நல்லது நடந்திட வேண்டும்| Dinamalar

நல்லது நடந்திட வேண்டும்

Added : ஜன 04, 2018
 நல்லது நடந்திட வேண்டும்


ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக தான் பிறக்கின்றது புத்தாண்டு. ஆனால் பிறந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் தீர்க்க முடியாத பலவித பிரச்னைகள் எங்கும் விஸ்வரூபம் எடுப்பதும், இயற்கையின் பாதிப்புக்களும், வன்முறை ஆர்ப்பாட்டங்களும், தொடரும் விபத்துக்களும், வாடிக்கையாகி வருத்திக் கொண்டு இருக்கின்றன.இந்தப் புத்தாண்டிலாவது நல் வகைளின் அணிவகுப்பு நடக்காதா? என்ற நப்பாசை மட்டும் சிறிதும் மாறவில்லை. நல்லவை நடக்காதா? என்ற ஆதங்கத்துடன் கூடிய ஏக்கமும், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையும் மனிதனிடம் இருந்து கொண்டே இருக்கின்றது. அப்படியே புத்தாண்டு வந்து விட்டது.\


பழமையும் புதுமையும்'பழையன கழிதலும்; புதியன புகுதலும்' என்பார்கள். புதிய வரவுகள் வந்தாலும் பழமையோடு தொடர்பு கொண்டிருந்தால் தான் புதிய வரவுகளுக்கும் மதிப்பு ஏற்படும். 'பழமையில் புதுமை' என்பது தான் சிறந்த பண்பாடு. பழமையுடன் புதுமையைபுகுத்தினால் தான் நாகரீகமும் பல்கிப் பெருகி சிறந்தோங்க வழி ஏற்படுத்தும். எனவே பழமையின் துணை கொண்டு புதுமையாக சிந்திக்கப் பழகி கொள்ள வேண்டும். புதுமை சிந்தனைகள் தான் சாதனைகள் புரிய வைக்கும். பழைய மூட பழக்க வழக்கங்களை காலமாறுதல்களுக்கு ஏற்றபடி கைவிட வேண்டும்; இல்லா விட்டால் கால வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. எனவே பழமையோடு மாறிவரும் புதுமைகளுக்கு ஈடுகொடுக்கவும், நம்மைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது.


புதுமைக்கு மாறலாமேபுதிய புதிய கண்டுபிடிப்புக்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க மாணவர்களும், விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும். இவை நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு உறுதியளிப்பதாக அமைய வேண்டும். 'எங்கும் புதுமை, எதிலும் புதுமை' என்ற எண்ணங்களின் தாக்கங்களுடன் செயல்பட வேண்டும். 'நாடு முன்னேற்றம் நம் முன்னேற்றம்' என்ற எண்ணங்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதிய வேண்டும். வன்முறைகளின் பாதிப்பை உணர்ந்து எல்லோருடனும் சமாதானமாக வாழப் பழகி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொண்டால் உலகில் வன்முறைக்கு இடமேது.நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டும். இளையோர் ஒவ்வொருவரும் நன்கு உழைக்கப் பழகி கொண்டால் உழைப்பின் உன்னதம் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். 'ஆர்வ உணர்ச்சிகளை வளர்த்து கொள்; அறிவு வளர்ச்சி தானாக வளர்ந்தோங்கும்'. அறிவின் வளர்ச்சி புதுமைக்கும் புரட்சிக்கும் வித்திடும். புதுமைகளின் வளர்ச்சி தான் நாட்டை முன்னேறச் செய்யும். நாட்டிற்கு ஸ்திரத் தன்மையை கொடுக்கும். எனவே எதிலும் புதுமைகளை வரவேற்க வேண்டும். புதிய எழுச்சிகளுடன் புதுமையான எண்ணங்களுடன் சமூக சீர்திருத்தங்களை தொடர வேண்டும்.


சிந்தனை சிறந்தோங்குபழைய பண்பாடுகளுக்கு ஊறு ஏற்படாத வண்ணம் புதிய நாகரீகம் சிறந்தோங்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகளுக்கு வித்திட வேண்டும். புதியவிஞ்ஞான வளர்ச்சிகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டும். சாதித்து காட்டும் மனத்துணிவு எல்லோருக்கும் வர வேண்டும். 'எதையும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கை எல்லோரிடமும் ஏற்பட வேண்டும். புதிய எண்ணங்களுக்கு மதிப்புத்தர வேண்டும். நல்ல ஒழுக்க நெறிகளை விதைக்க வேண்டும். முன்னோர்களின் அறிவுரைகளை இளையோர் பின்பற்ற வேண்டும். இளைய தலைமுறையினரின் எழுச்சி, வேகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படும் வண்ணம் திசை திருப்ப வேண்டும். மேனாட்டு அறிவியல் வளர்ச்சிகள் நம் நாட்டிலும் புகுத்தப்பட வேண்டும்.மேனாட்டின் புகழுக்கு அஸ்திவாரமாக இருக்கும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் திறமைசாலிகளின் திறமை நம் நாட்டிற்கும் பயன்பட வழிவகை காண வேண்டும். நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றையெல்லாம் ஒதுக்காமல் புரட்டிப் பார்க்க வேண்டும். பெண்களின் திறமைகளை வெளி கொண்டு வர வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும். புதுமையான எண்ணங்கள் மக்களிடம் பரிணமிக்க வேண்டும். தெய்வ பக்தியையும், ஒழுக்க நெறிகளையும் மக்களிடம் பரவச் செய்ய வேண்டும். அப்படிசெய்தால் ஏமாற்று வேலைகள் குறையும். மோசடி குணங்கள் மறையும்.


தாய்மொழி வளர்ச்சி


தாய்மொழியை பேண உறுதி கொள்ள வேண்டும். மற்ற மொழி படைப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டும். நாட்டில் குளம், ஆறுகளை பாதுகாக்க வேண்டும். கண்மாய்களை காக்க வேண்டும். ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புக்களுக்கு நிரந்தரமான தீர்வு காண முயற்சிக்க வேண்டும். உழவுத் தொழிலை புதிய முறையில் அணுகி நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட வழிவகை காண வேண்டும். இளைய தலைமுறைகளை பாதித்து கொண்டிருக்கும் மதுவுக்கு மயங்கும் போக்கை மாற்றி புதிய வளர்ச்சி, சிந்தனைக்கு வழிகாட்டுதல் நலன் பயக்கும். இதற்காக மது விலக்கு கட்டாயம் தேவை. மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவது அவசியம்.ஜாதி, மத வன்முறை, பாலியல் கொடுமை, மோசடி, ஏமாற்றுதல், அதிகாரத்தில் இருப்போரின் சொத்து குவிப்பு, பொது இடங்கள் ஆக்கிரமிப்பு போன்ற அவலங்களை மறையச் செய்ய வேண்டும். புற்றீசல் போல் பெருகி வரும் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசுகள் செயல்பட வேண்டும். புண்ணிய பூமியான நம் நாட்டில் பாரம்பரியப் பண்பாடுகள், கலாசாரங்கள், வரலாற்று பெருமைகள், வளங்கள் பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும். இக்கனவுகள் இந்த ஆண்டிலாவது இனிது நிறைவேற வேண்டும். எல்லாம் நம் கையில்..!- ரா.ரெங்கசாமி எழுத்தாளர், வடுகபட்டி90925 75184

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X