அன்பிலோங்கிய வையம் செழிக்கும்!

Added : ஜன 09, 2018
Advertisement

அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக் கின்றன. உறவுகளிடையே
நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்தும் போது, குழந்தைகள் முழு ஈடுபாட்டுடன் கற்பதுடன், ஆசிரியர்களுடன் இணக்கமாகச் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். “அன்பான மனதில் இருந்துதான் அன்பான வார்த்தைகள் வருகின்றன. மனிதாபிமான மனம் என்னும் விதையிலிருந்துதான் அன்பான மனம் வருகிறது. அன்பான வார்த்தைகள் என்பது மற்றவர்களுடைய தகுதிகளைப் பாராட்டுவது மட்டுமல்ல, அதற்கு நாட்டின் தலைவிதியை மாற்றும் சக்தி உள்ளது” என்கின்றார் ஜென் ஆசிரியர் டோஜென். அன்பான வார்த்தைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சிறந்த பரிசாகும். எனவே, அன்பான மனம் கொண்டு அன்போடு வாழ்வோம்! இன்புற்று
இருப்போம். இதனையே வள்ளுவர்,

'அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு' (73)
என்கிறார். அன்புடன் வாழும் வாழ்வின் பயனே, உலகில் இன்புற்று வாழ்வோர் அடையும் சிறப்பாகும் என்பது இதன் பொருளாகும்.

மனித வாழ்வின் மகத்துவம் : “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கின்றார் ஔவையார். அப்படிப்பட்ட அரிதான மனித வாழ்வு சிறப்பானதாக இருக்க மனிதன் அன்போடு வாழ வேண்டும். அன்பு மனம் உறவு களை வளர்க்கும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற மன உறுதி, பிறரை மகிழ்விக்கும் இனிமையான பேச்சு, பிறருக்கு நன்மை புரிய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இவையே மனிதர்களுக்கு நல்ல உறவை வளர்க்கும் பண்புகள் ஆகும்.
“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவை நான்கும் இழுக்கா இயன்றது அறம்”
என்கிறார் வள்ளுவர். பிறருக்கு உதவ மனமிருந்தால் மட்டும் போதாது, அதை கொடுக்க நல்ல மனம் வேண்டும். நல்ல மனம் அன்பால் மட்டுமே சாத்தியம். அன்பு என்ற பண்பே மனிதன் மனிதனாக வாழ வழிவகுக்கும். சமயங்கள் அனைத்தும் அன்பையே வலியுறுத்துகின்றன. அன்பே மனிதநேயத்தின் முக்கிய இயங்குதளமாக இருக்கின்றது.அன்புதான் மனிதன் என்கின்றார்

ரூமி. வள்ளலாரும் அன்பையே : தலையாய பண்பாக எடுத்துக்காட்டுகிறார். “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே” என்கிறது திருவருட்பா-.
“அன்பே கடவுள்” என்று திருமந்திரம் கூறுகிறது.அன்பிற்கென வள்ளுவர் தனி
அதிகாரத்தையே வகுத்து அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது” என்கின்றார் வள்ளுவர். இல்வாழ்க்கையின்
அடிநாதமாக அமைகின்ற அன்பு. வீட்டிலிருந்து, தெருவில் வழிந்து, உலகந்தழுவிய மனித அன்பாய் வளர்ந்து, பூத்து, காய்த்துக் கனிவதே மனித வாழ்வின் தலையாய மகத்துவமாகின்றது.
தருமர் கூறும் தத்துவம் அன்பு அற்ற மனிதன் குறுகிய எண்ணம் கொண்டு வாழ்கின்றான். எதிர்பார்பிற்கேற்ப வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். அதனால் அன்பற்ற மனிதன் வாழ்க்கையில் அதிகம் வேதனையையும் துன்பங்களையும்
அனுபவிக்கின்றான். அப்படிப்பட்ட மனிதர்கள் தான் என்றும் நிலையாக வாழ்பவர்கள் என்று எண்ணிக் கொண்டு பொருள் குவித்தல், ஆணவம், அதிகாரம் செலுத்துதல், சுயநல எண்ணங்கள்
முதலியவற்றில் மூழ்கியிருக்கிறார்கள்.

மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு. : தர்மர் தன் சகோதரர்களோடு காட்டில் அலையும் போது தண்ணீர் எடுக்க ஒருவர் பின் ஒருவராகச் சென்ற அவரது சகோதரர்கள் ஒரு குளக்கரையில் இறந்து கிடக்கின்றனர். அவர்களின் சாவுக்கு காரணமான ஆவி , அடுத்துச் சென்ற தர்மனிடம், உன் சகோதரர்கள் என் பேச்சைக் கேட்காமல் குளத்தில் கால் வைத்ததால்தான் இறந்து கிடக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு நேரிட்டது .உனக்கும் நேரிடாமல் இருக்க வேண்டுமென்றால் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். மேலும் நீ சரியாகப் பதில் சொல்லு
கின்ற பட்சத்தில் இறந்து கிடக்கின்ற நால்வரில் யாராவது ஒருவரை நீ உயிருடன் பெற்றுக் கொள்ள லாம் என்று சொல்லிவிட்டு, பல கேள்விகளை அவரிடம் கேட்டது.

அதில் ஒரு கேள்வி, 'எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் இன்னும் புரிந்துகொள்ளப்படாத காரியம் என்ன?' . அதற்கு தர்மர், 'எல்லோரும் சாவது உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த காரியம். இருப்பினும் மனிதன் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தன்னை என்றும் வாழ்பவனாக நினைத்துக் கொண்டு அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் வாழ்வதன் ரகசியம்தான் யாருக்கும் புரியவில்லை' என்று பதில் கொடுத்தார். அன்பெனும் பண்பு கொண்டு மனிதனிடம் உள்ள அகங்
காரத்தையும், ஆணவத்தையும் அழிப்போம். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்வோம்.
அன்பு- வறுமையிலும் பகிர்வு“அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் அரிய பொருள் ஒன்றைக்
காட்சிக்கு வையுங்கள்! சிறந்த பொருளுக்குச் சிறந்த பரிசு உண்டு!” என்று ஒரு நாட்டின்
அரசன் அறிவித்தான்.

காட்சிக்கு பல பொருட்கள் : வந்தன. ஒருவன் அழகான மயிலை வைத்தான். அப்படி ஒரு அழகு! என வியந்தான். ஆனால், பார்வையற்றவருக்கு.. என கடந்தான் அரசன். குயிலை ஒருவன் பிடித்து கூவ விட்டான். கூவிய போது காதுக்கு இனிமையாக இருந்தது. ஆனால், செவித்திறன் அற்றவருக்கு என அதனை கடந்தார். மற்றொருவன் இனிப்பு கொண்டுவந்திருந்தான். அதனை சுவைத்தார். இனிப்பு. ஆனால் வியாதிக்காரர்களுக்கு எனக் கடந்தார்.
இப்படி ஒவ்வொன்றாய் கழித்துக் கட்டிய அரசர்கடைசியில் ஒரு சிலைக்கு முன் நின்றார். பலமணி நேரம் நின்றார். மெய்மறந்து நின்றார். அது ஒரு களிமண் சிலை! வறுமை வாட்டிய ஒரு தாய் முகம், மலர்ந்தபடி வறியவன் ஒருவனுக்கு அன்னமிடும் காட்சி அது! வந்தவர் அனைவரையும் சரி சமமாய் மகிழ்ச்சிப்படுத்திய அந்தக் களிமண் சிலைக்கே பரிசு தரப்பட்டது. ஆம்! அனை
வரையும் ஆனந்தப்படுத்தும்- அன்பு! உச்சக்கட்ட அன்பு - வறுமையிலும் பகிர்வு.

ஜீவகாருண்ய ஒழுக்கம் : 'எவ்வுயிர்க்காயினும் இரங்குதல் வேண்டும்' என்கிறது மணி
மேகலை. ஜீவகாருண்ய ஒழுக்கமே மரணமில்லா பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் என்று வள்ளலார் கூறுகிறார். பசிப்பிணியை போக்க வேண்டும் என்று கூறியதோடு நின்றுவிடாமல் பசிப்பிணியைப் போக்குவதற்கு ஒரு யுத்தியாக அன்னசத்திரத்தை நிறுவி எல்லோருக்கும் அன்னதானம் வழங்கினார். அதனால் தான்அவரால் 'வாடிய பயிரைக் கண்டபொ தெல்லாம் வாடினேன்' என எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொண்டாட முடிகிறது.வையம் தழைக்க அன்பு கொள்அன்பினால் இருள் வெளிச்சம் ஆகும்அன்பினால் கசப்பு இனிமை ஆகும்
அன்பினால் வேதனை சுகமாகும்அன்பினால் மரித்தது உயிர்பெறும்
அன்பு பெருங்கடலையும் குவளைக் குள் அடக்கும் அன்பு பெரும் மலையையும் மணல் ஆக்கும்
அன்பு ஆகாயத்திலும் நுாறு துளைகளை இடும் அன்பு
நிலத்தையும் ஆட்டிப் படைக்கும், என்கிறார் ரூமி
அன்பு இல்லை என்றால்அன்பு இல்லையென்றால்
உலகில் வேறொன்றும் இல்லை. அதனால் தான் அன்பையும் கடவுளையும் ஒன்றாக கண்டனர் நம் முன்னோர்கள். அன்பே கடவுள், கடவுளே அன்பு என்று கூறினர். அன்பின் நெறியில் உயிர்கள் தழைத்து ஓங்கி வளர்ந்தன. இதனால் தான் வள்ளுவர் அன்பு இல்லாத உடம்பை உயிர் இல்லாத உடம்பாகக் கருதுகின்றார்.ஒருவர் துன்பப்படும்போது அவர்களைப் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் பெருகும் என்று அன்பின் மேன்மையினை உணர்வோம். அன்பு என்பது இன்பம், மொழி, தேசம், கடந்த உயர்ந்த உணர்வு. அன்பு என்ற நேயம் மனிதர்களிடம் மட்டும் அல்ல பிற உயிர்களிடத்தும் கொள்ளப்படும் ஒரு பற்றாகும். ஆகவே அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொள்வோம். அன்பிலோங்கிய வையம் தழைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
-க.சரவணன், தலைமையாசிரியர்டாக்டர் டி. திருஞானம்
துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X