ஆனந்தம் பொங்கும் அறுவடைத் திருவிழா!| Dinamalar

ஆனந்தம் பொங்கும் அறுவடைத் திருவிழா!

Added : ஜன 12, 2018

மழை பொய்த்து போனாலும், தன் அயராத உழைப்பால் ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழுது சேற்றில் பயிருமிட்டு, கொளுத்தும் வெயிலில் தன் உடலை வருத்தி, காலமெல்லாம்
உழைப்பவர்கள்... இல்லையில்லை... தன்னையே விதைப்பவர்கள் விவசாயிகள்.தன் கண் இமையாய் காத்த நெற்பயிர்களை 'நாட்டு மக்களின் அன்றாட தேவைக்காக, நல்வாழ்வுக்காக இன்றும் போல் என்றும் இதேபோல் குறைவில்லா உணவிற்காக' என இறைவனை வேண்டி ஒரு நல்ல நாளில் அறுவடையை தொடங்குவார்கள் விவசாயிகள். ஒருவாரமாக நடக்கும் இத்தகைய அறுவடை திருவிழாவில் சுற்றமும், உற்றாரும் இணைந்து விழாக் கோலமாய் தங்கள் பொருட்
களையும், இன்பத்தையும் ஒருவருக்கொருவர் பங்கிட்டு ஆனந்தம் கொள்வர். ஆரவாரமிக்க, ஆனந்தம் பொங்கும் அறுவடைத் திருவிழாவே இந்த பார்வை.இவ்வளவு ஆனந்தமிக்க
திருவிழாவின் போது மட்டுமே தமிழர்கள் நினைவுக்கு வருவதுதான் கொடுமையான விஷயம். 'விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்' என்பார்கள். விவசாயி ஒருவரின் ஒரு துளி வியர்வைதான் ஒரு நெல்மணி என்பதை மனதில் வைத்து அவர்களை மதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய சலுகையை தராவிடில், நாளை நம் தலைமுறையினர் மாத்திரை உணவுகளை சாப்பிடும் அவலம் அரங்கேறி விடும்.

கடிவாளம்(காப்பு) கட்டுதல் : மார்கழி திங்கள் கடைசி நாளன்று கெட்ட சக்திகளுக்கு கடிவாளம் போடும்விதமாக நடக்கும் ஒரு நிகழ்வே காப்புக்கட்டுதல். மஞ்சள், மரிக்கொழுந்து, மாவிலை,
ஆவாரம் பூ, தும்பைப்பூ, காப்புச்செடி, பிரண்டை. இவை அனைத்தும் சேர்த்து சூரிய உதயம் போல் மகிழ்வான வாழ்வு நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் உதயமாக வேண்டும் என மனதார எண்ணி வீட்டின் கிழக்குப்புறத்தில் காப்புக்கட்டுவர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' எனும் மொழிக்கேற்ப நம்மில் குடிகொண்டிருக்கும் கெட்ட எண்ணங்களையும், பழைய மூட நம்பிக்கைகளையும் கழித்து, புதுவாழ்க்கையை இனிதாய் தொடங்க போகிறேன் என்பதற்கு சாட்சியாய் 'போகி' எனும் இந்திரனை வேண்டிக் கொண்டாடும் காப்புக்கட்டும் இந்நிகழ்வு 'போகிப் பண்டிகை' எனப் போற்றப்படுகிறது. விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்கு தேவையான சூரிய வெப்பம், தண்ணீர், காற்று என அனைத்தும் எப்போதும் தேவையான அளவு தந்து அருளும்படி தேவர்களின் தலைவன் இந்திரனை நினைத்து அறுவடைக்கு ஆயத்தப்படுத்தி தொடங்குவர்.

பொங்கும் பொங்கல் திருவிழா : மார்கழி மாதம் அறுவடை செய்த புத்தரிசி, வெல்லம், பால், பசு நெய் கொண்டு தை முதல் நாள் அதிகாலை பொங்குவார்கள். அப்படி பொங்குவதால்தான் 'பொங்கல் பண்டிகை' என்கிறோம். அத்திருநாளில் தமிழர்கள் புத்தாடை அணிந்து, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து புத்தரிசி, வெல்லம் பொங்கலிட்டு நாளும் ஒளிதரும் சூரிய பகவானுக்கு
படையலிட்டு என்றும் மங்காத ஒளியாய் வாழ்க்கை அமைய வேண்டிக்கொள்வர். பின்னர் அப்பொங்கல் உணவை அக்கம் பக்கத்தினர், உறவினருக்கு கொடுத்து மகிழ்வர். அன்று பரிதிக்கு (சூரியன்) நன்றி சொல்லும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.இயற்கை முறையில் விளைந்த புத்தரிசியும், பாலும், பசு நெய்யும் உடலுக்கு பலம் தருபவை. சிறிதாக சேர்த்தாலும் இஞ்சியின் பலனானது அதிகம். செரிமானத்தை துாண்டும். பொங்கலை சுற்றி வைக்கப்படும் கரும்பின் சுவையானது யாவருக்கும் உகந்தது. அதுமட்டுமல்ல, இஞ்சியின் காரம், கரும்பின் இனிப்பு இவை இரண்டும் சேர்ந்து பொங்கலை இனிமையாக்குவது போல் வாழ்க்கையில் இனிப்பும், காரமும் சேர்ந்து செயலாற்றினால் மட்டுமே அது இனிமையாக மாறும் என்ற தத்துவமும் அடங்கியுள்ளது.

வந்தனை செய்வோம் : அறுவடை முடிந்தாயிற்று... புத்தரிசியும் பொங்கி பரிதிக்கும் நன்றி கூறியாச்சு. அடுத்ததாக... அறுவடைக்கு உதவிய உழவனுக்கும், உழவுக்கும் உறுதுணை புரிந்த மாடுகளுக்கும், இதர கால்நடைகளுக்கும் பொங்கலின் மூலம் நன்றி கூறும் திருநாளே 'மாட்டுப்பொங்கல்'. அன்று... வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி கொம்பு களுக்கு வர்ணம் தீட்டி, அவை வசிக்கும் இடத்தை சுத்தம் செய்து, வண்ணப்பொட்டுகள் வைத்து அவற்றை 'காமதேனு'வின் அம்சமாய் கருதி, பொங்கலிட்டு மகிழ்வர்.
மேலும், அந்த மாடுகளை ஊர்வலமாக அழைத்துச்சென்று உற்சாகம் கொள்வர். மேலும்
காளைகளை கொண்டு ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க செய்வர். மாடுபிடி வீரர்களும் களத்தில் நின்று விளையாடுவர். இதனாலேயே மாட்டு பொங்கலை 'வீரத்திருநாளாய்' கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர், திருவள்ளுவரை நினைவுகூறும் விதமாய் இந்நாளை 'திருவள்ளுவர் திருநாளாக' கொண்டாடி வருகின்றனர். மஞ்சள் தண்ணீர் தெளித்து மகிழும்
நாளாகவும் உள்ளது.

சொந்த பந்தங்களின் கூட்டுறவு : தை திங்கள் மூன்றாம் நாளானது, நம் ரத்த சொந்தங்களையும்,
உறவுக்காரர்களையும் கண்டு மகிழும் 'காணும் பொங்கலாய்' கொண்டாடப்படுகிறது. அந்
நன்னாளில் உறவினர்கள் ஒன்றுகூடி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும், வெளியே செல்வதும் என வீடே உறவினர் பட்டாளத்தால் நிரம்பி வழியும். இன்று போல் என்றும் ஒற்றுமையாய் அனைவரும் ஒன்றாய் வாழ வேண்டும் என வேண்டி ஆளுக்கொரு கைப்பிடி அரிசி போட்டு பொங்கல் வைத்து உண்டு மகிழ்வர்.கரும்பு தன் கணுவில் இருந்து தன் வளர்ச்சியை தொடங்குவது போல், சொந்த பந்தங்களின் அறிமுகத்தை பந்த வளர்ச்சியை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்த காணும் பொங்கல் அமைவதால் இதை 'கணுப்பொங்கல்' எனக்கூறி கொண்டாடுவோரும் உண்டு.இன்னும் சிலர் குறிப்பாக சொன்னால், கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்லவொரு வாழ்க்கை துணை அமைய அம்மனை வேண்டி விரதமிருந்து பொங்கல் வைப்பர். கன்னிப்பெண்கள் கொண்டாடும் இப்பொங்கலானது 'கன்னிப் பொங்கல்' எனவும் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு துாரம் கஷ்டப்பட்டு உழைத்த உழவர்களும்,
உழவும் இந்த ஒருவார காலம் மட்டுமே நம் நினைவுக்கு வருகிறது என்பதுதான்
வருத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
உழவரின் பெருமை
'துாசின்றி நெல்மணியை துாற்றித்தரும்
தோழர்கட்குக்
காசில்லை
கட்டத்துணியில்லை'
அருகில் இருந்தால், எளிதாக கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது என்பதற்கேற்பதான்
மக்களின் எண்ணம் உள்ளது. ஆம்... வெளிநாட்டினர் நம் தமிழ் மொழியின் மீதும், தமிழ் பாரம்பரியம் மீதும் பற்றுக்கொண்டு நம் தமிழ்நாட்டை தேடி வந்து கற்றுக்கொள்கின்றனர். ஆனால், அவ்வாறு பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து பல மொழிகள், பல நாட்டு பாரம்பரியம் கற்றுக்
கொண்டாலும் அவர்கள் மொழியினை கலாசார பண்பாட்டை விட்டுக்கொடுப்பதும் இல்லை. விட்டு விலகுவதுமில்லை.ஆனால், நாமோ 'தமிழன்' என்ற பெயரை மட்டுமே கொண்டுள்ளோம்.
பழமையில் புதுமையை புகுத்த வேண்டுமே தவிர, பழையதை ஒதுக்கி புதுமையில் இன்பம் காணக்கூடாது.

'எங்கள் தமிழ் உயர்வென்று
நாம் சொல்லி சொல்லி
தலைமுறைகள் பல கழித்தோம்;
குறைக்களைந்தோமில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம்
வாரீர்!'
ஆம்... இந்திரனுக்காய்
போகி பண்டிகை
உழவருக்காய், சூரியனுக்காய்
பொங்கல் பண்டிகை
உழவுக்காய் மாட்டுப்பொங்கல்
உறவுக்காய் காணும் பொங்கல்
நமக்காய்... நம் தமிழுக்காய்...
உண்மையான தமிழர்
திருநாளாய் இந்த
தைப் பொங்கலை
கொண்டாடுவோம்.
- ஆர்.முத்துராஜா
எழுத்தாளர், வடுகப்பட்டி
90925 75184

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X