நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அக்கட்சிகளின் தலைவர்கள், தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ரஜினிக்கு துவக்கம் முதலே எதிர்ப்பாக இருந்து வரும் சில, லெட்டர்பேடு கட்சிகளை உசுப்பேற்றி விடவும், 'ரஜினி தமிழர் அல்ல; கன்னடர், மராட்டியர்' என, பிரசாரம் செய்ய,அவர்களை ரகசியமாக துாண்டி விடவும், கட்சித் தலைவர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தை, 50 ஆண்டு களாக ஆண்டு வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது கட்சி உருவாகவில்லை.இந்த சூழலில், 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, தமிழக அரசியலில் இரு பெரும் சக்திகளாக, எதிரெதிர் துருவங்களாக செயல்பட்ட ஜெயலலிதா மறைவும், கருணாநிதியின் உடல் நலக்குறைவும், வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில், தனக்கு அடுத்து யார் என ஜெ., அறிவிக்காததாலும், கருணாநிதி அளவிற்கு, ஸ்டாலினுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லாததாலும், வெற்றிடத்தை யார் நிரப்புவர் என்பது, இதுவரை தெரியவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனுக்கு கிடைத்த வெற்றிக்கு, இந்த இரு கட்சிகள் மீதான வெறுப்பும் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
அடுத்த பொது தேர்தலில், தினகரன் எனும் நீர்க்குமிழி காணாமல் போகக் கூடும். இந்த சூழல், 'நான் எப்ப வரணுமோ அப்போ வருவேன்...' என, வசனம் பேசிய ரஜினிக்கு, சாதகமாக தெரிந்துள்ளது.அதனால், யாரும் எதிர்பாராத வகையில், புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
'அரசியல் முடிவு குறித்து அறிவிப்பேன்' என, அவர் கூறியதும், 'வழக்கம் போல், பூச்சாண்டி காட்டுகிறார்; ஏதாவது அமைப்பு, இயக்கம்
துவங்கி, அமைதியாகி விடுவார்' என, கட்சிகள் நினைத்தன. ஆனால், 'புதுக்கட்சி துவங்குவேன்' என, பிடரியில் அடித்தது போன்ற அறிவிப்பால், அவை, கதிகலங்கி விட்டன.
கருணாநிதியுடன், ஸ்டாலினை ஒப்பிட்டு பார்க்க முடியாத மற்றும் கட்சி பதவி கிடைக்காத, சில தி.மு.க.,வினர், ரஜினி பக்கம் தாவக்கூடும். அது போல, சினிமா ரசிகர்கள் ஆதரவால் உருவான, அ.தி.மு.க.,வில், அதன் தொண்டர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெ., இருந்த இடத்தில், நடிகர் ரஜினியை வைத்து பார்க்கக்கூடும்.
எனவே, கணிசமானோர்,ரஜினி பக்கம் தாவும் வாய்ப்பு உண்டு. இதனால், தே.மு.தி.க., மற்றும் பா.ம.க., நிலை மேலும் பரிதாபமாகியுள்ளது.அன்புமணி, 'ஓவியாவிற்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருந்தால், தமிழகத்தை காப்பாற்றி இருப்பேன்' என, புலம்பினார்.அவரிடம், ரஜினியின் வரவை பற்றி கேட்கவா வேண்டும்!
ரஜினியின், 'ஆன்மிக அரசியல்' அறிவிப்பால், பா.ஜ., மட்டுமே எதிர்ப்பு காட்டவில்லை.இந்நிலையில், தங்களுக்கு, பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள ரஜினியை, இன அடையாளத்தை வைத்து, வீழ்த்த, சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதனால், சில, 'லெட்டர்பேடு' கட்சிகளை உசுப்பேற்றி, 'ரஜினி தமிழர் இல்லை; கன்னடர், மராட்டியர்' என அறிக்கை வெளியிட்டு, பேட்டிகள் தந்து, மக்கள் மனதை மாற்ற திட்டமிட்டுள்ளன.
பூர்வீக கிராமம்
'தமிழர் அல்லாத ஒருவர் எங்களை ஆள தகுதி அற்றவர்' என, நாம் தமிழர் கட்சித் தலைவர், சீமான் பேச துவங்கி விட்டார். அந்த வரிசையில், இயக்குனர், கவுதமன் போன்றோர் சேர்ந்துள்ளனர். இவர்களை போல, வேல்முருகன், அமீர் போன்றோர் மற்றும் தமிழ் தேசியவாதிகளும், ரஜினியின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். எனினும், இந்த இருமுனை ஆயுதம், அவருக்கு சாதகமாக மாறவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, ரஜினியின் பூர்வீக கிராமமான, கிருஷ்ணகிரி, நாச்சிக்குப்பம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், ரசிகர் மன்றங்கள் வேகமாக துவங்கப்பட்டு வருவது, அரசியல் கட்சிகளை கலங்க வைத்துள்ளது.
அதனால், தங்கள், தொண்டர்களை, தக்க வைக்க, கட்சிகள் தீவிரமான ஆலோசிக்க துவங்கியுள்ளன. பொங்கலன்று, கட்சி சின்னத்தை ரஜினி வெளியிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மொத்தத்தில், ரஜினியின் வருகை, தமிழக அரசியல் களத்தை புரட்டிப்போட்டுள்ளது.
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
ஆங்கில புத்தாண்டை ஒட்டி, நேற்று காலை, தன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு, ரஜினி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.அனைவரும், ரஜினி துவங்கப்போகும் அரசியல் கட்சிக்கு வாழ்த்தும், ஆதரவையும் தெரிவித்தனர்.அத்துடன், 'ரசிகர் மன்றங்களை வீதியெங்கும் துவக்கி, தொண்டர்கள் பலத்தை அதிகரிப்போம்' என, ரஜினியிடம் ரசிகர்கள் உறுதி அளித்தனர்.
'ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பது மாபெரும் பணி' என, கூறியிருந்த ரஜினி, அப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.ரஜினி, தனக்கு ஆதரவு தருபவர்களை ஒன்றிணைக்கும் வகையில், rajinimandram.org என்ற, 'மொபைல் ஆப்' மற்றும் இணையதளத்தை நேற்று துவக்கினார்.அது குறித்து, டுவிட்டரில், வீடியோ பதிவில் பேசிய அவர், 'பதிவு செய்த, செய்யாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்ற விபரத்துடனும், தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும், தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, இணையதளம், ஆப்பிலும், பதிவு செய்து உறுப்பினராகலாம்' என, தெரிவித்தார்.இதையடுத்து, ஒரே நேரத்தில் ஏராளமானோர் முயற்சித்ததால், இணையதளம் வேகமிழந்தது.
இயக்குனர், கே.பாலசந்தரால் முதலில் பிரபலமானவர் கமல். பின், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, கமலை படிப்படியாக வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தார்.அது போல, அரசியலுக்கு, இந்த ஆண்டு வரப்போவதாக, கமல் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான பணிகள் துவங்கவிருந்த நிலையில், ரஜினி, திடீர் அறிவிப்பை வெளியிட்டு, அவருக்கு, 'ஷாக்' தந்துள்ளார். இதனால், கமலின் அரசியல் பிரவேசம் தாமதம் ஆக்ககூடும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (330)
Reply
Reply
Reply