கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி?

'நான் ரோபோ இல்லை' -- நீங்கள் துவக்கியிருக்கும், 'ரஜினி மன்றம்' இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒளிரும் இந்த வாசகத்தில் இருந்து தான், உங்களின் அரசியல் பிரவேச சூழலை அணுக வேண்டியிருக்கிறது. ரோபோ எனப்படும் இயந்திர மனிதனாக நீங்கள் நடித்திருக்கும், 2.0 படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், 'தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்' எனும் நல்லெண்ணத்துடன், அனைவரையும், 'ரஜினி மன்றம்' எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி!

கண்ணாமூச்சி, கபாலி, Kabali, ஆன்மீக அரசியல், aanmeega arasiyal , ரஜினி மன்றம்,rajini mandram,ரஜினி அரசியல், Rajini politics, அரசியல் பிரவேசம்,  ரோபோ, Robot, இயந்திர மனிதன், மகிழ்ச்சி, உண்மை உழைப்பு உயர்வு, பாபா முத்திரை, அரசியல் பிரவேசம்,


சமீபத்தில் நடந்து முடிந்த ரசிகர் சந்திப்பின் ஆறாம் நாள்; டிசம்பர் 31, 2017.'ரொம்ப பில்டப் ஆயிடுச்சுல்ல...ஹா... ஹா... ஹா...' என, நீங்கள் துவக்கியதும் ஆர்ப்பரித்தது, உங்கள் ரசிகர் கூட்டம். ஆடித் தீர்த்த அரங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசமாக, 'நான் பில்டப் கொடுக்கலேங்க; தானா ஆயிடுச்சு' என்றீர்கள்.
மீண்டும் பற்றிக் கொண்டது ஆர்ப்பரிப்பு. இந்த இடம் தான், உங்களிடம் இக்கேள்விகளைஎல்லாம் எழுப்ப வேண்டும் எனத் துாண்டியது.

தாரக மந்திரம்


'ஆன்மிக அரசியல்' மூலம் நாணயமாக ஆட்சி செய்ய விரும்பும் நீங்கள், உண்மை, உழைப்பு, உயர்வு என்பதை தாரக மந்திரமாக கொண்டிருக்கும் நீங்கள், 'பாபா' முத்திரை பிடிக்கும் கையை, நெஞ்சில் வைத்து உண்மை சொல்லுங்கள்.

கடந்த, 1996 முதல் அல்லது அதற்கு முன் கூட, 'அரசியலுக்கு வருவீர்களா' என, கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், 'அது காலத்தின் கையில் உள்ளது' எனச் சொல்லி, 'பில்டப்' தந்தது யார்?

இம்மாதிரி எத்தனையோ சந்தர்ப்பங்களில், இதே கேள்வி எழும்பியிருக்கிறது. உங்கள் குருநாதர், கே.பாலசந்தர் கூட, இயக்குனர் சங்க விழா ஒன்றில் இக்கேள்வியை கேட்டார்.அப்போதும் கூட, 'ஆண்டவன் கையில் இருக்கிறது' எனச் சொல்லி, தீப்பெட்டி எடுத்தீர்கள்.

டிசம்பர் 31


ரசிகர்கள் உடனான இந்த சந்திப்பின் முதல் நாள், 'என் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து அறிந்து கொள்ள, டிசம்பர் 31 வரை காத்திருங்கள்!' என, தீக்குச்சி கிழித்தீர்கள்.நீங்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அன்று காலை, உங்கள் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'இன்னும், 10 நிமிடம் கண்ணா' என, கிழித்த தீக்குச்சியை உயர்த்தி காண்பித்தீர்கள்.

இந்த பில்டப் அத்தனைக்கும் யார் காரணம்... எதற்குமே நீங்கள் காரணம் இல்லை; தானா ஆயிடுச்சு. அப்படித்தானே ரஜினி?இதென்ன பிரமாதம்; எதையும் நம்புவோம் நாங்கள்!உங்களின் வெற்றிக்கு, நடிப்பைத் தாண்டி உங்களிடம் இருக்கும் ஈர்ப்பு மிக முக்கிய காரணம் என்றால், யாரும் மறுக்க மாட்டார்கள்.

அதற்கொரு அழுத்தமான சாட்சி தான், 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய ரசிக பெருமக்களே...' என நீங்கள் சொன்னவுடன் மெய் மறந்து கை தட்டும் ரசிகர் கூட்டம், அடுத்த வினாடியே, உங்களைச் சுற்றி வந்து, உங்கள் காலில் விழுந்து வணங்குகிறது!

இந்த தெய்வங்களைத் தான், காவலர்களாக பார்க்க வேண்டும் என, தற்போது விரும்புகிறீர்கள். செய்யும்; நீங்கள் விரும்பியபடியே இப்பணியையும் செவ்வனே செய்யும், இக்கூட்டம்.'எனக்கு கோழையா வாழ்றது பிடிக்காது' -- இது, 1996 தேர்தல் நேரத்தில் நீங்கள், 'வாய்ஸ்' கொடுத்ததற்காக சொன்ன காரணம்.


அன்று இப்படி சொன்ன நீங்கள், தற்போது குருஷேத்திர கண்ணனையும், அர்ஜுனனையும் துணைக்கு அழைத்து வந்து, 'யுத்த களத்தில் ஜெயித்தால் நாடாளலாம். தோற்றால் வீர சொர்க்கம் அடையலாம். ஆனால், யுத்தம் செய்யாமல் இருந்தால் கோழையாகி விடுவோம்' எனச் சொல்லி, அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கிறீர்கள்.

ஆக, கமல் வந்துவிட்டார்; விஷாலும் வந்து விட்டார். யாரும் உங்களை கோழை எனச் சொல்லி விடக்கூடாது. அதற்காக தான் இந்த பிரவேசம்; சரி தானே?'உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால் போட்டியிட வாய்ப்பில்லை' எனச் சொல்கிறீர்களே... உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, தமிழகத்தில் முடிவாகி விட்டதா என்ன?

சரி,2019ல் நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் போட்டி நிச்சயம் என, ஏன் உங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; அதற்குள், திட்டமிட்டபடி குடைக்குள் கூட்டம் வந்துவிடுமா எனும் சந்தேகமா?

உத்தரவாதம் என்ன?


பல நெருக்கடிகளை சந்தித்த படி ஓர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், 2021ல் தான் அடுத்த சட்டசபை தேர்தல் எனும் உத்தரவாதத்தை உங்களுக்கு தந்தது யார்?'ஹா... ஹா... ஹா... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை கண்ணா' என, நீங்கள் மறுப்பதாக இருந்தால், 'பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும், 2.0 படத்தின் விளம்பரங்களுக்காகவே ரஜினி இப்படி செய்கிறார்' என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

அதுபோல, 'ரஜினியின் சினிமாவுக்கு பார்வையாளர்கள் வரத்து குறைந்து விட்டது. அதனால் தான் இந்த முடிவு' எனச் சொல்லும், பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமிக்கும் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

'பணம், பேர், புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை' எனச் சொல்லும் நீங்கள், 'மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய தான் வருகிறேன்' என, எந்த இடத்திலும் அழுத்தமாகச் சொல்லவில்லை.

பதவி நாற்காலி


தவிர, 1996ம் ஆண்டிலேயே பதவி நாற்காலி தேடி வந்ததாகச் சொல்கிறீர்களே தவிர, அப்போது, 'சிஸ்டம்' சரியாக இருந்ததால் அதை தவிர்த்து விட்டேன் என்றும் தெளிவுபடுத்தவில்லை.'இல்லை, அப்போதும் சிஸ்டம் சரியாக இல்லை தான்' என நீங்கள் சொல்வதாக இருந்தால், 'ஏன் அப்போது அரசியலுக்கு வரவில்லை' என்ற கேள்விக்கு, ஆண்டவனை துணைக்கு இழுக்காமல் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

ஜெயலலிதா, கருணாநிதி இருவரிட மும் அரசியல் துாய்மை, நேர்மை, நாணயம் இருந்தது என, நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என அர்த்தம். இந்த அடிப்படையில், கடந்த ஓர் ஆண்டு காலமாக களத்தில் நிற்கும் அரசியல்வாதிகள் தான், ஜனநாயகம் சீர்கெட்டுப் போனதற்கும், சிஸ்டம் கெட்டுப் போனதற்கும், அண்டை மாநிலங்கள் நம்மைப் பார்த்து சிரிப்பதற்கும் காரணம் என, நீங்கள் பகிரங்கமாக சொல்வதாக அர்த்தம். சரி தானே?

'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கு நல்லது செய்ய, ஜனநாயக ரீதியாக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு, என்னை சாகும் வரை கொல்லும். அதனால் தான் அரசியலில் இறங்குகிறேன்!'-இது, இப்போது நீங்கள் அரசியலில் நுழைவதற்காக சொல்லும் நியாயம். ஏன் ரஜினி, உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் நல்லது செய்ய பதவிக்கு வந்துதான் ஆக வேண்டுமா?

உங்கள், 45 வயதில், வேண்டாம் என்று நீங்கள் துாக்கிப் போட்ட பதவி, 68 வயதில் உங்களுக்கு எதற்கு?நேர்மையான, நாணயமான ஆட்சி தரப்போகும் உங்களையும், உங்கள் அரசு நிர்வாகத்தையும் தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும் எனச் சொல்கிறீர்களே... அப்படியென்றால், பதவிக்கு வரப்போவது இந்த காவலர்களில் ஒருவர் கிடையாதா?

Advertisement

நாணயமான, வெளிப்படையான நிர்வாகத்தை நீங்கள் நடத்தும் போது, மக்களுக்கு சேர வேண்டிய நல்ல விஷயங்களை யார் தடுப்பர்; எதற்கு காவலர்கள்?எல்லா தரப்பு மக்களையும் மன்ற உறுப்பினர்களாக, அதாவது காவலர்களாக மாற்றி விட்டு, அவர்கள் மூலமாக மக்களுக்கு கொள்கைகளை கொண்டு போக வேண்டும் என்கிறீர்களே... மக்கள் அனைவரும் காவலர்களாக மாறிய பின், யாருக்கு கொள்கைகளை கொண்டு செல்வதாக திட்டம்?

உங்கள் ரசிகர் மன்றங்களில்பதிவு செய்யப்பட்ட மன்றங்களை விட, பதிவு செய்யப்படாத மன்றங்களின் எண்ணிக்கை அதிகம் என, வெளிப்படையாக சொல்லும் நீங்கள், இத்தனை நாள் அப்படிப்பட்ட மன்றங்களை கண்டும் காணாமல் இருந்தது ஏன்?

கட்டளை

உங்கள் மன்ற ஒருங்கிணைப்பு சிஸ்டம் கெட்டிருந்தது உங்களுக்குத் தெரியவில்லையா?சரி... படித்தவர்கள், படிக்காதவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என, அனைவரும் ஒரு குடைக்குள் வருவது யாரை எதிர்க்க?
'அரசியல் பேசக்கூடாது; அரசியல்வாதிகளை எதிர்க்கக் கூடாது; போராட்டம் பண்ணக் கூடாது; அறிக்கை விடக் கூடாது; அரசியல் குளத்தில் இறங்கக் கூடாது' என, அடுக்கடுக்காய்கட்டளை போட்டு விட்டீர்கள்.
ஆக, இப்போதிருந்து நாங்கள் அனைவரும் உங்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள். அதாவது, உங்கள் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்.இப்போதைக்கு இவ்வளவு தான்! ஆனால், நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். சரி தானே!

கறுப்பு பணம்


'சினிமா நட்சத்திரங்களிடம் கறுப்பு பணம் அதிகம் புழங்குகிறது. ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல' என, பகிரங்கமாக குற்றம் சுமத்தி, 'இப்படிப்பட்டவரா நாட்டில் ஊழலை ஒழிப்பார்' என, சுப்பிரமணியன் சாமி காட்டமாக கேட்கிறார்.
'அரசியலில் ரஜினியின் எதிரி யார்; அவர் கட்சியின் மாறுபட்ட கொள்கைகள் என்னென்ன; அதை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போவது யார்' உள்ளிட்ட கேள்விகள் என்னிடம் உண்டு என்கிறார், கவிஞர் வைரமுத்து.இரண்டு பேருக்குமான பதில் உங்களிடம் உண்டா ரஜினி?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 'நான் நினைத்தபடி இல்லை; அரசியல் சீர் செய்ய முடியாத அளவுக்கு கெட்டிருக்கிறது. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது' என, காலா பட வெளியீட்டிற்குப் பின் ரஜினி ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்ற கேள்வியும் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறது.
ஏனென்றால், 'காலா படத்திற்குப் பின் என்ன செய்யப் போகிறேன் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்' என, ரசிகர் சந்திப்பில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்!மீண்டும் முதல் வரிக்கே வருகிறேன்.'நான் ரோபோ இல்லை' -- உங்கள், ரஜினி மன்றம் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒளிரும் கூகுளின் இவ்வாசகம் தான், மூளையுள்ள மனிதனாக இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி?-வாஞ்சிநாதன்இ - மெயில்: vanjinath40@gmail.com


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
10-ஜன-201814:28:18 IST Report Abuse

Harinathan Krishnanandamகட்சி ஆரம்பிக்கும் நாளுக்கு முந்தய நாளோ அல்லது அதே நாளிலோ குடும்பத்தில் உள்ளகருப்பு பணம் அனைத்தயும் வெளியிட்டு வரியும் கட்டி மக்களுக்கு காட்டப்படும் கவலை வேண்டாம்

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
09-ஜன-201819:43:35 IST Report Abuse

venkateshகுடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு .

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
06-ஜன-201812:13:54 IST Report Abuse

vbs manianஇப்போதுள்ள அரசியல் வாதிகளின் நம்பிக்கைத்தன்மை மிக மிக குறைவு..காலையில் பேசியதை மலையில் மறுக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்காக புது புது பார்முலாக்கள் உருவாகின்றன. பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள்.இந்த சூழலில் ராஜனியிடம் அதிகம் எதிர்பார்ப்பது வீண் .பத்தோடு பதினொன்று.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X