கண்ணாமூச்சி ஆடவில்லை கபாலி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கண்ணாமூச்சி ஆடவில்லை கபாலி!

Added : ஜன 07, 2018 | கருத்துகள் (1)
ரஜினி, கபாலி,

கடந்த வியாழன் அன்று வெளியாகிய நாளிதழில், நண்பர் வாஞ்சிநாதன் எழுதிய, 'கண்ணாமூச்சி ஆடுகிறாயா கபாலி' என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார், நண்பர் வாஞ்சிநாதன்.

ரஜினியை பல ஆண்டுகளாக சினிமாவிலும், நிஜ வாழ்விலும் தள்ளி நின்று கவனித்து, ரசிக்கும் ஒரு ரசிகனாகவும், தமிழகத்தின் மீது பற்று கொண்டு, நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கும் சாமானியனாகவும், சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுளேன். இது நாள் வரை ரஜினி அரசியலுக்கு வரவில்லை; அவர் இதுவரை எதுவுமே தமிழகத்திற்கு செய்தது இல்லை என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசியல் பிரவேசத்தை உறுதி செய்து, அரசியல் களம் காண திட்டம் வகுத்து இருப்பதை அனைவரும் அறிவர்.'நடிகர்கள் விஷால், கமலின் அரசியல் வருகையால், ரஜினியை யாரும் கோழை என, கூறி விடக் கூடாது என்பதற்காக, அவர் உடனடியாக எடுத்த முடிவு இது' என, நண்பர் குறிப்பிட்டுள்ளார். தான், 42 ஆண்டுகளாக கட்டி காத்து வைத்திருக்கும் செல்வாக்கையும், தன் மேல் மக்கள் கொண்டுள்ள அபிமானத்தையும் அடகு வைத்து தான், ரஜினி இந்த அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார் என்பதை இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில், விஷாலுக்கோ, கமலுக்கோ அரசியலில் தோல்வி அடைந்து, பெயர் கெட்டால் ஏற்படும் நஷ்டத்தை விட, ரஜினி கட்டி வைத்து இருக்கும், 'இமேஜ்' கோட்டை மிகப்பெரியது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதனால், கோழை என்ற பழி வந்துவிட கூடாது என்பதற்காக, ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார் என, சொல்வதை ஏற்கும்படி இல்லை. டிசம்பர், 31ம் தேதி, ரஜினி, இது வரை இல்லாத அளவிற்கு, தெளிந்த நீரோடையாக பேசியது, அவரின் பேச்சை பார்த்தவர்களுக்குபுரியும்.பலமான கட்சியாக அடித்தளம் போடுவதில் இருந்து, திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டி போடுவது வரை, ஓர் அரசியல் கட்சியை பலமாக கட்டமைப்பது என்பது, இயல்பான காரியம் இல்லை.

எனவே, லோக்சபா தேர்தலில் போட்டி இடாமல், கட்சியை வலுப்படுத்த அவர் நேரம் எடுத்து கொண்டது சரி என்றே படுகிறது. ரஜினி, அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு விளம்பரம் தேடவே, இத்தகைய, 'ஸ்டன்ட்' அடிப்பதாக நண்பர் கூறுவதும் தவறு.இவ்வாறு விளம்பரம் தேடி, படங்கள் வெளியான பின், அரசியலில் இறங்க போவதில்லை என, ரஜினி அறிவித்தால், எப்படி பட்ட அதிருப்திகளை அவர்சந்திக்க நேரும் என்பதை, அவர் சிந்தித்து இருப்பார்.
மேலும், இந்த வயதிலும் அவர் படங்களுக்கு மவுசு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவிர, இது போன்ற, அரசியல் பூச்சாண்டி மூலம் விளம்பரம் தேடி கொள்ள அவசியம் இல்லை.

'மக்களாகிய உங்களுக்கு சேவை செய்யத் தான் வருகிறேன் என, எந்த இடத்திலும் ரஜினி அழுத்தமாக சொல்லவில்லை' என, நண்பர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார். அதுவும் தவறு. 'என்னை இப்படி வாழ வெச்ச தமிழ் மக்கள் நீங்களும், நல்லா வாழணும்னு எனக்கு எண்ணம் இருக்காதா... ஒரு நல்ல மாற்றத்தை உங்களுக்கு நான் அளிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்' என, ரஜினி பேசியதை அனைவரும் அறிந்திருப்பர் என நம்புகிறேன். இது வரை கருணாநிதி, ஜெயலலிதா போன்ற இரு பெரும் தலைவர்கள், தமிழக அரசியலில் காலுான்றி இருந்த நிலையில், அவர்களை எதிர்த்து வெற்றி அடைவது என்பது, இயலாத காரியம் என்பது தான் யதார்த்தம்.அதை புரிந்து, ரஜினி ஒதுங்கி இருந்தாலும், அவ்வப்போது இருவரின் பதவி காலத்தின் போது நடந்த அராஜகத்தை எதிர்த்து, குரல் கொடுத்த படி தான் இருந்தார்.

ஆனால், ஒரு கலைஞனாக அவர் குரல் கொடுப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்து, குரல் கொடுப்பதையும் பின் குறைத்து கொண்டார். அந்த இருவரும் இல்லாத நிலையில், தமிழகம், ஆள தகுதி இல்லாதவர்கள் கையில் சிக்கி, திண்டாடுவதை பார்த்து தான், இந்த முடிவுக்குவந்துள்ளார். அவர் வராமல் இருந்தால், அவர் மனசாட்சியே அவரை மன்னிக்காது என, உண்மையை ஒத்து, வந்து இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.'அரசியல் பேசக்கூடாது; அரசியல்வாதிகளை எதிர்க்கக் கூடாது;போராட்டம் பண்ணக்கூடாது' என, ரஜினி கூறியது, மிக யதார்த்தமான ஒன்று!
இது நாள் வரை அரசியல் கட்சிகள் நடத்திய பல போராட்டங்களால் என்ன மாற்றம் வந்து விட்டது?இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, நேரமும், பணமும் விரயம் ஆவதை தடுக்கவே, இது போன்று ரஜினி பேசி இருப்பதாக எடுத்துக் கொள்ள தோன்றுகிறது.

ரஜினியிடம் இருக்கும் கறுப்பு பணம் பற்றி கேள்வி எழுப்பும் நாம், கோடிகளில் குளிக்கும் பிற அரசியல்வாதிகளை கேட்காமல் விட்டு விட்டோமே! நேர்மையான யாரேனும் இருந்தால்வரட்டும்; வர வேண்டாம் என, யாரும் சொல்லவில்லையே... ஓரளவுக்கு நம்பிக்கையானவர்களை, தொடங்கும் இடத்திலேயே, இவர்கள் வேண்டாம் என, நிராகரிக்கும் எதிர்மறை எண்ணம் ஏன்?ஆகவே, ரஜினி அரசியலில் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவரை விமர்சித்து, அவர் வரக்கூடாது என்றெல்லாம் பேசுவது, நல்லதில்லை என்றே கருத தோன்றுகிறது.வரும் நாட்களில், ரஜினியின் கொள்கைகள், கோட்பாடுகள், எண்ணங்கள், பேச்சுக்கள், முடிவுகள் போன்றவற்றை பார்த்தே, அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாமா, வேண்டாமா என, முடிவு எடுப்பது சிறந்தது.

மேலும், ரஜினியோ, கமலோ, அன்புமணியோ, சீமானோ, தமிழக அரசியலில் மாற்று அரசியலுக்கான போராட்டத்தில் யார் களம் இறங்கினாலும், மக்களாகிய நாம் சிந்தித்து செயல்பட்டு, அவர்களின் கொள்கைகளை, செயல்பாடுகளை ஆராய்ந்து, நல்ல வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதே உகந்தது! மேலும், யார் வந்தாலும், அவர் தனக்கு மட்டும் நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது. மாற்றம் என்பது மக்கள் இடத்தில் இருந்து துவங்கினால் மட்டுமே, தமிழகத்திற்கான விடிவுகாலம் புத்துயிர் கொண்டு எழும் என்றே நம்புகிறேன்.
- கவுதம் பேகன்
இ - மெயில்: gtham0@gmail.com

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X