எளியோரிடம் வசூலிப்பதே, எஸ்.ஐ.,க்கு 'லட்சியம்':'என்ன எரிஞ்சா எனக்கென்ன?' ஆபீஸர் அலட்சியம்

Updated : ஜன 06, 2018 | Added : ஜன 02, 2018
Advertisement
புத்தாண்டு லீவு முடிந்து கோவிலுக்கு புறப்பட்டாள் சித்ரா. அப்போது, மொபைல் போன் ரிங் ஆகவே, “என்ன, மித்ரா, இவ்ளோ லேட் பண்ற. சீக்கிரம் வாங்க. இல்லாட்டி, கூட்டம் வந்துடும்,” என்று அவசரமாக பேசினாள்.மொபைல் போனை, கைப்பையில் வைக்கவும், மித்ரா வேகமாக நடந்து வரவும் சரியாக இருந்தது. மொபட்டை ஸ்டார்ட் செய்த போது, “அடடே, மறந்துட்டேனே,” என்றவாறு, வீட்டுக்குள் சென்று ஹெல்மெட்டை தலையில்
 எளியோரிடம் வசூலிப்பதே, எஸ்.ஐ.,க்கு 'லட்சியம்':'என்ன எரிஞ்சா எனக்கென்ன?' ஆபீஸர் அலட்சியம்

புத்தாண்டு லீவு முடிந்து கோவிலுக்கு புறப்பட்டாள் சித்ரா. அப்போது, மொபைல் போன் ரிங் ஆகவே, “என்ன, மித்ரா, இவ்ளோ லேட் பண்ற. சீக்கிரம் வாங்க. இல்லாட்டி, கூட்டம் வந்துடும்,” என்று அவசரமாக பேசினாள்.
மொபைல் போனை, கைப்பையில் வைக்கவும், மித்ரா வேகமாக நடந்து வரவும் சரியாக இருந்தது. மொபட்டை ஸ்டார்ட் செய்த போது, “அடடே, மறந்துட்டேனே,” என்றவாறு, வீட்டுக்குள் சென்று ஹெல்மெட்டை தலையில் அணிந்து, புறப்பட்டாள். “ஏது, டிராபிக் ரூல்ஸை சரியாக பாலோ பண்றீங்க போல,” என்று மித்ரா சிரித்தாள்.
“ஆமாம், நம்மை போல ஹெல்மெட் போடாமல் போறவங்களை தான் டிராபிக் போலீஸ் பிடிப்பாங்க. ஆனால், சொகுசு காரில் சீட் பெல்ட் போடாமலும், மொபைல் போன் பேசிட்டு போறவங்களை மட்டும் கண்டுக்க மாட்டாங்க,” என்றவாறே வண்டியை செலுத்தினாள் சித்ரா.
“மெயின் ரோட்டுல டிராபிக் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டருங்க நின்னு பிடிச்சாங்கன்னா, பைன் போட்டு அனுப்பிடறாங்களாம். ஆனால், குறுக்கு சந்துகளில் நிற்கும் போலீசார், ஆளுக்குத் தகுந்தவாறு 100, 200ன்னு 'மேட்டர்' வாங்கிட்டு அனுப்பறாங்களாம். எளியவர்களை கண்டால் ஏறி மிதிக்கறாங்க,”' என்று தன் பங்குக்கு ஆதங்கப்பட்டாள் மித்ரா.
“இதை சொன்னதும் தான் ஞாபகம் வருது. அவிநாசி காதி வாரிய விற்பனை நிலையத்தில், ஆய்வு செய்ய சென்னையிலிருந்து வந்த அதிகாரி ஒருவர், பெண் ஊழியரிடம், 'எத்தனை வருசமா இங்கு இருக்கிறீங்கன்னு?' கேட்டிருக்கார். 'எட்டு வருசமாச்சுன்னு,' அவங்க சொல்லவும், 'இத்தனை வருசம் எப்படி ஒரே இடத்துல வேலை பார்ப்பீங்கன்னு,' சொல்லி டிரான்ஸ்பர் போட சொல்லிட்டு போய்ட்டாரு.
“ஆனால், அதே காதி வாரிய ஹெட் ஆபீசில், 25 வருசமா உயர் அதிகாரி வரை ஆட்டிப்படைக்கிற ஒரு பெண் அதிகாரியை டிரான்ஸ்பர் செய்யவே முடியலையாம்,” என்றாள் சித்ரா.
“ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். மினிஸ்டர் பி.ஏ.,வே அந்தம்மா டிரான்ஸ்பர் பத்தி பேசிய போது, நான் மினிஸ்டருக்கு மேல உள்ளவங்களையே பார்த்துக்குவேன். என்னை யாரும், ஒண்ணும் பண்ண முடியாதுன்னு,' சொல்றாங்களாம். இப்படித்தான் இருக்குது நிலைமை,” என்றாள் மித்ரா.
மொபட், காமராஜர் ரோட்டில் திரும்பிய போது, டிராபிக் நெரிசல் காணப்பட்டது.
“இந்த இடத்துல, எப்ப டிராபிக் பிரச்னை தீருமோ தெரியவில்லை,” என்றவாறு, “நம்ம மாவட்டத்துல, இப்பெல்லாம் கொள்ளை, திருட்டு ஜாஸ்தியாயிட்டு வருது பார்த்தியா,” வண்டியை மெதுவாக ஓட்டினாள் சித்ரா.
“குன்னத்துரில் கொள்ளையும், நாச்சிபாளையத்தில் இரட்டை கொலையும் நடந்தது. விசாரிக்க தனிப்படை அமைச்சிருக்காங்க,” என்றாள் மித்ரா.
“தனிப்படை அமைத்து என்ன பிரயோஜனம்? விசாரிக்க வேண்டிய போலீசார், சி.எம்., பந்தோபஸ்துக்கு போய்ட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு, விசாரிச்சு எதை கண்டுபிடிக்க முடியும். கிரைம் டீமுக்கு தகுதியான ஆட்களை போட்டு, சுதந்திரமா விட்டால் தானே, குற்றவாளிகளை பிடிக்க முடியும்,” என்று சித்ரா கூறியதும், “நீங்க சொல்றதும், வாஸ்தவம்தான். 'ஸ்டிராங்கான' செக்யூரிட்டி இருந்தும் கூட திருட்டை தடுக்க முடியாம போன விஷயம் தெரியுமா,” என்று புதிர் போட்டாள் மித்ரா.
“நீ எதை சொல்றேன்னு எனக்குத் தெரியும். என்.எச்., ரோட்டுல இருக்கற ஒரு பெரிய பவுண்டரியில் பல லட்சம் ரூபாய் காப்பர் பொருளை காரில் வந்து திருடிட்டு போய்ட்டாங்க. ஆனால், இது வெளியே வராம அமுக்கிட்டாங்க. என்னன்னு பார்த்தா, அந்த கம்பெனிக்கு , மாஜி டி.எஸ்.பி.,யும், இன்ஸ்பெக்டரும்தான் செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆக இருக்காங்க. அதனால, திருட்டு வெளியே தெரியாமல், மூடி மறைச்சுட்டாங்களாம்,” என்று விளக்கினாள் சித்ரா.
“போலீஸ் என்றாலே போலீஸ் ஹெல்ப் பண்றது சகஜம்தானே. இப்படித்தான் அவிநாசியில, ஒரு வருசத்துக்கு அப்புறம் நடவடிக்கை எடுத்திருக்காங்க,” என்றாள் மித்ரா.
“ஒரு வருஷமா? எதை சொல்றே?” என்றாள் சித்ரா.
“போக்குவரத்து விதி மீறலுக்கு போலி ரசீது போட்டு, நல்லா கல்லா கட்டினாரே ஒரு டிராபிக் எஸ்.ஐ., ஞாபகம் இருக்கா,” என்று கேட்டாள் மித்ரா.
“ஆமாம். அதைப்பத்தி டி.எஸ்.பி. விசாரிச்சு நடவடிக்கை எடுப்பார்னு, எஸ்.பி., சொன்னாங்க. அதானே,” என்று சித்ரா கூறியதும், “அதேதான். ஒரு வருஷமாகியும் எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. அதுக்குள்ள, ஒரு வக்கில், தனது 'பேஸ்புக்' பக்கத்துல, இதைப்பத்தி, ஒரு பதிவு போட்டிருக்கார். அதுக்கப்புறம்தான், இப்போ, ஆயுதப் படைக்கு மாத்தினாங்களாம். ரெண்டு மூணு நாள்ல மறுபடியும், டியூட்டிக்கு வந்துட்டாராம்,” என்று மித்ரா கூறி முடிக்கவும், ஈஸ்வரன் கோவில் வரவும் சரியாக இருந்தது.
பக்தர்களின் கூட்டத்தை பார்த்து மிரண்ட சித்ரா, வண்டியை ஓரமாக பார்க்கிங் செய்து விட்டு, “இதுக்குத்தான், அப்பவே சொன்னேன். நீ கேட்டீயா?” என்று கோபிக்க, “அதை விடுங்க, பார்த்துக்கலாம்,” என்ற மித்ரா வரிசையில் நிற்க, சித்ராவும் இணைந்து கொண்டாள்.
வரிசை மெதுவாக நகர ஆரம்பித்தது. “ஒரு எச்.எம்., செஞ்ச வேலையால, மத்த அஞ்சு பள்ளிகளுக்கு, 'லேப்-டாப்' கிடைச்சிருச்சு” என்று மித்ரா சொன்னதும், “புரியும்படியா சொல்லு,” என்று சலித்து கொண்டாள் சித்ரா.
“தி கிரேட்டர் சென்னை ரோட்டரி கிளப் தலைவரோட மனைவி, ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவியாம். தான் படிச்ச பள்ளிக்கு ஏதாச்சும் செய்யணும்னு, அறிவியல் கழகம் மூலமா, 80 'லேப்--டாப்' வாங்கித்தர முடிவு செஞ்சாங்களாம். அதுக்கு, சி.இ.ஓ., பர்மிஷன் கொடுத்தும் கூட, எச்.எம்., இன்ட்ரஸ்ட் காட்டவில்லையாம்,”
“இதை தெரிஞ்சுட்ட ரோட்டரிகாரங்க, கார்ப்ரேஷனில் இருக்கிற, ஐந்து ஸ்கூலுக்கு, 80 'லேப்--டாப்'பையும் பிரிச்சு கொடுத்திட்டாங்க. எல்லோரும் சந்தோஷமா வாங்கிட்டு, முன்னாள் மாணவிய பாராட்டினாங்களாம்,” என்று விளக்கினாள் மித்ரா.
“எச்.எம்., பிடிவாதத்தால, அநியாயமா 'லேப்--டாப்' கெடைக்காம போச்சே. இதே மாதிரிதான், எம்.எல்.ஏ., வும் இரக்கமே இல்லாம பேசுனாராம்,” என்றாள் சித்ரா.
“எந்த எம்.எல்.ஏ.,?” என்று மித்ரா கேட்டதும், “துணை முதல்வர் ஆதரவாளரா இருக்கற, ஐயப்ப பக்தர்கள், அண்ணா நகரில், அன்னதான விழாவுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. அதுக்காக, நார்த் எம்.எல்.ஏ.,கிட்ட நன்கொடை வாங்க போனாங்க. அதுக்கு, எம்.எல்.ஏ., 'லாட்டரி சீட்டு வாங்கிட்டு வந்து குடுங்க. விழுந்துச்சுனா, பணம் தர்றேன்னு,' கேவலப்படுத்தற மாதிரி பேசியிருக்காரு,”
“ அதுக்கு, 'என்ன சாமி. நம்ம கட்சி தான் லாட்டரிய ஒழிச்சுது. நீங்க இப்படி பேசுறீங்களேன்னு,' ஐயப்ப பக்தர்கள் வருத்தப்பட்டுட்டு வந்தாங்களாம்,” என்று மித்ரா கூறியதும், “கொஞ்சம் மேலே போற வரைக்கும், தாஜா செய்யறது. அப்புறம் எட்டி உதைக்கிறது. இது கொஞ்சம் கூட சரியில்லை,” என்று சித்ரா ஆமோதித்தாள்.
வரிசை நகர்ந்து கொண்டேயிருக்க, “செட்டிபாளையம் கார்ப்ரேஷன் குப்பை குடோனில், தீப்பிடிச்சது தெரியுமா?” என்று சித்ரா கேட்டதும், “ஆமாம், கேள்விப்பட்டேன். 3:45 மணிக்கு தீப்பிடிச்சப்ப சொன்னது, 5:10 மணிக்குத்தான் 'பயர்' வண்டி வந்ததாம். இதனால, 'ஷெட்' இடிஞ்சு விழுந்திருச்சாம். இவ்வளவு நடந்தும், ஒரு ஆபீசரு கூட, அங்க போகலையாம். மொபைல் போன 'சுவிட்ச் ஆப்' பண்ணி வைச்சதுதான் கொடுமையிலும் கொடுமை. எங்கே எரிஞ்சா நமக்கென்ெனன்னு நினைக்கிற அதிகாரிங்க இருக்கற வரைக்கும், நல்லது நடக்குமா?,” என்று கோபப்பட்டாள் மித்ரா.
அதற்குள், சன்னதி வரவே, “ஆடல் வல்லானுக்கு, அரோகரா,' என்று இருவரும், நடராஜ பெருமானை வணங்கி, பிரகாரத்தில் அமர்ந்தனர். “அப்பப்பா, எவ்ளோ கூட்டம் பாருங்க,” என்று மித்ரா சொன்னதும், “ஆமாம். மக்களுக்கு அவ்ளோ பிரச்னை. ஆனா, இந்த அவிநாசியில மட்டும், எவ்ளோ பிரச்னை வந்தாலும், அந்த டிராபிக் எஸ்.ஐ., அசருவதேயில்லையாம்,” என்று பிரசாதத்தை சாப்பிட்டவாறே, கூறினாள் சித்ரா.
“அவரு மேலதான், சமீபத்தில நடவடிக்கை எடுத்தாங்களே,” என்று மித்ரா சொன்னதும், “அவிநாசியில் எப்.ஓ.பி.,கள் ஆட்டம் ரொம்ப அதிகமாம். இதுக்கு முக்கிய காரணமே, டிராபிக் எஸ்.ஐ., தானாம். சின்ன பசங்கள வச்சு வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்கிறேன் என்ற பெயரில், பெரிய கம்புடன், பயப்படுத்தி வருகிறாராம்.”
“இதனால், வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி நிறுத்துறாங்களாம். திடீரென குறுக்கே வந்து கம்பை வைத்து நிறுத்தும் போது, சிலர் கீழே விழும் 'டேஞ்சரும்' இருக்குது தெரியுமா? இதுக்கு யாருதான் முடிவு கட்றதுன்னு தெரியலையே?” என்று புலம்பியதும், 'ஓம், சச்சிதானந்த நமஹ,' என, மொபைல்போன் ஒலித்தது. எடுத்து பேசிவிட்டு, கைப்பையில், போனை வைத்தாள் சித்ரா.
“அதேபோல, வாகன ஓட்டிகளும் புலம்ப ஆரம்புச்சுட்டாங்க தெரியுமா?” என்று மித்ரா சொன்னதும், “சொன்னாதானே தெரியும்,” என்றாள் சித்ரா.
“வீரபாண்டி ஸ்டேஷனில் இருக்கிற, ரெண்டு போலீஸ்காரங்க சேட்டை அதிகமா இருக்கு. 'வெய்க்கிள் செக்கப்' என்ற பேரில், வாகன ஓட்டிகளிடம், 'எங்களை கவனிச்சா, வெறும், 2 ஆயிரம்தான். இன்ஸ்பெக்டர் கிட்ட போனால், 5 ஆயிரமுன்னு வசூல் பட்டையை கிளப்புறாங்களாம். இந்த, 'பாபு'காரு விட, 'சிக்ஸ் பேஸ்' ஏட்டு ஒருத்தரு, 'சரக்கடிச்சுட்டு,' வண்டிகளை பிடிச்சு 'பைன்' போடறாராம். அப்புறம், அவருக்கு, என்ன 'பீட்' போட்டாலும், வீட்டுக்கு போயி, ஜாலியாக ரெஸ்ட் எடுக்குறாராம். அதனால், அவருக்கு 'பீட்' போடறுதுன்னா, யோசிக்கிறாங்களாம்,” என்று விளக்கினாள் மித்ரா.
“ஓ... அப்படியா சங்கதி. சவுத் ஸ்டேஷன், 'வெற்றி' எந்திரன், எஸ்.ஐ., பண்ற கூத்தை கேளு. இவர் சமீபத்தில் தாராபுரம் ரோட்டில், 'வெய்க்கிள் செக்கப்'பில், இருந்தபோது, வாகன ஓட்டி ஒருத்தர்கிட்ட, 'டாக்குமென்ட்டை' சரிபார்த்துட்டு, 'ஹெல்மெட்'டுக்கு நுாறு ரூபாய் 'பைன்' போட்டாராம். ஆனா, அதுக்கு ரசீது கொடுக்கலையாம்.”
“இதைப்பத்தி, சம்பந்தப்பட்டவர் கேட்டதுக்கு, 'ஸ்டேஷனுக்கு போய் வாங்கிக்கோ,'ன்னு சொன்னாராம். 'ஸ்டேஷனில்' கேட்டதற்கு, 'எங்களுக்கு ஒண்ணும் தெரியாது,' என்று கைவிரிச்சாங்களாம். அதே எஸ்.ஐ., புகையிலை பொருள் சோதனை செஞ்சா, கடையில கிடைக்கும், பிஸ்கட், அப்புறம், தின்பண்டங்களையும், எடுத்துக்கிறாராம். இதைப்பார்த்த மற்ற போலீஸ்காரங்க, 'காக்கி யூனிபார்ம் மரியாதையே கெடுக்கிறாருன்னு,' புலம்பறாங்களாம்,” என்று சித்ரா கூறி முடித்ததும், “சரி கிளம்பலாம்,” என்று மித்ரா சொன்னதும், “ஓ.கே.,” என்றாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X