மீண்டும் புழுதியா; புயலா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மீண்டும் புழுதியா; புயலா?

Added : ஜன 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement

'ஒரு தந்தையாக ஸ்டாலின் முன்னேற்றத்துக்கு நான் எவ்வித கடமையும் ஆற்றவில்லை. ஆனால், மகன் என்ற முறையில், தன் கடமைகளை சரிவரச் செய்து, என்னை சந்தோஷப்பட வைத்திருக்கிறான். இப்படி ஒரு மகன் கிடைத்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!'
தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன், தான் ஆரோக்கியமாக இருந்த ஒரு கணத்தில், கருணாநிதி தெரிவித்த உணர்வுகள் இவை. இன்று, 94 வயது கருணாநிதி பேசும் நிலையில் இருந்திருந்தால், தன்னைச் சுற்றி நடப்பவற்றை முழுமையாக உணரும் நிலையில் இருந்திருந்தால், தி.மு.க.,வின் ஒவ்வொரு தொண்டன் மனதிலும் கனன்று கொண்டிருக்கும் கேள்வியை, ஒரு தந்தையாக, ஸ்டாலின் முன் வைத்திருப்பார். அக்கேள்வி...
'ஜெ., இல்லை என்றான பின்புமா மகனே ஆட்சி நம்மிடம் இல்லை?' காரணங்கள் பல
ஆறு மாதங்களுக்கு முன் வரை, வெவ்வேறு தருணங்களில் பலரால் எழுப்பப்பட்ட
இக்கேள்விக்கு, 'ஆட்சியை கவிழ்த்து குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல எங்கள் நோக்கம். கருணாநிதியும் அதை விரும்ப மாட்டார். மக்களின் துணையோடு, ஜனநாயக வழியில் ஆட்சியைப் கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்' என, ஸ்டாலினும் பலமுறை பதில் சொல்லி விட்டார். ஆனாலும், தி.மு.க., தொண்டன் எதிர்பார்க்கிறான். அந்த எதிர்பார்ப்புக்கு அழுத்தமான பல காரணங்கள் உண்டு. பணப் பட்டுவாடா புகார் காரணமாக, 2017 ஏப்., மாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட தருணத்தில், தண்டையார்பேட்டையில், தி.மு.க.,
நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின், 'ஆளுங்கட்சி யினர், 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கி உள்ளதால், தேர்தல் ரத்தாகி இருக்கிறது. தினகரன், 2,000 கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலும், தி.மு.க.,வே நிச்சயம் வெற்றி
பெற்றிருக்கும். தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரும்' என, ஆணித்தரமாகச் சொன்னார். ஆனால், 2017 டிசம்பரில் வந்ததோ இடைத்தேர்தல் தான்! சுயேச்சை வேட்பாளரான தினகரன் வெற்றியில், தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது. அந்த வேதனையை விட, 'தினகரன் வெற்றி பெற ஸ்டாலினே காரணம்' எனும்,
அ.தி.மு.க.,வின் குற்றச்சாட்டில் வெந்து போனான் தொண்டன்.வெந்து கிடந்த அவன் மனதில்,
'கருணாநிதி செயலாற்றும் நிலையில்இருந்திருந்தால், ஆர்.கே.நகர் தேர்தலில் வேறு மாதிரி வியூகம் அமைத்திருப்பார்' என, அமிலம் ஊற்றி விட்டார் தினகரன்.கோபாலபுரம் வீட்டு வாசலில், ஸ்டாலின் முன்னிலையில், 'தலைவா...' என, பீறிடும் கோஷத்தை தனக்கானதாக்கி திரும்பி விட்டார் ரஜினி.'கட்சியிலேயே இருக்கக் கூடாது' என, ஒதுக்கி வைத்த ஆளுமைகளோடு (!) மோதி, சட்டசபை வரை வந்து விட்டார் தினகரன். கழகங்களின் கழுத்து நெரிக்க, கமல்
ஒருபக்கம் தீவிரமாய் அரசியல் கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில், ஸ்டாலினும் அதிதீவிரமாய் அரசியல் செய்தாக வேண்டும். அதற்கான தருணம், சட்டசபை கூடியிருக்கும் இத்தருணத்தில் கனிந்து வந்திருக்கிறது. 'இம்முறையாவது...' என்று, அழுத்தமாய் சொல்லி தவித்து நிற்கிறான் தொண்டன்.

அதென்ன இம்முறையாவது...? : இக்கேள்விக்கான பதிலுக்கு, கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 'மஞ்சள் துண்டு காலம் போல், மாதா மாதம் தற்புகழ்ச்சி கலை விழா நடத்தவில்லை எங்கள் மாதரசி' என, சட்டசபையில், தி.மு.க.,வை எள்ளி நகையாடியவர் பன்னீர்.
ஜெ., மறைவுக்கு பின், 2017 பிப்ரவரியில், முதல்வராக இருந்த அவரிடம், 'ஐந்து
ஆண்டுகளுக்கு நீங்களே முதல்வராக இருக்க வேண்டும். தேவைப்பட்டால், நாங்கள்
ஆதரவு தருகிறோம்' என்றார், துரைமுருகன். சட்டசபையில் நடந்த இந்நிகழ்வு, பன்னீரின் முதல்வர் பதவிக்கு வேட்டு வைத்தது.ஆனால், அடுத்தடுத்த நாட்களின் நிகழ்வு
களில், பதவி தொலைத்து, ஓ.பி.எஸ்., நிற்கும் போது, தி.மு.க., துணை பொதுச் செயலர்களில் ஒருவரான, சுப்புலட்சுமி ஜெகதீசன், 'முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க, தி.மு.க., ஆதரவளிக்கும்' என்றார்.ஸ்டாலினோ, அதை, தி.மு.க.,வின் கருத்தாக ஏற்க மறுத்தார். 'ஆஹா, எதிர் முகாமை குழப்பத்திற்கு உள்ளாக்கி, அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்த துவங்கி
விட்டார் ஸ்டாலின்' எனும் கருத்து பரவலாக எழ, 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?' என, துள்ளி குதித்தனர் உடன்பிறப்புகள்.கடந்த, 2017 பிப்., 18 - பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாள். சட்டை பாக்கெட் கிழிந்து தொங்க, சட்டசபையில் இருந்து வெளியேறினார், ஸ்டாலின். பார்த்தவர்களுக்கு, 1989 மார்ச், 25ன் தமிழக சட்டசபை நிகழ்வு நிழலாடியது. தலைவிரி கோலமாக, கலைந்த சேலையுடன் சட்டசபையில் இருந்து அன்று வெளியேறிய, ஜெ.,
சட்டசபையை துரியோதனன் சபை என்றார்.தன்னை காப்பாற்ற, எந்த கிருஷ்ணனும்
வரவில்லை என, கண்ணீர் சிந்தினார். அந்த கண்ணீரின் ஈரத்தில் அனுதாபத்தை அள்ளினார். 1991 தேர்தல் பிரசாரத்தில், இச்சம்பவத்தை பிரதானமாக்கி, ஓட்டுகளை அள்ளி அரியணை ஏறினார். ஆனால், சட்டைப் பை இழப்பைத் தவிர, பிப்., 18 சம்பவம், எந்தவொரு பலனையும்
ஸ்டாலினுக்கு தரவில்லை.அன்று, சபைக்கு வெளியே ஸ்டாலின் நடத்தியது கலப்படமில்லாத, 'அக்மார்க்' அரசியல். ஆனால், உடன்பிறப்பு மகிழும்படியான புயல் கிளம்பாமல், புழுதி பறந்தது பெரும் சோகம்!இதனால், 'ஆட்சியை மாற்ற வேண்டிய வேலையை, தி.மு.க., செய்ய வேண்டியதில்லை... மக்களே விரைவில் மேற்கொள்வர். கழகத்தினராகிய நாம் மேற்கொள்ள வேண்டியது, மக்களின் உரிமை குரலுக்குத் துணை நிற்பதும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டக் களம் காண்பதும் தான்' என்றார்.'அப்படியென்றால், 2021 வரை
காத்திருக்கத் தான் வேண்டுமா; இது தான் முடிவென்றால், ஓ.பி.எஸ்., ஆதரவு பேச்சு, சட்டை கிழிப்பு, கிழிந்த சட்டையுடன் கவர்னர் சந்திப்பு எல்லாம் எதற்காக?' என, குழம்பிப் போனான் தொண்டன்!இந்த சூழலில் தான், 'அ.தி.மு.க., ஆட்சியை, தி.மு.க., அகற்றும்' என, 2017 ஜூன், 12ல், சூளுரைத்தார் ஸ்டாலின். 'கூவத்துாரில் விலை பேசப்பட்டோம்' என, மதுரை தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., சரவணன் சொன்னதும், 'ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்திருக்கும் மக்கள் விரோத, அ.தி.மு.க., அரசு இனியும் நீடிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
இது குறித்து நீதிமன்றத்திலும், சட்டசபையிலும் மக்களின் நம்பிக்கை பெற்ற எதிர்க்கட்சியான, தி.மு.க., தன் பங்களிப்பைச் செய்யும்.'கவர்னர் முதல் ஜனாதிபதி வரை, அனைத்து உயர் பொறுப்புகளில் உள்ளோரிடமும், இந்த அவலம் குறித்து முறையிடப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் மன்றத்தில் இதை அம்பலப்படுத்தி, மக்களின் பேராதரவுடன், இந்த ஆட்சியை
அகற்றும் ஜனநாயக போர்க்களத்தை, தி.மு.க., தலைமையேற்று வழிநடத்தும்' என்றார்.
குஷியானான் தொண்டன். ஆனால், எதுவும் நடக்கவில்லை அல்லது முறையாக
திட்டமிட்டு நடத்தப்படவில்லை.நேற்று, கவர்னரின் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின், 'பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கவர்னரிடம் கோரினேன்; அவர் செவிசாய்க்கவில்லை' என்றும் தெரிவிக்கிறார்.
கடந்த, 2014 பார்லி., தேர்தல் நேரம். தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு திருச்சியில் நடந்தது.
விளங்காத புதிர்மேடையில் இருந்த கருணாநிதியையும், அன்பழகனையும் பார்த்து, 'வியூகம் அமைத்து தாருங்கள். ஆணையிடுவது உங்கள் பணி. அதை முடித்துக் காட்டுவது இளைஞர் அணி' என, தளபதியாக இருந்து, அரசியல் போருக்குத் தயாரான ஸ்டாலின், இப்போது, ஆட்சி அமைக்க சொற்ப சட்டசபை உறுப்பினர்களே தேவை எனும் நிலையில், கவர்னரிடம் கோரிக்கை வைத்து தவிக்கிறார்.கடந்த, 2016 நவ., 2 - தர்மபுரி மாவட்ட செயலரின் இல்லத் திருமண விழாவில், ஸ்டாலின் முன்னிலையில் பேசிய துரைமுருகன், 'இன்னும் ஆறே மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க., ஆட்சி மலர்ந்து விடும். இளைய தலைவர் தலைமையில், 2017ல், தமிழகத்தில் நல்லாட்சி அமையும்' என்றார்.ஜெ., உயிரோடு மருத்துவமனையில் இருந்ததாக சொல்லப்படும் அன்றைய நாளிலேயே, எந்த நம்பிக்கையின் அடிப்படையில், எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில், துரைமுருகன் அப்படிச் சொன்னார் என்பது, உடன்பிறப்புக்கு இன்னும் விளங்காத புதிர்!செயல் தலைவரே... 2018 பிறந்து, ஒன்பது நாட்கள் ஆகி விட்டன!

சட்டசபையும் துவங்கி விட்டது!

- வாஞ்சிநாதன்
vanjinath40@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
10-ஜன-201818:11:25 IST Report Abuse
kandhan. இந்த கட்டுரையில் ஒன்று தெளிவாக தெரிகிறது 2 ஜி வழக்கில் விடுதலை நாடு கெட்டது போங்கோ ???? கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
09-ஜன-201813:59:48 IST Report Abuse
A.Gomathinayagam மக்கள் அனைவருக்கும் தெரியும், பெரும்பான்மை இழந்த ஒரு ஊழல்வாதிகளின் ஆட்சியை மத்திய அரசு தாக்கி பிடித்து கொண்டிருக்கிறது என்பது, இதனால் தான் அந்த கட்சி தனது இரண்டு விழுக்காடு வாக்கு வங்கியையும் இழந்து நோட்டாவிற்கு கீழே சென்று விட்டது. அபரிதமான ஊழல் பணத்திற்கு மக்கள் விலை போகும் பொழுது யாராலும் ஒன்றும் செய்ய முடியாது கட்சிகளின் உண்மை தன்மை ஓர் அளவு பொது தேர்தலில் தான் தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
09-ஜன-201809:26:24 IST Report Abuse
Muthusamy Thiagarajan அருமையான கட்டுரை ஒவ்வொரு தி.முக.தொண்டனின் ஆற்றாமையை வெளிப்படுத்துவிதமான கட்டுரை.தி.மு.க மீண்டும் அரியணை ஏறவேண்டுமெனில் செயல்படாத ஸ்டாலின் பதவி விலகி செயல்படும் திறமை உள்ளவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X