சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பணநாயகத்தை வெல்லுமா ஆன்மிக அரசியல்?

Updated : ஜன 07, 2018 | Added : ஜன 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 பணநாயகத்தை வெல்லுமா ஆன்மிக அரசியல்?

ஆர்.கே.நகரில், 2017 டிசம்பர்,21ல் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில்,சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே, இத்தொகுதியில், 2017 ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்கவிருந்த போது, பணப்பட்டுவாடா காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அப்போது, அ.தி.மு.க., சார்பில் களமிறங்கிய தினகரனே, இம்முறை, சுயேச்சையாக போட்டியிட்டு வென்று, எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி, ஆளும் கட்சியினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.தினகரனின் வெற்றி, அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆளும் கட்சியினருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில், தினகரன் தரப்பில்,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், ஆளும் கட்சியினரும்,ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வரை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.இந்த தருணத்தில் தான், நடிகர் ரஜினி, விரைவில் தனிக்கட்சி துவக்கப் போகும் அறிவிப்பை, புத்தாண்டிற்கு முதல் நாள் வெளியிட்டார். அவரின் அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், தேர்தல் என்றாலே, பண பலம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமையை, திருமங்கலம் இடைத்தேர்தல் முதல், சமீபத்திய, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரை நடைபெற்ற நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.பண வினியோகத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் தரப்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது ஒன்றும், தமிழகத்தில் பலன் தந்ததாக தெரியவில்லை.
'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல, வாக்காளர்கள் மத்தியில், பணம் வாங்கி, ஓட்டுப் போடும் மனநிலை மாறாத வரை, தற்போதைய நிலைமையில் மாற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியே!அதே நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'குக்கர்' சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரனும், அவரின் ஆதரவாளர்களும், அடுத்து பொதுத்தேர்தல் வந்தாலும், குறிப்பிட்ட அளவு தொகுதிகளை குறிவைத்து பணப்பட்டுவாடா செய்தால், ஆட்சியை பிடித்து விடலாம் என்ற, மனநிலைக்கு வந்து விட்டனர்.
அதற்கேற்ற வகையில், தற்போதே தயாராகி வருவதாகவும், அவர்களால்ஆதாயம் பெற முற்படும் பண முதலைகள் பல, அதற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், சமீபத்திய சில தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது, தொகுதிக்கு,50கோடி ரூபாய் வீதம், 150 தொகுதிகளில், 7,500கோடி ரூபாயை செலவிட்டால், ஆட்சி நம் பக்கமே, என்ற தெம்பும் அவர்களுக்கு வந்துள்ளது.
இந்தத் தருணத்தில் தான், 'ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மிக அரசியலை ஏற்படுத்த வேண்டும்' எனக்கூறி, தனிக்கட்சி துவக்கப் போவதாக அறிவித்துள்ளார், ரஜினி.அவரின் ஆன்மிக அரசியல் அறிவிப்புக்கு, ஒரு தரப்பில் வரவேற்பு இருந்தாலும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மதவாத கட்சி என, காங்கிரஸ் உட்பட, பல கட்சிகளால் விமர்சிக்கப்படும், பா.ஜ.,வின் அடிச்சுவடை பின்பற்றுபவர் ரஜினி. அதனால், அவரின் அரசியலும், அந்தக் கட்சியை பின்பற்றியே இருக்கும் என, விமர்சனம் செய்யப்படுகிறது.
உண்மையில், ஆன்மிகம் என்பது, விருப்பு, வெறுப்பு இல்லாமல், அனைவரையும் சமமாகவும், மனிதாபிமான முறையிலும், கருணையோடும் அணுகுவதாகும். அத்துடன், நேர்மை, நியாயம் என்பதும், அதில் உள்ளடக்கம். அதையே, ரஜினி கூறியுள்ளார் என, நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.ஆனால், கடவுள் வழிபாட்டையே எதிர்க்கும் திராவிட கட்சிகள் இதை ஏற்க மறுக்கின்றன.இது ஒரு புறமிருக்க, சமீபத்திய தேர்தல்களில், பண வினியோகத்தை மட்டுமே, பிரதான கொள்கையாக வைத்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ள கட்சிகள் மத்தியில், இந்த ஆன்மிக அரசியல் எடுபடுமா?பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கே ஓட்டுப்போடுவது என்ற மனநிலையில் உள்ள, ஏழை, எளிய மக்கள் இவரின் கொள்கையை ஏற்றுக் கொள்வரா என்பது, மில்லியன் டாலர் கேள்வி.
அத்துடன், அரசியல் கட்சி துவக்கி, அதை நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. பொதுக்கூட்டங்கள் நடத்தவும், பிரசாரம் செய்வது உட்பட, பல விஷயங்களுக்கு ஏராளமான பணத்தை செலவு செய்ய வேண்டியது, தற்போது கட்டாயமாகி உள்ளது.இந்தப் பணத்தை, ரஜினியின் ரசிகர்கள் செலவு செய்வரா அல்லது அவரே நிதி திரட்டி, இவற்றுக்கான பணத்தை செலவிடுவாரா என்பது, அவர் கட்சி துவக்கிய பிறகே தெளிவாகும்.
மேலும், தற்போது, அரசியல் கட்சியில் சேருபவர்கள், சுயநல நோக்குடனே செயல்படுகின்றனர். 'இப்போது, 'விதை'த்தால், பின், அறுவை செய்து விடலாம்' என்ற, எண்ணத்தில், கட்சிக்காகவும், தலைமைக்காகவும் செலவிடுகின்றனர்.அதற்கேற்றபடி, பதவிக்கு வந்ததும், எந்தெந்த வழிகளில் எல்லாம், கமிஷனாக பணத்தை பெற முடியுமோ, அதை பெற்று, தங்களின் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்கின்றனர்.
சில கட்சிகளில் சேர்ந்து, பணத்தை விதைத்து, ஆதாயம் பெற முடியாதவர்கள், மாற்றுக்கட்சிக்கு தாவி, அங்கு பணம் பண்ணும் வேலையில் ஈடுபடுகின்றனர்.அதனால், காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த காலத்தில் இருந்த, 'அரசியல்வாதி என்றால், பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள்' என்ற நிலைமை மாறி, தற்போது, அரசியல் என்பது, பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவே மாறி விட்டது.
அரசியல் வாயிலாக, பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம் என்றாலும், அவர்களில் சசிகலா போன்ற ஒரு சிலரே சிறை தண்டனை பெற்றுள்ளனர். மற்றவர்கள் எல்லாம், நீண்ட நெடிய விசாரணைக்கு பின், விடுதலை பெற்று, அதை விழாவாகத் தான் கொண்டாடி உள்ளனர்.உதாரணத்திற்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது, அளிக்கப்பட்ட வரவேற்பையும், சமீபத்தில், '௨ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராஜாவுக்கு சமீப நாட்களாக, அளிக்கப்பட்டு வரும் வரவேற்பையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
அது போல, தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாகவோ, தேர்தல் கமிஷன் நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக செலவு செய்ததாகவோ, பெரிய அளவில் யாரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.இதுவும், தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு, தெம்பு தருவதாகவும், பணத்தை வாரி இறைப்பதற்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களை உடனே தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தான், ஓட்டுக்கு பணம் தரும் வழக்கத்தை ஒழிக்கலாம். அதுவும், விரைவில் நடக்குமா என்பது சந்தேகமே.இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதுக்கட்சி துவக்க உள்ள ரஜினி, எப்படிப்பட்டவர்களை தேர்தலில் நிறுத்துவார், பண பலம் இல்லாத சாதாரண நபர்களை அதாவது, படித்தவர்களை நிறுத்தினால், மக்களுக்கு அவர்கள் ஓட்டுப்போடுவரா!
தமிழகத்தில், வசதி இல்லாதவர்கள் மட்டுமின்றி, வசதி படைத்தவர்களும், அரசு தரும் இலவசங்களுக்கு ஆசைப்படும் மனநிலையில் உள்ளனர். நாடு எக்கேடு கெட்டால் என்ன; சாலைகள் சரியாக இருந்தால் என்ன; இல்லை என்றால் என்ன, கவலையின்றி, 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு அடிக்கலாமே என, எண்ணுவோர் ஏராளம்!அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள், ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பரா என்பது, புரியாத புதிரே. 'ஏன், எம்.ஜி.ஆர்., அரசியல் கட்சி துவக்கி வெற்றி பெறவில்லையா' என, சிலர் கேள்வி கேட்கலாம். அப்போதிருந்த நிலைமை வேறு.
'திருமங்கலம் பார்முலா' போன்ற, பணப் பட்டுவாடா பிரச்னை அப்போது இல்லை. மேலும், தன் ரசிகர்கள் மனதில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக, பெண்கள் மத்தியிலும், அதிக செல்வாக்கு பெற்றிருந்தவர், எம்.ஜி.ஆர்., மேலும், அவரின் ரசிகர்களாக இருந்தவர்கள் எல்லாம், அப்போது பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், தேர்தல் பணியாற்றியவர்கள்அல்ல; அவரின் மேல் உள்ள பிரியத்தில் பணியாற்றியவர்கள்.
ஆனால், இன்றைய நிலைமை வேறு. எந்தக் கட்சியாக இருந்தாலும், தலைவர்களின் பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்க வேண்டும் எனில், கணிசமாக பணம் கொடுத்தால் தான் முடியும் என்ற நிலைமை உள்ளது. அத்துடன், உணவு, உட்பட, பல விதமான கவனிப்புகளும் இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட, 'கவனிப்பு'களை வழங்க, தற்போதைய ஆட்சியாளர்களும், ஆட்சி அதிகாரத்தில் ஏற்கனவே இருந்தவர்களும், தயாராக உள்ள நிலையில், அவர்களின் தொடர்ச்சியாக, இப்போது, சுயேச்சை வேட்பாளர் தினகரனும் உருவெடுத்துள்ளார்.
இவர்களின் பணநாயகம் முன், ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறுமா; எம்.ஜி.ஆருக்கு தந்தது போன்ற ஆதரவை, கடந்த சில தேர்தல்களில், ஓட்டுக்கு பணம் வாங்கி பழக்கப்பட்ட மக்கள், இவருக்கு தருவரா என்பது, ரஜினியின் பாணியில் சொன்னால், ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பிச்சைமணிஇ - மெயில்: mannermalaimani@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
07-ஜன-201812:37:40 IST Report Abuse
A.Gomathinayagam அரசியல் என்பது பொது சேவை என்பது அழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அரசியலில் யார் முதல் போட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதோடு, ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன இலவசங்களை தருவேன் என்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். பாமரன் முதல் படித்தவன்வரை பணத்திற்கு அடிமையாகி இருக்கும் சமுதாயத்தில் ஆன்மிக அரசியல் ஒரு கேலி கூத்தே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X