மும்பை: போக்குவரத்து நெரிசலான நேரங்களில், நெரிசலான சாலைகளை முக்கிய பிரமுகர்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நகர்ப்புற சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே வருகிறது. இதனால், தினசரி அலுவலகம் உள்ளிட்டவற்றுக்குச் செல்பவர்கள், தங்கள் வாகனங்களில் நத்தை போல் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. பீக் அவர் எனப்படும் காலை, மாலை அலுவலக நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழி கிடைக்காமல், நகர போக்குவரத்தில் சிக்கி அலறிக் கொண்டிருப்பது சென்னை வாசிகள் தினசரி காணக் கூடிய காட்சிகள். அதிலும், முக்கிய வி.ஐ.பி., க்கள் யாரேனும் வருவதாக இருந்தால், நகரமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தபித்துவிடும். போக்குவரத்து நெரிசல் நேரங்களில், முக்கிய சாலைகளில், வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் போது, அவர்களின் பாதுகாப்புக்காக, போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். இது தொடர்பான வழக்கு ஒன்று அண்மையில், மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாரியாசீல் நாளவாடே, "ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது, அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, சாலைப் போக்குவரத்தில், மாற்றம் செய்கின்றனர். போக்குவரத்து, சிறப்பு பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுகிறது. சாலைகளில், எல்லா நேரங்களிலுமே போக்குவரத்து நெரிசல் இருக்கத் தான் செய்கிறது. ஜனாதிபதி உள்ளிட்டோர், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வரும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. வி.ஐ.பி.,க்கள் பயணத்திற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதில்லை' என வாதிட்டார்.
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதை குறை கூற முடியாது. எனினும், இதனால், ஏன் சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்பட வேண்டும். முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு, ஏன் நெரிசலான சாலைகளையும், பீக் - அவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்? போக்குவரத்திற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை' என தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறையினர் அபிடவிட் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE