கணக்குல வராம தர்றாங்க கனெக்ஷன்... கரை வேட்டிகளுக்கு, 'செம' கலெக்ஷன்!

Updated : ஜன 06, 2018 | Added : ஜன 02, 2018
Share
Advertisement
மருதமலை போவதற்காக, சித்ராவும், மித்ராவும் டவுன் பஸ்சில் ஏறினர். பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள், காலியாகக் கிடந்தன. ''பஸ்சுல கூட்டமில்லை. ஆனா, கோவில்ல கூட்டம் அதிகமா இருக்குன்னு எங்க அண்ணி சொன்னாங்களே,'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.''உங்க அண்ணி, அங்க இருக்காங்களா... இருந்தால், அடிவாரத்துல இருந்து படியேறிப் போகச் சொல்லு; அறநிலையத்துறை பஸ்சுல போறதை விட, அது
 கணக்குல வராம தர்றாங்க கனெக்ஷன்... கரை வேட்டிகளுக்கு, 'செம' கலெக்ஷன்!

மருதமலை போவதற்காக, சித்ராவும், மித்ராவும் டவுன் பஸ்சில் ஏறினர். பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள், காலியாகக் கிடந்தன.
''பஸ்சுல கூட்டமில்லை. ஆனா, கோவில்ல கூட்டம் அதிகமா இருக்குன்னு எங்க அண்ணி சொன்னாங்களே,'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.
''உங்க அண்ணி, அங்க இருக்காங்களா... இருந்தால், அடிவாரத்துல இருந்து படியேறிப் போகச் சொல்லு; அறநிலையத்துறை பஸ்சுல போறதை விட, அது ரொம்ப 'சேப்டி'ன்னு நினைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.
''என்னக்கா சொல்ற... தினமும் பல ஆயிரம் பேரு, அந்த பஸ்கள்ல தான் போயிட்டு வர்றாங்க. திடீர்னு பயமுறுத்தற?'' என்று கேட்டாள் மித்ரா.
''அங்க மொத்தம் நாலு பஸ்சு ஓடுது... அதுல ஒரு பஸ்சுல போறவங்களுக்கு தான், ஆபத்து. ஏன்னா, அந்த பஸ்சை ஓட்டுறது, 'ப்ராப்பர்' டிரைவர் கிடையாது. ஆபீஸ், 'கிளீனிங்'கிற்காக வேலைக்கு எடுத்தவரை, ஆளில்லாததால டிரைவரா ஆக்கீட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அடக்கொடுமையே... ரோட்டுல ஓட்டுறதுன்னாக் கூட பரவாயில்லை... மலையில ஓட்டுறதுக்கு கொஞ்சம் சர்வீஸ் வேணுமே,'' என்றாள் மித்ரா.
''அது இல்லாமலே, அறநிலையத்துறை அதிகாரியோட காரை ஓட்ட வச்சு, 'ரிகல்சல்' எடுத்திருக்காங்க. அப்பவே, ஒரு காதல் ஜோடியை இடிச்சுக் காயம் ஆக்கிருக்காரு. அவருதான், இப்போ பக்தர்களை அடிவாரத்துல இருந்து கோவிலுக்குக் கூப்பிட்டுப் போற பஸ்சுக்கு டிரைவர்,'' என்றாள் சித்ரா.
''அவுங்களுக்கு பக்தர்களோட பாதுகாப்பைப் பத்தி என்ன கவலை... எப்பிடியாவது கலெக்ஷன் வந்தாப் போதும்னு தான் நினைக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''நீ சொல்றதைப் பார்த்தா, உண்டியலுக்கே, 'டார்கெட்' வப்பாங்க போலிருக்கு,'' என்றாள் சித்ரா.
''இப்பவே வச்சிட்டாங்களே... புது வருஷம், வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும், கோயம்புத்துார் கோவில்கள்ல இருந்து அஞ்சு கோடி ரூபா, உண்டியல் காசு வரணும்னு 'டார்கெட்' போட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''நம்ம 'டார்கெட்'டைப் பத்திப் பேசவும், எனக்கு 'வார்டு' பிரிக்கிறதைப் பத்தி, ஞாபகம் வந்துச்சு. அடுத்த மேயர் பதவியை 'டார்கெட்' வச்சுதான், வார்டு பிரிக்கணும்னு கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு, ஆளுங்கட்சி தரப்புல இருந்து பயங்கரே பிரஷராமே!'' என்றாள் சித்ரா.
''அதே தான்... தமிழ்நாடு முழுக்க, டிச., 27 அன்னிக்கே, வார்டு மறு வரையறை பட்டியல் வெளியிட்டுட்டாங்க. ஆனா, நம்ம கார்ப்பரேஷன்ல இன்னமும் வெளியிடலை. நியாயமா, அன்னிக்கு வெளியிட்டு, இன்னிக்கு வரைக்கும் மக்கள்ட்ட ஆட்சேபம் வாங்கிருக்கணும்,'' என்றாள் மித்ரா.
''அதெப்பிடி பட்டியல் வெளியிடாம, மக்கள் ஆட்சேபம் சொல்லுவாங்க?'' என்று விழிகளை விரித்துக் கேட்டாள் சித்ரா.
''யாரும் சொல்லக்கூடாதுன்னு தான், இன்னமும் வெளியிடாம வச்சிருக்காங்க... இன்னிக்கு சாயங்காலத்தோட, ஆட்சேபம் சொல்றதுக்கான 'டைம்' முடியுது. அதனால, 'டைம்' முடியுறதுக்கு முன்னால, பட்டியலை வெளியிட்டு, மக்கள் ஆட்சேபம் இல்லைன்னு கணக்குக் காட்டப் பாக்குறாங்க,'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து... நானும் கேள்விப்பட்டேன்... அதுலயும் மேற்கு மண்டலத்துல, ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்காம். ஆளுங்கட்சியில இருக்குற யாரோ எலக்ஷன்ல நிக்கிறதுக்காகவோ, நிக்கலைங்கிறதுக்காகவோ, வார்டுகளைத் தாறுமாறா பிரிச்சிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அதான் மறு வரையறை பண்ணுன, 'மேப்'பைப் பார்த்தாலே தெரியுதே... இதெல்லாம் பண்ணலைன்னா, இங்க இருக்குற 'டவுன் பிளானிங்' ஆபீசர்கள் யாரும் இங்க வண்டி ஓட்ட முடியாதுல்ல,'' என்றாள் மித்ரா.
''இந்த வேலையெல்லாம் கரெக்டா செஞ்சாத்தான, அவுங்க 'பில்டிங் அப்ரூவல்'லயும், ஆக்கிரமிப்புகள்லயும் வலுவா சம்பாதிக்க முடியும்?'' என்று கேள்விக்குறியாக நிறுத்தினாள் சித்ரா.
''கட்டட அப்ரூவல்ல சம்பாதிக்கிறாங்க... அதென்ன ஆக்கிரமிப்புல சம்பாதிக்கிறாங்கன்னு சொல்ற...'' என்று கேட்டாள் மித்ரா.
''அதுல என்ன ஒனக்கு சந்தேகம்... நஞ்சுண்டாபுரம் ரோட்டுல இருந்து, ராமலிங்க ஜோதி நகருக்குப் போற ரோட்டை அப்பிடியே மறிச்சு, மாசாணியம்மன் கோவில் கட்டிருக்காங்களே... அந்த ஆக்கிரமிப்போட பின்னணியில, பிரமாண்டமான குடோன் இருக்கு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''தெரியலை... அந்த ஏரியாவுல, ஒரு 'சென்ட்'டே பல லட்ச ரூபா இருக்குமே!'' என்றாள் மித்ரா.
''ஆமா... பல கோடி ரூபா மதிப்புள்ள அந்த இடத்தை ஆக்கிரமிச்சு, குடோன் கட்டிருக்காங்க. அது தெரிஞ்சு, 'டவுன் பிளானிங்' ஆளுங்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து, பெரிய 'அமவுண்ட்'டா வசூல் பண்ணீட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்னாலே பல கோடி ரூபா சமாச்சாரமாத்தான் இருக்கும்... 'ஸ்வச் பாரத்'ல 12 கோடி ரூபா வந்துச்சே... அதுல ஏழு கோடி ரூபாய்க்கு பேட்டரி கார், தள்ளு வண்டியெல்லாம் வாங்குறதுக்கு 'டெண்டர்' விட்ருக்காங்க. எடுத்தது யாருன்னு தெரியலை... ஆனா, எதுவுமே வந்தபாடில்லையாம்,'' என்றாள் மித்ரா.
''ஒரு வேளை, எல்லாம் வாங்கி, வீணாப் போச்சுன்னு கணக்கு எழுதுவாங்களோ... கவர்னர் ஆய்வு பண்ணுனாரே... இதெல்லாம் அவருக்குத் தெரியாதா?'' என்றாள் சித்ரா.
''குப்பை மேட்டரை விடுக்கா... அது எப்பவுமே ஆளுங்கட்சிக்காரங்களுக்கு, 'பொன் முட்டை இடுற வாத்து' மாதிரித்தான்... இப்போ புதுசா குடிதண்ணி கனெக்ஷன்ல காசு பாக்க ஆரம்பிச்சிருக்காங்க,'' என்று நிறுத்தினாள் மித்ரா.
''எல்லா 'டேம்'லயும் தண்ணி இருந்தாலும், குடிதண்ணி 'கனெக்ஷன்' மட்டும் தர மாட்டேங்கிறாங்களே,'' என்று இடையில் புகுந்தாள் சித்ரா.
''அதுல தான் 'வசூல் பார்முலா' இருக்கு... கிட்டத்தட்ட பத்தாயிரம் பேரு, புதுசா குடிதண்ணி கனெக்ஷன் கேட்டு, 'அப்ளை' பண்ணிருக்காங்க. ஆனா, ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்' இருக்கிறவுங்களுக்கு மட்டும் தான், கனெக்ஷன் கொடுக்குறாங்க... அதுவும் 'இல்லீகலா' மட்டும் தான் தர்றாங்க,'' என்றாள் மித்ரா.
''என்ன மித்து சொல்ற... 'இல்லீகலா' எப்பிடித் தர முடியும்?'' என்று கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா.... ஒரு கனெக்ஷனுக்கு 'பில்டிங்' மதிப்பைப் பார்த்து, 25 ஆயிரத்துல இருந்து, 50 ஆயிரம் ரூபா வரைக்கும் ஆளுங்கட்சிக்காரங்க வாங்கிட்டு, 'அன் அபிஷியல்'லா கனெக்ஷன் வாங்கித் தர்றாங்க,'' என்றாள் மித்ரா.
''வெறும் அம்பது ஆயிரமெல்லாம், கட்சிக்காரங்க வாங்குறது... காக்கிச் சட்டை வாங்குனா, அம்பது லட்சம் தான்,'' என்று 'டிரெயிலர்' ஓட்டினாள் சித்ரா.
''என்னக்கா சொல்ற... அம்பது லட்சமா?'' என்று மயக்கம் போடுவது போல், தலையைச் சுற்றினாள் மித்ரா.
''ஆமா மித்து... விஷ வாயு தாக்கி மூணு பேரு செத்தாங்களே... அந்தக் கேசுல, சம்மந்தப்பட்ட கடை முதலாளியை, 'வெளிய' விடுறதுக்கு, முப்பதோ, அம்பதோ வாங்கிருக்காராம் சம்மந்தப்பட்ட காக்கிச்சட்டை,'' என்றாள் சித்ரா.
''ஓ... சுடர் விட்டு எரியுற அந்த ஆபீசரா... அவருக்கென்ன ஏற்கனவே நல்லா சம்பாதிச்சு, ஊருல பிரமாண்டமா வீடு கட்டிருக்கார்னு சொல்லுவாங்க. மனிதாபிமானமே இல்லாம, இந்த 'மேட்டர்'ல காசு வாங்குறதுக்கு, அவருக்கு எப்பிடி மனசு வந்துச்சாம்... அப்பிடி என்ன செலவாம்?'' என்றாள் மித்ரா.
''ஊருல இருக்குற வீடு போதாதுன்னு, சரவணம்பட்டியில பிரமாண்டமா, ஒரு வீடு கட்றாராம். அதைச் சிறப்பா கட்டணும் தான், நகை பேக்டரிகாரர்ட்ட 'பில்'லை போட்டுட்டார்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''ஆர்.எஸ்.புரத்தைப் பத்திப் பேசவும், அங்க நடக்குற இன்னொரு சம்பாத்தியம் பத்தி ஞாபகம் வந்துச்சு... அங்க இருக்குற 'கார்ப்பரேஷன் பார்க்கிங்'கைப் பாத்திருக்கியா நீ?'' என்று கேட்டாள் மித்ரா.
''ஓ... பாத்திருக்கேனே... அங்கதான் 'மல்டி லெவல் பார்க்கிங்' வர்றதா சொல்லிட்டே இருக்காங்களே!'' என்றாள் சித்ரா.
''அங்க கார்ப்பரேஷன் சார்புல 'பார்க்கிங்'கிக்கு கொடுத்தது, ரெண்டு ஏக்கர் ஏரியா மட்டும் தான்... ஆனா, இப்போ பக்கத்துல இருக்குற கார்ப்பரேஷன் ஸ்கூலை மூடிட்டதால, அந்த ஏரியாவையும் வளைச்சு, அஞ்சு ஏக்கருக்கு மேல ஆக்கிரமிச்சு 'பார்க்கிங்' நடத்துறாங்க,'' என்றாள் மித்ரா.
''இதெல்லாம் கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டாள் சித்ரா.
''எப்பிடித் தெரியாம இருக்கும்... மண்டலத்தைப் பாக்குற ஆபீசருக்கு, அதுல மட்டும் மாசத்துக்கு பல லட்ச ரூபா 'மாமூல்' போகுதாம். மேல இருக்கிறவுங்களுக்கு அதுல 'பங்கு' போகுதா என்னன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.
பஸ்சிற்குள் கூட்டம் அதிகமானது. பெண் ஆசிரியர்கள் சிலர், பள்ளிக் கல்வித் துறை பற்றி, அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்குக் கேட்காமல், அமைதியாகப் பேசினாள் சித்ரா.
''ரொம்ப நாள் கழிச்சு, கோயம்புத்துாருக்கு புது 'டிஇஓ' போட்ருக்காங்க. என்ன ஆச்சரியம்னா, இப்பதான் 'சீனியாரிட்டி'படி சரியாப் போட்டு இருக்காங்கன்னு டீச்சர்ஸ் பேசிக்கிறாங்க,''
''ஆனா, அதே பேர்ல மெட்ரிகுலேஷன் ஸ்கூல்களைப் பாக்குறதுக்கு ஒரு ஆபீசரைப் போட்டாங்களே... அவுங்களை 'போஸ்ட்டிங்' போட்டதுல, ஏகப்பட்ட குளறுபடி இருக்காமே!''
''அது தெரியலை... ஆனா, நம்மூர்ல புதுவாழ்வு திட்டத்துல வேலை பார்த்த, 20, 25 பேரை, திடீர்னு வேலையை விட்டு நீக்குனதுல, அவுங்க குடும்பங்கள் பாவம்... பயங்கர கஷ்டத்துல இருக்காங்க. கேட்டா, புதுவாழ்வு இரண்டாம் திட்டத்துல சேர்க்குறோம்னு சொல்றாங்களாம். அது எப்போ வருமோ?'' என்றாள் மித்ரா.
மீண்டும் அளளே தொடர்ந்தாள், ''நம்ம ஊருல ஆளுங்கட்சிக்காரங்களுக்குதான், புதுசு புதுசா வாழ்வு வருது... மத்தவுங்க பாடு திண்டாட்டம் தான்.''
''உண்மைதான்... போன வாரமும் 'சிண்டிகேட்' போட்டு 'பார்' ஏலத்தை முடக்கிட்டாங்க. டிரான்ஸ்போர்ட் 'டெண்டர்'லயும் அதே ஆளையே எடுக்க வச்சிட்டாங்க. பணம் கட்டலைன்னு 'பார்'க்கு 'சீல்' வச்சா, ஆபீசர் போனதும் அவுங்களே ஒடைச்சு திறந்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''ஆக மொத்தத்துல, 'இல்லீகல் ராஜ்யம்' கொடிகட்டிப் பறக்குதுன்னு சொல்லு'' என்றாள் மித்ரா.
''உண்மைதான்... இதெல்லாம் கேக்கிறதுக்கு எதிர்க்கட்சிகளே இல்லியா?'' என்றாள் சித்ரா.
''எதிர்க்கட்சின்னு சொன்னதும் கதர்ச்சட்டைக ஞாபகம் வந்துச்சு. மாவட்டப் பொறுப்புல இருக்குற 'ரேடியோ' கம்பெனி குமாரு, பிரபு கோஷ்டி ஆளுங்களை கண்டுக்கிறதே இல்லியாம். மாஜி மேயர் மாதிரி வயசானவுங்களையே, பேரு சொல்லித்தான் கூப்பிடுறாராம்,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா பதில் சொல்வதற்குள், மருதமலை அடிவாரத்தில் பஸ் நின்றது. இருவரும் இறங்கி, படியேறுவதற்காக நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X