இசை நாதயோகி தியாகராஜ சுவாமிகள்| Dinamalar

இசை நாதயோகி தியாகராஜ சுவாமிகள்

Added : ஜன 05, 2018
இசை நாதயோகி தியாகராஜ சுவாமிகள்

பண்ணிசையால் பரமனைபாடி பக்தியில் திளைத்தவர் பரம பாகவத சிகாமணி சத்குரு தியாகராஜ சுவாமிகள். இம்மகான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் திருவாரூரில் 1767 மே 4 ம் தேதி பிறந்து, 1847 ஜன.,6 அன்று புஷ்ய பகுளபஞ்சமி திதியில் திருவையாறில் முக்தி அடைந்தார்.
இம்மகானின் 171 வது ஆராதனை இசை வைபவம் திருவையாற்றில் ஜன.,6ல்நடக்கிறது. இதில் எண்ணற்ற இசைவாணர்கள், நாதஸ்வர, தவில் வித்வான்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துகின்றனர். இவர், இசைவழியில் நாதயோகி, ஆத்மஞானி, தீர்க்கதரிசி, வைராக்கியம் நிறைந்தவர். ராமாயணம், பாகவதம், கீதை போன்ற தெய்வீக நுால் கருத்துக்களை சுந்தரதெலுங்கில் கீர்த்தனம் படைத்து என்றைக்கும் நிலையான கீர்த்தி பெற்றவர்.

ராமனின் தரிசனம் : இவரது இஷ்ட தெய்வம் ராமசந்திரமூர்த்தி. எனவே இவர் தன்படைப்பில் ராமனை பாலகன், வீரன், தோழனாகவும், சீதா மணாளனாகவும் கீர்த்தன வழியில் வெளிப்படுத்தினார். எனவே தான் இவர் தனது ஏழாவது வயதில் 'தேசியதோடி' ராகத்தில் 'நமோ நமோ ராகவாயஅநிஷம்' என்ற கீர்த்தனை பாடினார். தன் பாலபருவம் முதல் 'ராமநாபஜெபமே' தன் வாழ்நாளுக்கு தந்த தெய்வீக மந்திரம் என்ற உறுதியோடு வணங்கி வந்தார். இத்துடன் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணய தீந்தரிடம் ராமதார மந்த்ர உபதேசம் பெற்றார். இவரது தீவிர ராமஜபம் நாள்தோறும் 1.25 லட்சம் முறை வரை நடந்தது. இத்தவத்தின் மகிமையால் பல தடவை நேராகவும், நித்திரையிலும் ராமபிரான் தரிசனம் கொடுத்தார். இம்மகான் தனது அனுபவ பலனாக 'ஏல நீ தயராது', 'கனு கொண்டினி' போன்ற கீர்த்தனங்கள் பாடினார். இவரின் தெய்வீக பணி உன்னதமானது. இவரது இசைவழி குருநாதர் சொண்டி வெங்கட்ரமணய்யர். தினமும் காலை உஞ்சவிருத்தி செய்தே எளிய வாழ்வை நடத்தினார். அகிம்சை, வைராக்கியம், எதிலும் பற்றற்ற நிலையில் இருந்தார். இருப்பினும்இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சிஷ்யர்களுடன் பல திருத்
தலங்களுக்கு சென்று தெய்வீக தரிசனம் செய்து வந்தார். ஒரு முறை திருவெற்றியூருக்கு சென்றார். அங்கு அருளாட்சி செய்த அம்பாள் திரிபுரசுந்தரி பற்றி ஐந்து கீர்த்தனங்கள் பாடினார். அதேபோல் கோவூர் சுந்தரேச முதலியார் வேண்டுகோளுக்கு இணங்கி கோவூர் சுந்தரேச பெருமானை பற்றி ஐந்து கீர்த்தனம் பாடி சுந்தரேசமுதலியாரை மகிழ்வித்தார்.

கள்வர்களுக்கும் கீர்த்தனை : தியாகராஜ சுவாமிக்கு அன்பு காணிக்கையாக எண்ணற்ற பொற்
காசுகளை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் சுந்தரேச முதலியாருக்கு வந்தது. ஆனால் தியாகராஜர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். எனினும் அக்காசுகளை ஒரு பையில் நிரப்பி அதனை தியாகராஜ சுவாமிகள் செல்லும் பல்லாக்கிலேயே மறைமுகமாக வைத்துவிட்டார். பிறகு சுவாமிகள் சிஷ்யர்களோடு புறப்பட்டார். போகும் வழியில் கள்வர்கள் பல்லாக்கை நிறுத்தி கற்களை வீசினார்கள். அச்சமயத்தில் இருவேல் ஏந்திய வீரர்கள் அக்கள்வர்களை ஓட ஓட விரட்டியடித்தனர். ஆனால், அக்கள்வர்கள், வீரர்களின் அழகான திருமுகத்தை பார்த்து மயங்கி சத்குரு
தியாகராஜரிடம் ஓடோடி வந்து வணங்கி நடந்த விபரத்தை கூறினார்கள். உடனே சுவாமிகள் தியானத்திலிருந்து விழித்து வில்லேந்தி வந்த வீரர்கள் என் உள்ளத்தில் நிலை கொண்டுள்ள இஷ்ட தெய்வம் ராமரும், லட்சுமணரும் எனக்கூறி, 'தர்பார்' ராகத்தில்', 'முந்துவெனுகளிரு' என்றகீர்த்தனையை பாடி ஆனந்தகண்ணீர் விட்டார்.ஒரு சமயம் சுவாமிகள் ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் தங்கி இருந்தார்.அன்றைய தினம் தங்கக்குதிரை வாகனத்தில் ரங்கநாதர் மேற்குவீதியில் திரும்பி பவனி வரும்போது திடீரென்று குதிரை வாகன பல்லக்கு நின்றுவிட்டது. பல்லாக்கு சுமந்தவர்கள் எவ்வளவோ முயன்றும், திருஷ்டி சுத்தியும் வாகனம் நகரவில்லை. அது சமயம் வயது முதிர்ந்த அர்ச்சகர் திடீரென்று ஆவேசமடைந்து தெற்கு வீதியில் எனது பக்தன் ஜனநெருக்கத்தால் இங்குவர முடியாமல் இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள் என்று கூறவே, அதன்படி தெற்குவீதியில் இருந்த தியாகராஜரை மற்ற அர்ச்சகர்கள் அழைத்து வந்து ரங்கநாதரை தரிசிக்க வைத்தனர். இதனால் தியாகராஜர் மனம் உருகி, அரங்கனை நினைத்துருகி ஐந்து கீர்த்தனம் பாடினார். அச்சமயத்தில் வினரா தனா (தேவகாந்தாரி), ஓரங்கசாயி (காம்போதி), கருணஜூமய்ய(ஸாரங்கா), ராஜூவெடலை (தோடி), சூதாமுராரே (ஆரபி)ஆகிய கீர்த்தனங்களை பாடிய பிறகு சுவாமி ரங்கநாதர் எழுந்தருளிய பல்லக்கு நகர்ந்தது.
இதே போல தியாகராஜர், திருப்பதி சென்றபோது 'கவ்பந்து' ராகத்தில் 'தெரதீயகராதா' என்ற கீர்த்தனையை மனம் உருகி பாடியபின் வெங்கடேசபெருமானின் திரை விலகியதால், சுவாமியின் பரிபூரண தரிசனம் பெற்றார். இதுபோன்ற அதிசய சம்பவங்கள் சுவாமிகள் வாழ்வில் பல நடந்துள்ளன.

கோவிந்தமாரருக்கு பாராட்டு : தியாகராஜ சுவாமிகளின் பெருமையை அறிந்து எண்ணற்ற சங்கீத மேதைகள் அவரிடம் ஆசி பெற்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பி வைத்தார். இதனால், இருவருக்கும் சந்திப்புகள் அதிகம் ஏற்பட்டது. அச்சமயம் ஸ்யாமா சாஸ்திரிகளின் 'அம்பாள் பரமானபல க்ருதிகளை' ஆனந்த பைரவி ராகத்தில் கேட்டபிறகு அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து இனி, ஆனந்த பைரவி ராகத்தில் பாடப்போவதில்லை என்று
ஸ்வாமிகள் உறுதிகொண்டார். மற்றொரு சமயத்தில் கேரளா ராமமங்கலத்தை சேர்ந்த கோவிந்தமாரர் என்ற இசைமேதை தியாகராஜரை சந்தித்தார். இவருக்கு ஷட்கால கோவிந்தர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அச்சமயம் கோவிந்தமாரர் ஏழு தந்தியுடைய தம்புராவின்
ஸ்ருதியோடு ஜயதேவர் அஷ்டபதியான 'சந்தந சர்ச்சித' என்று தொடங்கும் அஷ்டபதியை ஆறுகாலங்களில் பாடி தியாகராஜரை மகிழ்வித்தார். இதனை கேட்ட சுவாமிகள் மெய்மறந்து தன் சிஷ்யர் களுடன் ஸ்ரீராகத்தில் 'எந்தரோ மகானு பாவுலு' பாடி கோவிந்த மாரரைப் பாராட்டி கவுரவித்தார்.அஞ்சாதவர்தியாகராஜ சுவாமிகள் ராமசந்திர மூர்த்தியை தவிர மற்ற தெய்வங்கள் மீதும் பாடியுள்ளார். எனினும் முத்துசுவாமி தீக்ஷிதரை போல நவக்கிரகங்கள் மீதும் தனித்தனியாக கீர்த்தனங்கள் பாடவில்லை. இந்த விபரத்தை சுவாமிகளின் சீடர்கள் கேட்கவே ராமசந்திர மூர்த்தியின் பரிபூர்ண அனுக்ரஹம் எனக்கு இருக்கும் போது நவக்கிரகங்களால் எந்த தொந்தரவுமில்லை எனக்கூறி 'ரேவகுப்தி' ராகத்தில் 'க்ரஹபலமேவ' என்ற பாடலை பாடினார். இவரது இசை நாடகங்கள் ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பஜனை சம்பிரதாய வழியில் தவ்யநாம கீர்த்தனங்கள், உற்சவ சம்பிரதாய கீர்த்தனங்கள் போன்ற இன்றும் பஜனை வழி பாகவத தோழர்கள் பாடி வருவதை நாம் கேட்டு ரசிக்கிறோம். சுவாமிகள் எவ்வளவோ கீர்த்தனங்கள் பாடியிருந்தாலும் இன்றளவில் நமக்கு கிடைத்துள்ள கீர்த்தனங்கள் 800க்குள்ளேயே உள்ளன.

திருவையாறில் இசை அஞ்சலி : இன்றளவில் இம்மகானின் கீர்த்தனங்களை பாடி புகழிலும், செல்வத்திலும் நிறைந்துள்ள சங்கீத வித்யார்த்திகள் புஷ்யபகுள பஞ்சமி தினத்திலாவது திருவையாறு வந்து இம்மகானுக்கு இசை அஞ்சலி செலுத்த வேண்டும். தியாகராஜ பரம்பரையை சேர்ந்த தியாகராஜ சர்மா, ராஜூ ஆகிய இருவரும் திருவையாறு சமாதியில் நித்யபூஜை கைங்கர்யத்தை சிறப்பாக செய்து வருவது கண்டு என் போன்றோருக்கு ஆத்ம திருப்தி.

-ஏ. சங்கரசேது
இசை விமர்சகர்
காரைக்குடி. 94889 50999We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X