இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை! : இன்று சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் | Dinamalar

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை! : இன்று சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை!  : இன்று சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்

பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளையும் எடுத்துச் சென்றாள் அந்தப் பெண். ஏனெனில் அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே வழி நெடுகிலும் சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி அவள் மீது வீசுவார்களாம். அவற்றை அமைதியாக எதிர் கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக் கொள்வாளாம் அந்தப் பெண். யாரிந்தப் பெண்? இவள் செய்த குற்றம்தான் என்ன?இந்திய தேசத்தின் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராகப் போராடிய முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே தான் அவர். மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நைகோன் கிராமத்தில் 1831 ஜன.,3ல் பிறந்தது அந்த பெண் சிங்கம். கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர்.
தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவியானார். கணவரின் துணையோடு கல்வி கற்றார். அவர் கற்ற கல்வியே மிகப்பெரிய சமூக மறுமலர்ச்சிக்கு காரணமாய் பின்னாளில் அமைந்தது. சாவித்திரி பாய் புலேவின் கணவர் ஜோதிராவ் புலேவும் ஒடுக்கப்பட்ட பிரிவில் பிறந்தவர்தான். இளம் பருவத்திலேயே ஆதிக்க ஜாதி முறைகளால் அவரது குடும்பம் பல இன்னல்களுக்குள்ளானது. இதுவே பின்னாளில் சமூகப் புரட்சியாளராக மாற்றியது.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெறுவதன் மூலமே சமூகத்தில் உயர்நிலை அடைய முடியும் என நம்பினார். மனைவி சாவித்திரிபாய்க்கு வழி காட்டியாய் இருந்து அவரை
ஆசிரியப் பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டார். 1848 ல் தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அதில் சாவித்திரிபாய் பள்ளியில் பொறுப்பு ஏற்று இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார். தனி நுாலகத்தையும் 1863ல் உருவாக்கினர்.

அற்புதமே பெண்ணானது : சூழலை உருவாக்கு அல்லது சூழலை உனதாக்கு என்பதை
நிரூபித்துக் காட்டினார் சாவித்திரிபாய். போற்றுபவர் யாரும் இல்லை. 'துாற்றுபவரே அதிகம் இருந்த போதும் ஏற்றதோர்பணியை செய்வேன். எவர் தடுத்திடும் நில்லேன்' என்ற அந்த இரும்புப் பெண்ணின் மன உறுதியே நம் அனைவருக்குமான பாடமாகும்.கல்வியின் மூலம் அற்புதங்கள் நிகழ்த்தியவர். அற்புதமே பெண்ணானவர் எனக் கூறலாம். 'கல்வி என்னும் புனிதத்தை
உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலராகவேதோன்றுகின்றன' என கூறித் தொடர்ந்து சேவை ஆற்றிய அவரின் ஆற்றலை என்னவென்று சொல்வது? சிறு விஷயங்களுக்கு எல்லாம் துவண்டு போகும் பெண்கள் அனைவருமே கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சாதனைப் பெண்மணி அவர்.'கல்வி என்ற வலிமை வாய்ந்த ஆயுதம் மூலமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும்' என நம்பினார். சமுதாயத்தின் பிழை திருத்தும் ஆசிரியரானார். கல்வி என்ற வலிமை மிகுந்த பேராயுதத்தைக் கையிலேந்தினார்.'கல்வி என்பது இது சரி, இது தவறு என்று ஆராயும் திறனைத் தர வேண்டும். அது மெய்யையும், பொய்யையும் உணர வைக்க
வேண்டும்' என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து புதிய பாடத் திட்டத்தை மகாராஷ்டிர அரசுக்குப் பரிந்துரைத்தார்.

உறுதி மொழி : 'திருமணங்களின் போது பெண்களைப் படிக்க வைப்பேன்' என மாப்பிள்ளைகளை மண மேடையில் உறுதி மொழி எடுக்க வைத்தார். தனக்கு வாய்த்த வாய்ப்புகள் தன்
கணவனின் மூலமே என்பதை உணர்ந்திருந்த அந்தப் பெண், அனைத்து பெண்களுக்குமே அப்படியாக அமைய வேண்டும் என எண்ணினார். தனக்கென வாழ்வது சாதாரண வாழ்க்கை. பிறருக்கென வாழ்வதே சரித்திர வாழ்க்கை என்பதை உணர்த்தியவர் சாவித்திரி
பாய். சிறு வயதில் கணவனை இழந்த பெண்களுக்கும், சிறு வயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்து தனியாக இல்லம் தொடங்கினார். விதவை மறுமணம், ஜாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாய சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்தார்.பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில், தன்
கணவனின் இறுதிச் சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். சாதாரணங்களைக் கொடுத்தவர்களையெல்லாம் அசாதாரணமாக கடந்தவர். பூக்கள் அல்ல பெண்கள். புயல்களாகவும் இருப்பார்கள் என புரட்சி செய்து காட்டிய பெண்.

தன்னம்பிக்கை மனுஷி : ர்திருத்தங்களுக்குப் பின்னால் அவர் எத்துணை நெருக்கடி
களையும், போராட்டங்களையும் சந்தித்து இருப்பார் என யோசித்துப் பாருங்கள். தன்னம்பிக்கை மனுஷி யாக, சமுதாயத்தின் பிழை திருத்தும் போராளியாக, சமூக ஏற்றத் தாழ்வினை வேரறுக்கும் சக்தியாக வாழ்ந்து காட்டிய வீராங்கனை. ஆனால் இந்திய வரலாற்றில் இந்த உன்னத மனுஷி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஜான்சிராணியைப் படிக்கும் நம் குழந்தைகளுக்கு ஏன் சாவித்திரி பாயின் வீரத்தையும் சொல்லக் கூடாது? 'ஆசிரியர் தினம்' என்றதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஞாபகம் மட்டுமே வரக் கற்றுக் கொடுத்த சமுதாயத்தில்,இந்த பெண் ஆசிரியையின் பெயர் கொண்டாடப்படாதது வருத்தமான
நிகழ்வே. சாவித்திரிபாய் புலே நம் அனைவருக்கும் சொல்லிச் சென்ற செய்தி இதுதான். உனக்குள்ளே எல்லா ஆற்றலும் அடங்கியுள்ளது. அந்த ஆற்றலை இந்த சமூகத்திற்கு நல்லது செய்யப்பயன்படுத்து. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்பதும், சாதிப்பதற்கு பாலினமோ, ஜாதிய வேறுபாடுகளோ தடையில்லை என்பதும் தான்.

'உன்னில் நம்பிக்கை கொள்.
விழித்திரு, உழைத்திரு.
அறிவின் ஆதி வரைசிந்தித்திரு
ஜாதி என்னும் சங்கிலியை
அறுத்து எறிஆதிக்கம் என்னும் சொல்லை துார வீசு.
அறிவையும் செல்வத்தையும் திரட்டு
அறிவில்லையெனில்நாம் விலங்குகளாக மாறிடுவோம்.
போ... கல்வியைக் கற்றுக் கொள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும்கை விடப் பட்டோரின்துன்பம் போக்கு...'
இப்படியாகச் செல்கிறது அவரின் கவிதை வரிகள்.

எழுதிய நுால்கள் : அவர் எழுதிய நுால்களும், கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்தளிக்கின்றன.'நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என கூறிச் சென்ற கலாமின் வார்த்தைகள் கூட சாவித்திரிபாய்க்குப் பொருத்தம்தான். ஆம்... இவரின் இறப்பும் கூட சரித்திரம் சார்ந்தது தான்.1897ல் பிளேக் பரவிய கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்த நோய் சாவித்திரியையும் தொற்றிக் கொண்டது. 1897 மார்ச் 10 ல் இந்த மண்ணுலக வாழ்வில் இருந்து பிரியா விடை பெற்றார்.தனக்கென வாழாது சமூக மக்களுக்கெனக் குரல் கொடுத்த சாவித்திரிபாய் புலே போற்றுதலுக்குரிய பெண் சிங்கம். தோன்றட்டும் சாவித்திரிகள். மனித நேயப் பாதைக்கு வித்திட்ட சரித்திர நாயகி சாவித்திரிபாய் என்ற வீரத் தாயை வணங்குவோம்.ஆசிரியர் தினம், செப்டம்பர் மாதம் என்ற நடைமுறை இருக்கட்டும். பெண் ஆசிரியர்
களுக்கான தினமாக ஜன., 3-ல் அவரை நினைவு கூரலாம். அவர் பெயரில் விருதுகள் வழங்கலாம். பெண்களைக் கொண்டாடும் நம் சமுதாயத்தில் இந்த சாதனைப் பெண்ணைக் கொண்டாடுவது மேலும் ஒரு மணி மகுடமாக இருக்கும்.'காலம் எவ்வளவு பெரிய இடரை ஏற்படுத்தினாலும் நமது செயல்பாடுகள் தடைபடக் கூடாது'- இது அவரது வரிகள். இதுவே அந்த வீரப் பெண்மணி நமக்கு விடுக்கும் சிந்தனை.

- ம.ஜெயமேரி, ஆசிரியை
ஊ.ஒ.தொ.பள்ளி
க.மடத்துப் பட்டி
bharathisanthiya10@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X