து, தண்ணீரால் ரோடு முழுக்க குழிகள் உருவாகிடுச்சு. ஆனால், தெரிஞ்சே ரோட்டில், குழி போடும் ஆட்களை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையே,'' என, சிவாஜி மாதிரி பேசினாள் சித்ரா.
""என்ன, எங்கு, எப்படி நடந்தது?'' என்று கேள்விகளை அடுக்கினாள் மித்ரா.
""அவிநாசிக்கு பக்கத்துல, இரு க்குற கருவலூரில். மாரியம்மன் கோவில் தேர் நிலை உள்ள இடத்தில், ராத்திரியோடு ராத்திரியா, ஒரு குரூப், கேபிள் பதிக்க குழி தோண்டியிருக்காங்க. அதைப்பாத்துட்டு பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கேட்டதற்கு, "அனுமதி வாங்கிட்டுத்தான் குழி தோண்டுகிறோம்,'னு சொல்லியிருக்காங்க.''
""ஆனாலும், தடுத்து நிறுத்திய பொதுமக்கள் ஊராட்சி செயலாளருக்கு போன் போட்டாங்க. அவர் எடுக்கலை. உடனே, இதைப்பத்தி, ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. அவங்களோ, "அப்படியெல்லாம் யாருக்கும், எந்த அனுமதியும் தரலை'ன்னு சொன்னவுடன், ஆட்களை அங்கிருந்து மக்கள் விரட்டியடிச்சுட்டாங்க,'' என்று சொன்ன சித்ரா, ரோட்டோரம் "டிராபிக்'கை இடைஞ்சல் செய்ற மாதிரி கொட்டியிருந்த கற்கள் மீது விடாமல் வண்டியை செலுத்தினாள்.
""கற்களை பார்த்ததும்தான், கனிமவள மேட்டர் ஞாபகத்துக்கு வருது. போன வாரம், கனிம வளத்துறை சார்பில், கல்குவாரிக்காரங்களை வரவழைச்சு மீட்டிங் போட்டாங்களாம். அதில், கல்குவாரி எடுத்தவங்க, ஏக்கருக்கு மூன்று லகரம் மேலிடத்துக்கு கொடுக்கணும்னு வாய்மொழியா சொன்னாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""எதுக்கு மீட்டிங் போட்டு, பணம் கேக்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""இப்ப எம்-சாண்ட் மணல்தான் விக்குது. அதனால, குவாரிக்காரங்க சம்பாதிக்கறாங்களே. அதுல கொடுக்கறதுக்கு என்னன்னு கேக்குறாங்களாம். ஆனால், "ஏக்கருக்கு மூன்று லகரம் கொடுக்க கோடிக்கணக்குலயா சம்பாதிக்கிறோம்,'ன்னு குவாரிக்காரங்க சொன்னாங்களாம். போற போக்குல இதையும் மூடிடுவாங்க போல,'' என்று சிரித்தாள் மித்ரா.
""தன்னோட ஆபீசில நடக்கறதையே, கலெக்டர் கண்டுக்கறதில்லைன்னு, ஒரு புகார் இருக்குது தெரியுமா,'' என்ற சித்ரா, கலெக்டர் ஆபீஸ் விஷயத்துக்கு தாவினாள்.
""அங்கே தான் பல விஷயம் நடக்குதே. நீங்க எதை சொல்றீங்க?'' என்றாள் மித்ரா.
""ஊராட்சி ஆடிட்டிங் பணிகள் எல்லாம் வழக்கமா அந்தந்த யூனியன் ஆபீசுல நடக்கும். அதே போல, யூனியன் ஒட்டுமொத்த ஆடிட்டிங் பணி, ஏதாவது ஒரு யூனியன் ஆபீசுல ஜாயின்ட் சிட்டிங்ன்னு நடக்கும். அதுதான் "ரொட்டீன்'. ஆனால், இப்போதெல்லாம் ஆவணங்களோட, கலெக்டர் ஆபீசுக்கு ஊழியர்கள் வராங்களாம். அங்கேயே தான் ஆடிட்டிங் நடக்குது,'' என்றாள் சித்ரா.
""சரி இதுல என்ன பிரச்னை? ஒன்னும் புரியலையே?'' என்று குழம்பினாள் மித்ரா.
""அட, இருப்பா. சொல்றேன். லோக்கல் ஆபீசுல வைச்சு, மீட்டிங் போட்டால், "கட்டிங்' மேட்டர் வெளியே தெரிஞ்சுயிடுமுன்னு, நினைச்சு, "ஜாயின்ட் சிட்டிங்கை,' கமுக்கமாக இங்கேயே வைச்சு காரியத்தை முடிச்சிக்கறாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.
""ஓ... அப்படியா சங்கதி,'' என்று ஆச்சரியப்பட்ட மித்ரா,
""ஊத்துக்குளி பக்கத்துல "டாஸ்மாக்' பார் நடத்தற ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தர் மீது போலீஸ் கேஸ் போட்டாங்க தெரியுமா?'' என்றாள்.
""ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். வழக்கமா சரக்கு வித்ததாக, "பார்' ஊழியர்கள் மேல கேஸ் போடுவாங்க. ஆனால், இவர், மாமூல் தரலையாம். அதனால, "ரோஷப்பட்ட' போலீஸ் அவர் மேல, கேஸ் போட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""அதேபோல, ஓட்டலில், "சரக்கு' வைச்சு விக்கற கடைகளிலும், இதே போலத்தான், காசு வாங்கிட்டு கேஸ் போடறாங்களாம். இதனால, நொந்துபோன சில கடைக்காரங்க, காசும் கொடுத்துட்டு கேஸூக்கும், போகணுமான்னு, சரக்கு வியாபாரத்தையே நிறுத்திட்டாங்களாம்' என்றாள் மித்ரா.
மொபட், பல்லடம் ரோட்டில் சென்று கொண்டிருக்க, வழியோரமுள்ள சர்ச்சுகளில், கூட்டம் அதிகமாக தென்பட்டது.
கலெக்டர் ஆபீசை கடக்கும் போது, ""கலெக்டர் சொன்னாலும் நடவடிக்கை இல்லையாம்... ஆனால், கட்சிக்காரங்க "போன்' போட்டா "மளமள'ன்னு வேலை நடக்குதாம்,'' என்று பொடி வைத்து பேசினாள் சித்ரா.
""ஆளுங்கட்சியின்னா சும்மாவா? சரி, என்ன மேட்டார் சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.
""மினி பஸ்சில், இஷ்டம் போல் காசு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. மக்கள் சத்தம் போட்டுட்டு இருந்தாலும், அதிகாரிங்க கண்டுக்கறதே இல்லை,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ""அட ஆமா... வெள்ளியங்காட்டுல "பேனர்' வச்சு ஆர்.டி.ஓ.,வுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களே. அதுங்களா?'' என்று குறுக்கிட்டாள் மித்ரா.
""ஆமா... மக்கள் போராட ஆரம்பிச்சதும், அதிகமா கட்டணம் வசூலிச்ச மினி பஸ்சுக்கு, "பைன்' போட்டாங்க. ஒரு வாரம் கழிச்சு, மறுபடியும் மூணு ரூபா டிக்கெட்டுக்கு, ஏழு ரூபா வாங்கியிருக்காங்க. ஆனா, இப்படியே கொள்ளையடிக்கறாங்கனு, கலெக்டர்கிட்ட மறுபடியும் மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்லையாம்''
""அதனால, சென்னைக்கு போய், அமைச்சர் கிட்ட உட்கார்ந்துட்டாங்க. அமைச்சர் பி.ஏ., சவுத் ஆர்.டி.ஓ.,வுக்கு பேசின பிறகுதான், கூடுதல் கட்டணம் வசூலிச்சுட்டு இருந்த பஸ்ச பிடிச்சு கொண்டு போனாங்களாம். பி.ஏ.,வுக்கு இருக்கற மரியாதை கலெக்டர் வார்த்தைக்கு கூட இல்லையே, '' என்று முடித்தாள் சித்ரா.
""பாலம் வேலைய முடிக்கறதுக்கு முன்னாடியே "வசூல்' வேட்டையை ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா?'' என்று புதிர்போட்டாள் மித்ரா.
""எந்த பாலம்?,'' என்று மித்ரா கேட்டதும், ""பழைய பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி, வேலைய முடிக்காம, பாலம் தொங்கிட்டு இருக்குது. இந்த "கேப்'ல, பாலத்துக்கு கீழ, ஏராளமான "பிளாட்பார்ம்' கடைகள் முளைச்சிடுச்சு. தினமும் வாடகை கொடுத்துதான், கடை வச்சிருக்கோம்னு தைரியமா சொல்ற அளவுக்கு வசூல் பட்டய கிளப்பறாங்களாம்,''""காலை, 8:00- 9:15 மணிக்குள்ள, ஒவ்வொரு கடையா வசூல் ஜோரா நடக்குதாம். சாதாரண நாளில், 20 கடைனா, சனி,
ஞாயிறுல, 100 கடை வைக்கறாங்க. கடையை பொறுத்து, பணத்தை "ஆனந்தமாக' கறக்கறாங்களாம். இதுக்கு பின்னாடி முக்கியமான ஆளுங்கட்சி "மாஜி'தான், மறைமுகமாக இந்த வசூல் வேலைய செய்றார்ன்னு, மார்க்கெட் பூராமே ஒரே பேச்சா இருக்குது,'' என்று விளக்கினாள் சித்ரா.
""என்னப்பா... கார்ப்ரேஷனில் ஒண்ணுமில்லையா?'' என்று சித்ரா கேட்க,""இருக்குது. சொல்ல மறந்துட்டேன். நான்காம் மண்டலத்தில், "சுத்தம்' பிரிவில் பணிபுரியும் அலுவலர், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, ஒரே ஆபீசில், "குப்பை' கொட்டிட்டு இருக்கிறார். இதுபற்றி, யாராவது கேள்வி கேட்டால், "உங்க பேரை எழுதி வெச்சுட்டு, மாடிலிருந்து குதிச்சு "சூசைட்' பண்ணிப்பேன்னு,' மிரட்டுறாராம்,'' என்று மித்ரா சென்னதும், அவளது மொபைல்போன் ஒலித்தது. ""என்ன, முரளி கண்ணன், ஆளையே காணோம். அப்பா உங்களை கேட்டுக்கிட்ட இருக்கார். வீட்டுக்கு வாங்களேன்,'' என்று கூறி, இணைப்பை துண்டித்தாள்.
""என்ன, போலீஸ் மேட்டரையே காணோம்,'' என்று மித்ரா கேள்வி கேட்டதும், ""அது, இல்லாமலா?'' என்று சித்ரா, எதிர்ப்பட்ட பேக்கரியில் வண்டியை நிறுத்தினாள். உள்ளே சென்று, டீ ஆர்டர் கொடுத்து விட்டு, பேச்சை தொடர்ந்தாள்.
""போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் எஸ்.ஐ.,க்களை விரட்டுவதில், இரண்டு பேர் கில்லாடியா இருக்காங்களாம். ரூரல் ஸ்டேஷனுக்கு வரும் புகார்தாரர்களிடம், இந்த ரெண்டுபேர் மட்டுந்தான் விசாரிப்பாங்களாம். அப்பதானே, "கல்லா' கட்ட முடியும். கட்டப்பஞ்சாயத்து, லாட்டரி, "சரக்கு' விற்பனை என, வசூல் செய்வதில், ரெண்டு பேரும் எப்போதும், இணைந்தே இருக்கின்றனராம்,''
""அதுபோக, இன்ஸ்பெக்டருக்கு, லெப்ட், ரைட்டாக இருந்து, குறுநில மன்னர்போல, நடந்துக்கறாங்களாம். இவங்க ரெண்டு பேரையும், ஸ்டேஷனை விட்டு, மாற்ற வேண்டுமென, பலரும் எல்லா சாமியையும் வேண்டுறாங்களாம். மேட்டர் வெளியே தெரிஞ்சுடும்ன்னு, ஸ்டேஷனுக்கு புதுசா வர்ற, எஸ்.ஐ.,களுக்கு, நெருக்கடி கொடுத்து ஓட வச்சுடறாங்களாம். இதையெல்லாம், இன்ஸ்பெக்டர் கண்டுக்கறதே இல்லையாம்,'' என்று நீளமாக பேசினாள் சித்ரா.
""ஓ..., இப்படியெல்லாம் கூத்து நடக்குதா?'' என்று மித்ரா கூறவும், பேக்கரியில் இருந்த எப்.எம். ரேடியோவில், "விஜயமோகன் மற்றும் சுந்தர்மணி நடிக்கும், "இணைந்த கைகள் - 2', பொங்கல் முதல், உங்கள் அபிமான திரையரங்குகளில்....' என்ற விளம்பரம் ஒலித்தது.
""இதையுங்கேளு. நார்த் ஸ்டேஷனில், எப்.ஓ.பி., என்ற பெயரில், ஒருவர் ஸ்டேஷனில் அதிகாரம் செய்து, சுகபோக வாழ்க்கை நடத்துறார். ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கு, "டாஸ்மாக்', லாட்டரி என, பல விஷயத்தில் இவருதான் "பாலமாக' இருந்து பணம் வசூல் செஞ்சு தருகிறாராம்,'' என்ற சித்ரா, டீக்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்ததும், "மருது' சினிமா போஸ்டர், கண்ணில் பட்டது. ""ஓகே.., குளிருது. வீட்டுக்கு போகலாம்வா...'' என்று கூறிய சித்ரா, மொபட்டை செய்ய, வண்டி புறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X