மார்கழி - செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மார்கழி - செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!

Added : ஜன 11, 2018
மார்கழி - செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? - தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.


சத்குரு: மார்கழியில் கோள்களின் நிலை

ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி மிக அண்மையில் இருப்பதால் சூரிய கதிர்கள் தொடமுடியாத கோணத்தில் இருக்கிறோம். எனவே வெப்பமின்றி குளிர்ச்சியாக இப்போது இருக்கிறது.எனினும் சூரியன் நமது கோளுக்கு மிக அண்மையில் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை மிக அதிகமாக நம்மைத் தாக்கும். இதனால்தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட்டன.


கோலமிடுதல்

இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனால் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண் தன்மை நிலத்தோடு சம்பந்தமுள்ளதாகவும், பெண் தன்மையானது ஒரு பொருளின் வர்ணம் மற்றும் வெளிப்புற வடிவத்தின் மீதுதான் ஈர்ப்புடையதாகவும் இருக்கும். ஆனால் மார்கழியிலோ, பெண்கள் வீட்டு வாசலில் தரைமீது தான் வண்ண வண்ணக் கோலமிடுகிறார்கள்.


ஏன் திருமணம் செய்யக்கூடாது?

ஏனைய காலங்களில் மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி (புவி ஈர்ப்பு விசை காரணமாக) மார்கழியில், பூமியில் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இப்போது விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதைத் தவிர்க்கும் நிலை தொடர்ந்து வருகிறது. கருவுறுவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற்கொண்டு (பாலுறவைத் தவிர்த்து) வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமன்பாடு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.


பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுதல்

உடம்பிலுள்ள நீராதார நிலையில் ஏற்படும் தடுமாற்றங்களே மன சமன்பாட்டைக் குலைக்கின்றன என்பது யோகமுறையை கடைப்பிடிப்போரின் புரிதல். ஒரு தொட்டியில் நீரைத் தேக்கி அதை சற்று அசைத்தால் அந்நீர் தளும்புகிறதல்லவா? உரியமுறையில் நம் உடலை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாரம்பரியமாக இம்மாதத்தில் நீரோடு தொடர்புடைய சில பயிற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்காக நாம் பிரம்ம முகூர்த்தத்தை (காலை 3.40 மணி) தவற விடுவதில்லை. இதற்கான எளிதான பயிற்சி என்னவெனில் கோவில் தெப்பக்குளத்தில் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடுவது தான். மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது. பல சாதகர்கள் தங்களது ஆன்மிகப் பாதையில் ஓரடி முன்னே பின்னே இருக்கக்கூடும். ஏன் இப்படி என்றால், மனநிலை ஸ்திரத் தன்மைக்கு வரும் பயிற்சிகள் (சாதனா முறைகள்) போதுமான அளவு கிடையாது. அதற்கு மாற்றாக மார்கழியின் இயற்கை நிலை அவர்களுக்கு உதவி செய்யும். கோள்களின் விசை உங்களை மேல்நோக்கி உந்தும்போது நீங்கள் உள்ளுக்குள் ஸ்திரமாக இல்லையெனில் தள்ளாடுதல் போன்ற நிலைக்கு ஆளாவீர்கள். இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது. உள்நிலை திடமாக இருந்தால்தான் சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமன்பாட்டை கொண்டு வரவும் சாத்தியமாகும் காலமாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X