வேட்டி தினத்தின் பின்னனியில் ஏகாம்பரநாதன்?
நாளை (06-01-2018)வேட்டி தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த வேட்டி தினத்திற்கும் ஏகாம்பர நாதனுக்கும் தொடர்பு இருக்கிறா?இல்லையா?என்பதை கட்டுரையின் முடிவில் நீங்கள்தான் சொல்லவேண்டும்.
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் காந்திஜியின் போராட்டங்களில் ஒன்றுதான்
அந்நியநாட்டு துணிகளை எதிர்ப்பது என்பது, இந்த போராட்டம் வலுப்பெற்று எங்கு
பார்த்தாலும் அந்நிய நாட்டு துணிகளை எரிப்பது வரை தொடர்ந்தது.அந்திய
நாட்டு துணிகளை எதிர்ப்பது என்றாகிவிட்டது ஆனால் நமது தேவைக்கு
நம்நாட்டிலேயே துணி தயாரிக்க வேண்டுமே, கை ராட்டையால் நுாற்கப்படும்
நுாலின் தேவை போதுமானதாக இல்லை, ஆகவே ராட்டையை மேம்படுத்த வேண்டும், அந்த
மேம்படுத்தப்பட்ட ராட்டை கைராட்டையை விட பல மடங்கு கூடுதலாக நுால்
நுாற்கப்படவேண்டும், அந்த ராட்டை குடிசைவாசிகளும், விவசாயம் இல்லாத
காலத்தில் விவசாயிகளும் இயக்கக்கூடிய அளவில் எளிமையாக
இருக்கவேண்டும்,இப்படி ஒரு ராட்டையை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்ச
ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று காந்தி அறிவித்தார்.
அந்தக்
காலகட்டத்தில் ஒரு லட்சம் என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு
சமானமாகும்.நாடு முழுவதும் இதற்கான முயற்சியில் பலர் இறங்கினர்.ஆனால்
ஜெயித்தவர் ஒருவர்தான் அவர்தான் ஏகாம்பரநாதன்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் வட்டாரம் ஆலங்குளம் சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட பாப்பான்குளத்தில் 06/01/1920ல் பிறந்தவர்தான்
பி.ஏகாம்பரநாதன்.
அடிப்படையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் ஏதாவது ஒரு
பொருளை பிரித்து மாட்டுவதிலும் புதிதாக ஒரு பொருளை புதிய வடிவத்தில் செய்து
பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம்.
இவரது ஆர்வத்தைப் பார்த்த
உறவினரும் தொகுதி எம்எல்ஏ.,வுமான சொக்கலிங்கம், காந்தியின் அறிவிப்பைப்
பற்றி ஏகாம்பரநாதனிடம் சொல்லி நீ ஏன் காந்தியின் கனவை நனவாக்க
முயற்சிக்கூடாது என்று உற்சாகப்படுத்தினார்.
பரிசுக்காக
இல்லாவிட்டாலும் காந்திக்காக, நாட்டிற்காக அவர் விரும்பிய ராட்டையை
தயாரிப்பது என முடிவு செய்தார்.நிறைய செலவழித்தார் அதைவிட நிறைய
சிரமப்பட்டார் ஒரு கட்டத்தில் வீட்டில் எப்போதும் மரவேலை செய்பவர்கள்
விதவிதமாய் ராட்டையை செய்யவதும் பிரிப்பதுமாகவே இருந்தனர்.
ராட்டை
என்பது என்ன? அதன் செயல்பாடு எப்படி? என்பதை எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக
ஆராய்ந்து அறிந்து தெரிந்து கொண்டு அதன் பிறகு காந்தி விரும்பியபடி
ராட்டையை தயார் செய்துவிட்டார்.ஆனால் இதற்காக ஓரு வருடம் இரண்டு வருடமல்ல
ஏழு வருடகாலம் தனது உழைப்பை பணத்தை நேரத்தை சிந்தனையை செலவழித்தார்.
இவர்
தயாரித்த ராட்டை காந்தி சொன்னதை விட கூடுதலான பல வசதிகளுடனும் இருந்தது
இந்த ராட்டைக்கு ஏகாம்பரம் ராட்டை என பெயரும் வைத்தார் ஆனால் அந்தப் பெயர்
மருவி கடைசியில் ஆம்பர் ராட்டை என்றாகிவிட்டது.
இந்த
ஆம்பர் ராட்டையை இவர் தயார் செய்து முடித்த சூழ்நிலையில் காந்தி உயிருடன்
இல்லை.யாரிடம் போய் ராட்டையை காட்டுவது என்பது தெரியாமல் தவித்து வந்தார்.
இந்த
நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற காங்.மாநாட்டில் இந்த ராட்டையை தலைவர்கள்
பார்வைக்கு வைத்தார்.காமராஜர்,பக்தவச்சலம் ஆகியோர் பார்த்து பாராட்டினர்
சிறப்பு விருந்தினராக வருகைதந்த நேரு ராட்டையைப் பார்த்துவிட்டு இதைத்தான்
காந்தி சொன்னார் இதைத்தான் காந்தி தேடினார் என்று சொல்லிவிட்டு
ஏகாம்பரநாதனை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
அதன் பிறகு
இந்த ராட்டை தயாரிப்பை ஏகாம்பரநாதன் நாட்டிற்கு அர்ப்பணித்தார் வெகு சில
மாற்றங்களுடன் இன்றைக்கும் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஆம்பர்
ராட்டை என்ற பெயரில் இந்த ராட்டை லட்சக்கணக்கில் நுால் நுாற்றுக்கொண்
இருக்கிறது.இதில் நுாற்கப்படும் நுால்களில் தயராகும் கதராடைகள்தான் நாடு
முழுவதும் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஏகாம்பரநாதனின்
இந்த அர்பணிப்பு உணர்வை மதிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதினை
அறிவித்தது ஜனாதிபதி லால்பகதார் சாஸ்திரி கையால் பெற்றுக்கொண்டார், கூடவே
காதி நிறுவனத்தில் மதிப்புறு வேலையும் வழங்கியது.இதற்கெல்லாம் காமராஜர்தான்
பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.
எல்லாம் சரி
காந்தி அறிவித்த ஒரு லட்சம் என்னாச்சு? என்று கேட்டு ஒருவர் எழுதிய
கட்டுரையை படித்துவிட்டு வடமாநிலத்தில் காந்தி அறக்கட்டளை நடத்திவந்தவர்கள்
இரண்டு லட்சம் ரூபாய் பரிசினை ஏகாம்பரநாதனுக்கு வழங்கி
கவுரவித்தனர்.இந்தச் செய்தியை பார்த்துவிட்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்
அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்,ஆனால் இந்த நிதியை வாங்க
ஏகாம்பரநாதன் உயிருடன் இல்லை கடந்த 5/4/1997 ம் ஆண்டு இறந்து போனார்,அவர்
சார்பாக அவரது குடும்பத்தினர் வாங்கிக்கொண்டனர்.
ஏகாம்பர
நாதன் ஆம்பர் ராட்டையை கண்டுபிடித்த காலகட்டத்தில் வேட்டிதான் நம்
இந்தியர்களின் பிரதான ஆடையாக இருந்தது மேலாடை என்பதெல்லாம் ஆடம்பரமான ஒன்று
இதனால்தான் காந்திகூட தனது மேலாடையை தவிர்த்தார் ஆக வேட்டி
தயாரிப்பதற்காகவே உருவான ஆம்பர் ராட்டையைப் பற்றி கேள்விப்பட்ட அந்த
துறையின் தலைவராக இருந்த சகாயம் ஐஏஎஸ்தான் ஏகாம்பரநாதனின் பிறந்த நாளை
வேட்டி தினமாக அறிவித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த கருத்து ஆமாம் என்றால் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சந்தோஷம் தரும்தானே...
தகவல்தந்து உதவிய ராமநாதன் (9940023926,பூமாலை ரவி(7010412750.)ஆகியோருக்கு நன்றிகள் பல.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in